பிற மதங்களிலும் பிதா-குரு

பிற மதங்களிலும் பிதா - குரு

'பிதா', 'பித்ரு' என்பதிலிருந்துதான் 'father'. ஓரளவுக்கு நம்முடைய குரு ஸ்தானத்தில் வைக்கக் கூடிய வெள்ளைக்காரர்களுடைய மதகுருமார்களை - 'மதகுரு' என்னும்போது 'குரு' என்றே வந்துவிடுகிறது அப்படிப்பட்டவர்களை - அவர்களும் Father என்றே சொல்கிறார்கள். நாம் 'பாதிரி' என்கிறோம். பேட்ரே (Padre) என்ற வார்த்தையிலிருந்து வந்தது அது. 'பேட்ரே' என்பது போர்ச்சுகீஸிய பாஷை. அதற்கும் 'அப்பா' என்றுதான் அர்த்தம். இங்க்லீஷ்காரர்களுக்கும், ஃப்ரெஞ்சுக்காரர்களுக்கும் முன்னாடியே போர்ச்சுகீஸியர்கள் இந்தியாவுக்கு வந்து அடி - தடி கொள்ளை எல்லாம் நடத்தி ஊரைப் பிடித்திருக்கிறார்கள். சர்ச்சுகளும் கட்டி மதமாற்றம் செய்திருக்கிறார்கள். அதனால் அவர்கள் பாஷையில் மதகுருவுக்குச் சொன்ன 'பேட்ரே'யை வைத்துத் தமிழ் 'பாதிரி' உண்டாயிற்று. Father, Padre எதுவானாலும் மூலம் ஸம்ஸ்க்ருத 'பித்ரு'தான்!ஐரோப்பிய மொழிகளுக்குள் ஒன்றுக்கொன்று வார்த்தைகள் திரிந்து வரும். மெட்றாஸில் ஸெய்ன்ட் தாமஸ் மவுண்ட் இருக்கிறது, ஸாந்தோம் என்னும் இடம் இருக்கிறது. இங்க்லீஷில் 'ஸெய்ன்ட் தாமஸ்' என்கிறதேதான் போர்ச்சுகீஸில் 'ஸான் தோம்'. ஃப்ரெஞ்சுக்காரர்களை Frank என்பது. அது நாளாவட்டத்தில் எல்லா ஐரோப்பியர்களையும் குறிப்பதாக நம் தேசத்தில் ஆகிவிட்டது. வட இந்தியாவில் ஃபீரங்கி என்றும் நம் பக்கத்தில் பறங்கி என்றும் ஆயிற்று. அதனால்தான் ஸெய்ன்ட் தாமஸ் மவுன்டைப் பறங்கிமலை என்று சொல்வதாயிற்று. சிதம்பரத்திற்குப் பக்கத்தில் ஸமுத்ரக் கரையோரத்தில் பறங்கிப்பேட்டை இருக்கிறது. அதை Porto Novo என்கிறார்கள். அப்படியென்றால் புதிதான துறைமுகம் என்று போர்ச்சுகீஸில் அர்த்தம். அந்த தேசத்துக்காரர்கள் அங்கே புதுசாகத் துறைமுகம் கட்டிக் கொண்டு ஸெட்டில் ஆனபோது அப்படிப் பேர் வைத்தார்கள்.....

குருவைப் பிதா என்கிற மாதிரியே Father, Padre.

ஆனால் இந்த (நம்) நாட்டில் பிறந்த ஜைன - பெனத்த மதங்களைத் தவிர மற்ற எந்த மதத்திலும் நம்முடைய குரு - சிஷ்ய ஸம்பந்தம் - குரு - சிஷ்யர்களுடைய அத்யந்த பாந்தவ்யம் - மாதிரி இருப்பதாகச் சொல்வதற்கில்லை. உபதேசம் என்று குரு - சிஷ்யனுக்குப் பண்ணி ஸம்ப்ரதாய பூர்வமாக வந்திருக்கிற தம்முடைய மந்த்ர சக்தியை அவனுக்குள்ளே செலுத்துவது, அவன் வாழ்க்கைக்கே தாம் ஜவாப் ஏற்றுக்கொண்டு அவனை மோக்ஷம் வரையில் கொண்டு நிறுத்துவது, அதே மாதிரி சிஷ்யனும் குருவே கதி என்று சரணாகதி பண்ணி, அவரையே தெய்வமாக நினைத்து ஸகல கைங்கர்யமும் செய்வது என்று மற்ற மதங்களில் தற்போது பிரபலமாக இருக்கிற பிரிவுகளில் பார்க்க முடியவில்லை. துருக்க (இஸ்லாமிய) மதத்தை சேர்ந்தவர்களில் மூர்ஷித் என்பவரை குரு ஸ்தானத்திலும் மூரித் என்பவரை சிஷ்ய ஸ்தானத்திலும் சொல்லலாமென்று அந்த மதஸ்தரொருவர் சொன்னார். ஆனால் அது அவர்கள் ஸமுதாயத்திலே நம் தேசத்தில் மாதிரி வியாபகமாக இல்லை என்றும் சொன்னார்...

