'விஷ்ணு', 'வாஸுதேவ' பத விளக்கம்

'விஷ்ணு', - 'வாஸுதேவ' பத விளக்கம்

உகாரம் விஷ்ணு என்று சொன்ன மூச்சோடயே அந்த விஷ்ணுவை அவ்யக்தம், அதாவது, ஸாட்சாத் பரப்ரஹ்மம் என்று சொல்லியிருக்கிறது, உகாரோ விஷ்ணுரவ்யக்த:

ருத்ரன், அப்புறம் மஹேச்வர - ஸதாசிவர்கள் என்று நான் சொன்னேனே, அந்த எல்லோரையும் அடக்கிக் கொண்டிருக்கும் ப்ரஹ்மமாக விஷ்ணுவையே இங்கே காட்டிக் கொடுத்திருக்கிறது. முதலில் அகாரமாக வந்த ப்ரம்மாவும் அவருக்குள் அடக்கம்தான். இவருக்குப் பிள்ளைதான் அவர் என்பது எல்லாருக்கும் தெரிந்ததுதானே?

த்ரிமூர்த்திகளில் மஹா விஷ்ணு, பரமேச்வரன் ஆகிய இரண்டு பேரையுமே பரப்ரஹ்ம ஸ்வரூபமாகச் சொல்கிற வாக்கு தொன்றுதொட்டு இருந்திருக்கிறது. வழக்கிலே இப்படி இருக்கக் காரணம், சொந்த அநுபவத்திலே அநேக மஹான்கள் அப்படி ஸாட்சாத்தாகக் கண்டு கொண்டதுதான், தாங்கள் கண்டு கொண்டதை அவர்கள் மந்த்ரமாகவும், ஸ்தோத்ரமாகவும், உபசேத வசனமாகவும் லோகத்துக்குச் சொன்னதுதான்.

'விஷ்ணு' என்பதற்கு நேர் அர்த்தம் - அந்த அட்சரங்களை தாது பிரித்துச் சொல்கிற root meaning -'ஸர்வ வியாபகமாக இருக்கிற தன்மையன்' என்பது. விஷ்ணு என்பதற்கு 'வ்யாபன சீலமுள்ள, அதாவது எங்கேயும் வியாபிக்கிற தன்மை கொண்ட ப்ரஹ்மம், பரமாத்மா, வாஸுதேவன் எனப்படுகிறவன்' என்று ஆசார்யாள் பாஷ்யம் பண்ணியிருக்கிறார். வாஸுதேவன் ஏன்று ஏன் குறிப்பிட்டுச் சொன்னாரென்றால் அந்தப் பெயரும் ஸர்வ வ்யாபத்தைச் சொல்வதுதான். (விஷ்ணு) ஸஹஸ்ர நாமத்தில் வாஸுதேவ நாமாவுக்கு ஆசார்யாள் பாஷ்யம் பண்ணும் போது இதைத் தெளிவுபடுத்தியிருக்கிறார். 'வாஸு' என்பதற்கு 'வஸதி, வாஸயதி, ஆச்சாதயதி ஸர்வம்' என்று அர்த்தம் கொடுத்துத் தெளிவுபடுத்தியிருக்கிறார். ஸகல வஸ்துக்களிலும் ஸ்வாமி வஸிப்பது 'வஸதி'. ஸகல வஸ்துக்களும் அவருக்குள் வஸிக்குமாறு, அதாவது நிலை பெறும்படி, இருப்பதால் 'வாஸயதி'. இப்படிச் சொன்னால் ஸர்வ வ்யாபகம் என்றுதானே ஆகிறது? ஆனாலும் அந்த வ்யாபகமான பரப்ரஹ்மம் நமக்குத் தெரியாது, வெளிப்படாத அவ்யக்தமாக இருக்கிறது. அதைத்தான் 'ஸர்வம் ஆச்சாதயதி' என்கிறார். 'ஆச்சாதயதி' என்றால் மூடி மறைப்பது. மாயையினால் உண்மைத் தத்வத்தை மூடி மறைப்பது. மறைவாக இருப்பது அவ்யக்தந்தானே?

