தாம் இவ்விஷயம் சொல்வதன் விசேஷம்

தாம் இவ்விஷயம் சொல்வதன் விசேஷம்

இதை வேறே யார் சொல்வதைவிடவும், நான் சொன்னால் அழுத்தமாகப் பதியும் என்று தோன்றியதால் விஸ்தாரம் பண்ணினேன். இப்படிச் சொல்கிறபோது நானே அஹங்காரம் கொண்டாடிக் கொள்கிறேனோ என்ன? அதில்லை அர்த்தம். ‘ஸ்தான’த்தை நினைத்துத்தானே இந்த ஸமத்வ-ஸ்வதந்திர-ஸ்வய மரியாதை கோஷமெல்லாம் கிளம்பி, கோஷம் யுத்தமாகவே ஆகி மரியாதைப் பண்பை, விநய குணத்தை விரட்டி வருகிறது? இந்த ஸந்தர்ப்பத்திலே, ‘இதை விடவோ இதற்கு ஸமமாகவோ ஒரு ஸ்தானமில்லை’ என்கிற உச்சிக்கு ஏதோ விதி வசத்தினால் தூக்கிப் போடப்பட்ட ஒருத்தன், ‘தான் யாருக்கும் மரியாதை பண்ணத் தேவையில்லை’ என்பதில் நிறைவு காணாமல் ‘மரியாதை செலுத்தத் தனக்குச் சான்ஸே இல்லையே! இப்படியும் ஒரு ஜன்மாவா?’ என்று ரொம்பவும் குறைந்துதான் கொள்கிறான் என்பது லோகத்திற்குத் தெரிந்தாலே அதற்கு விநயத்தின் அவச்யம் ஆழமாக மனஸில் தைக்கும் என்றுதான் சொன்னது.

எனக்குக் கிடைக்காத, கிடைப்பதற்கில்லாத நமஸ்கார பாக்யத்தை நீங்களெல்லாம் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு ச்ரேயஸ்களை அடைவதற்காக நானும் அந்த நாராயணனை ‘நமோ நம:’ என்று நமஸ்காரம் பண்ணுகிறேன்.