வெளி லோகத்தில் அப்பா - பிள்ளை பாந்தவ்யம் மாதிரி உள்லோகத்தில் குரு - சிஷ்யர் என்று ஏற்பட்ட பெருமை நம்முடைய வைதிக கலாசாரத்திற்கே விசேஷமாக உரியது. ஓரளவுக்கு நம்முடைய குரு ஸ்தானத்திற்கு ஸமதையாக

வரும் மதபோதகரை, மஹானை மற்ற ஸம்பிரதாயங்களிலும் தகப்பனாராகச் சொல்கிறார்கள் என்று சொல்ல வந்தேன். துருக்கர்கள் அப்படிப்பட்டவரை 'பாபா' என்கிறார்கள், அவர்களுடைய நீண்டகால இன்ஃப்ளூயென்ஸால் வடதேசத்தில் ஹிந்துக்களும் அநேக 'பாபா'க்களைச் சொல்கிறார்கள். அதற்கும் 'அப்பா' என்றுதானே அர்த்தம்.

ஜூக்கள் - அதாவது யுதர்கள் - ராபி (rabbi) என்கிறார்கள். அது 'rabh' என்ற ரூட்டிலிருந்து வந்த வார்த்தை என்றும, ¢ 'ரப்ஹ்' என்றால் பெரிசு, பெருமை பொருந்தியது என்றும் சொல்கிறார்கள். ஸம்ஸ்க்ருத 'ப்ருஹ்' - 'ப்ரஹ்'தான் 'ரப்ஹ்' ஆகியிருப்பது, ப்ரஹ்மம் என்று ஸாக்ஷ£த் பரமாத்மாவைச் சொல்கிறதும் அதுவே எல்லாவற்றிலும் 'பெரியது' என்பதால்தான். பெரியதிலும் பெரியது, ஸகலத்தையும் தனக்குள்ளே அடக்கிக் கொண்டுள்ள மஹா பெரியது அதுதானே? அந்தப் பெரியதைச் சொல்கிற, நமக்கு உபதேசிக்கிற வேதத்திற்கும் 'ப்ரஹ்ம' என்று பேர் உண்டு. 'குரு' என்னும் வார்த்தைக்கும் 'பெரியவர்' என்றுதான் அர்த்தம். அதனால் யூதர்கள் தங்களுடைய சாஸ்த்ர விதிகளைச் சொல்லும் டால்முடை (Talmud -ஐ) உபதேசிப்பவரை 'ராபி' என்பதும் அடிப்படையில் லோகம் பூராவிலும் வைதிக கலாசார எண்ணப்போக்கு இருந்திருப்பதையே காட்டுகிறது.

ப்ரச்நோபநிஷத் என்று இருக்கிறது. அதன் முடிவிலே உபதேசகரான ரிஷியிடம் உபதேசம் பெற்ற சிஷ்யர்கள், "எங்களை அவித்யையின் (அஞ்ஞானத்தின்) அக்கரைக்கு கடத்துவித்ததால் தாங்களே எங்களுடைய பிதா" என்று சொல்லி நமஸ்கரித்ததாக வருகிறது. ஸரியாகச் சொன்னால் "த்வம் U ந:பிதா" என்று மூலத்தில் வருகிறதற்கு "நீங்க-ன்னா (நீங்களன்றோ?) எங்க அப்பா?" என்று அர்த்தம். 'அப்பா என்று நடைமுறையில் சொல்கிறவர் நிஜத்தில் அப்படியில்லை. நீங்கள்தான் நிஜ அப்பா' என்று உள்ளர்த்தம். ஏனென்றால் அந்த அப்பா சாகிற ஜன்மாவைத்தான் கொடுத்தார். அப்படிப் பல ஜன்மாக்களில் பல அப்பாக்கள் இருந்திருக்கிறார்கள். அதனால் அவர்களை எப்படி நிஜ அப்பா என்பது? இவர்தான் சாகாத ஜன்மாவை, அம்ருதமாக (அ-ம்ருதம் மரணமில்லாதது) உள்ள ஆத்மாவாகிற சாச்வத ஜன்மாவை ஒருத்தரேயாக அளிப்பவர். அவர்கள் (பல பிறவிகளில் வாய்த்த பிதாக்கள்) சாகிற ஜன்மாவைத் தந்தால் இவரோ ஜன்மாவையே சாக வைத்து விடுகிறார் சாச்வத பதம் கொடுக்கிறார். இங்கே ஆசார்யாள் பாஷ்யத்திலே, "ஸமுத்ரத்தின் அக்கரைக்குப் படகோட்டிக் கொண்டு போகிறது போல, ஜன்மம் - ஜரா (மூப்பு) - மரண - ரோக - துக்கம் முதலான முதலைகள் நிறைந்திருக்கும் அஜ்ஞான ஸம்ஸார ஸாகரத்திலிருந்து ஞானம் என்ற படகால் புனர்ஜன்மாவிலிருந்து பரிபூர்ண விடுதலை பெறுவதான மோக்ஷத்திற்கு குரு கடத்துவிப்பதால், மற்ற பிதாக்களைவிட இவருக்கே பித்ருத்வம் சொல்வது ரொம்பவும் பொருத்தம். லோக வ்யவஹாரத்தில் ஜன்மா தரும் பிதாவுக்குத்தான் பூஜிக்கத்தக்க சிரேஷ்டர்களில் முதலிடம் தருவது. அப்படியென்றால் பரிபூர்ணமான அபயநிலையைத் தருகிற குருவை என்ன தான் சொல்லக்கூடாது?" என்கிறார். அபயநிலை என்றால் அத்வைத ஸ்திதிதான். 'பயம்' என்றால் த்வைதம். அதைப் பற்றிச் சொல்ல நிறைய