வேத மரபில் வராத எதையும் ஸொந்தமாகச் சொல்லாத விநயசீலர் நம் ஆசார்யாள். 'தாமாகச் சொன்னதாக இருக்கக்கூடாது, இதுவே ஸத் ஸம்பிரதாயத்தில் வந்துள்ள கருத்து' என்று காட்டுவதற்காக அவர் எல்லா இடத்திலும் பூர்வ சாஸ்திரங்களை மேற்கோள் காட்டுவார். அப்படி இங்கே மஹாபாரதத்திலிருந்தும் விஷ்ணு புராணத்திலிருந்தும் காட்டியிருக்கிறார்.

ஸர்வ வியாபகம் என்கிறபோது, 'நமக்குத் தெரிவது, அதாவது வெளிப்படத் தெரிவது - வ்யக்தமாக இருப்பது - அந்த ஸர்வந்தான், அந்த ஸர்வத்தையும் வ்யாபித்திருக்கிற வஸ்து நமக்கு வெளியாகாத அவ்யக்தமாக இருக்கிறது' என்பது

தொக்கி நிற்கிறது. யோஜித்துப் பார்த்தால் புரியும். ஒரு வஸ்து குறிப்பிட்ட ஒன்றாக இருக்கிறது என்கிறபோது தான் அது வெளிப்படத் தெரிவது - அந்த ஒன்றாக அப்படி இல்லாமல் ஸர்வத்திலேயும் வியாபித்திருக்கிறது என்றால் அப்போது அந்த ஸவ்ரமான வெளிப்படத் தெரிகிற வ்யக்தமாக இருக்கும், அத்தனையையும் வ்யாபித்திருப்பது அவ்யக்தமாகவே இருக்கும். ஒரு டம்ளர் ஜலம் பூராவிலும் சர்க்கரை கரைந்து வியாபித்திருக்கும் போது அது அவ்யக்தமாகத்தானே இருக்கிறது?

அந்த அவ்யக்தமான மறை பொருளே - இரண்டு விதத்தில் மறைபொருள்!மறைந்திருப்பதால் மறைபொருள், மறையாகிற வேதத்தின் உட்பொருளாக இருப்பதாலும் மறைபொருள் அப்படிப்பட்ட மறைபொருள்தான் - விஷ்ணு. அந்த விஷ்ணுவின் அட்சர ஸ்வரூபமே உ. உகாரோ விஷ்ணுரவ்யக்த:.

ஸித்தி தருகிற க, பாபத்தைப் போக்கிப் பரிசுத்தப் படுத்துகிற ர ஆகிய இரண்டோடும், விஷ்ணுவாகவும் அவ்யக்தாகவும், விஷ்ணுவான அவ்யக்தமாகவும் உள்ள உ சேர்ந்து 'குரு' என்ற வார்த்தை உண்டாகியிருக்கிறது - இப்படி ச்லோகம் சொல்கிறது.

'விஷ்ணுவாக' என்கிறதற்கு 'ஸர்வ வ்யாபகமாக' என்று அர்த்தம் பண்ணும்போது 'ஸர்வம்' என்ற இந்த நானாப்ரபஞ்சம் இருக்கிறது, இதில் அந்தர்யாமியாக அவன் வியாபித்திருக்கிறான் என்று ஆகிறது. இதில் விசிஷ்டாத்வைதம் வந்து விடுகிறது. அந்த விஷ்ணுவை 'அவ்யக்தம்' என்கிறபோது நிர்குண ப்ரஹ்மம் என்றே ஆகும். அது அத்வைதம். உபதேசம் த்வைத அநுபவத்திலேயே இருக்கிற நமக்குத்தான் என்பதால் த்வைதமும் வந்து விடுகிறது


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is 'அவ்யக்தம்' என்பது என்ன?
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  குருவின் தன்மையால் சீடன் பெறும் பயன்
Next