இருக்கிறது. இப்போது வேண்டாம். எல்லோருக்கும் தெரிந்தது, 'பவபயம்'. பவம்

என்றால் ஸம்ஸாரம் - இஹலோக வாழ்க்கைத் தொடர். அது த்வைதம். அதோடு 'பயத்தைச் சேர்த்தே 'பவபயம்' 'பவபயம்' என்கிறது. அப்போது அபயம் அத்வைதந்தானே? அதையே அடைவிப்பவர், அநுக்ரஹிக்கிறவர் குரு என்றால் அவர் மஹிமையை என்ன சொல்வது?

பிதா, குரு என்ற வார்த்தைகளை ஒரே ஆஸாமிக்குச் சொல்வதுண்டு என்று காட்ட வந்தேன். பிதாவை குரு என்று சொல்வதே லோக வ்யவஹாரம். (அதற்கு) வித்யாஸமாக குருவை, "நீதான் நிஜ அப்பா" என்று சிஷ்யர்கள் - அந்த சிஷ்யர்கள் ஒவ்வொருத்தருமே குரு ஸ்தானம் வஹித்த பெரியவர்கள், அப்படிப்பட்டவர்கள் - சொல்லியிருப்பதாக உபநிஷத்திலிருந்து காட்டினேன்.

கம்பர் மாதிரியான பெரியவர்கள் வைதிக ஒளபநிஷத ஸம்பிராயத்தையே பின்பற்றி, அந்த வேத - உபநிஷத அபிப்ராயங்களை ஸமயம் வாய்க்கிற இடத்திலெல்லாம் தங்களுடைய தமிழ் நூல்களில் எடுத்துச் சொன்னவர்கள். பிறப்பித்த அப்பா பேருக்குத்தான் அப்பா, நிஜ அப்பாவாகப் பிள்ளையை நல்ல ரூபப்படுத்தி வளர்க்கிறது ஆசார்யன்தான் என்று நாம் பார்த்துக் கொண்டிருந்த அபிப்ராயத்தைக் கம்பர் ஸ்ரீ ராமசந்திர மூர்த்தி ஸம்பந்தப்படுத்தியே சொல்லியிருக்கிறார். தநுஸை நாணேற்றுவதற்காக யுவாவாக இருந்த ராமரை ஜனகருடைய ராஜ ஸதஸுக்கு அழைத்துக்கொண்டு போன விச்வாமித்ரர் ஜனகருக்கு ராமரை அறிமுகப்படுத்துகிறார். அப்போது அவருடைய ஸ¨ர்யவம்சப் பெருமையில் ஆரம்பிக்கிறார். அந்த வம்சத்தை ஆரம்பித்து வைத்த ஸ¨ர்யனிலிருந்து மநு, ப்ருது, இக்ஷ்வாகு, ககுத்ஸன், மாந்தாதா, CH, பகீரதன், ரகு என்று எல்லாப் பூர்விகர்களின் பெருமையை பற்றிச் சொல்லி, தசரதனின் பெருமையில் முடித்து, அந்தத் தசரதன் புத்ரகாமேஷ்டி பண்ணிப் பிறந்த பிள்ளையாக்கும் ராமர் என்று சொல்கிறார். அந்த இடத்தில்தான் நாம் இதுவரை பார்த்துக்கொண்டிருந்த விஷயத்திற்கு வருகிறார். "ராமாதிநாலு ஸஹோதரர்களும் தசரதனுக்குப் பிள்ளை என்கிறது பெயரளவில்தான் - 'புதல்வர் எனும் பெயரே காண்!' ஆனால் அவர்களை வளர்த்தது, அதாவது ரூபம் பண்ணினது வஸிஷ்டர்தான் - 'உபநயன விதி முடித்து, மறை ஓதுவித்து வளர்த்தோன் வசிட்டன் காண்' என்று அவர் சொன்னதாகக் கம்பர் பாடியிருக்கிறார்.


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is குருவுக்கும் தந்தைத்தன்மை உண்டு
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  பித்ருவம்சமே குருவம்சமாகவும்
Next