விதி விலக்கு * இப்படி இப்படி

விதி விலக்கு *

இப்படி இப்படி நமஸ்கரிக்க வேண்டும்; அதில் இத்தனை அர்த்தமிருக்கிறது; அது இவ்வளவு பலனைக் கொடுக்கிறது என்று நான் விஸ்தாரமாய் சொல்வதைக் கேட்டுவிட்டு சரீர உபாதி காரணமாக அப்படிப் பண்ண முடியாதவர்களும் தங்களை வருத்திக் கொண்டு அப்படிப் பண்ண வேண்டும் என்றில்லை. அவர்கள் மானஸீகமாக அப்படிப் பண்ணினாலே போதும். ஸ்தூலமாகப் பண்ண முடியாத அவர்களுக்குத்தான், ‘பண்ண முடியலியே’ என்ற feeling நமஸ்காரம் பண்ணுகிறவர்களின் பக்தியையும்விட ஜாஸ்தியாக ஏற்படும். அந்தத் தாபத்தில் தாங்கள் பண்ணும் மானஸிக நமஸ்காரத்தை நன்றாக உணர்ந்து பண்ண முடியும். ஸ்தூலமாகப் பண்ணுபவர்களுக்கே ‘மெகானிக’லாகவும் போய் விடுகிறது போல் அவர்களுக்கு இருக்கவே இருக்காது. ‘மெகானிகல்’ என்றால் உடம்புதான் இந்தக் கார்யத்தில், மனஸ் வேறே எங்கேயோ என்றுதானே அர்த்தம்? நமஸ்காரமே மானஸிகம் என்கிறபோது மனஸ் அதிலேயே ஒருமைப்பட்டுத்தானே ஆக வேண்டும்?

ஆயிரம் பேர், பத்தாயிரம் பேர் என்று கூட்டம் சேர்ந்தால் ஒவ்வொருவரும் எப்படி விழுந்து நமஸ்காரம் பண்ண முடியும்? இந்த மாதிரி ஸந்தர்ப்பங்களிலும் மானஸிகமாகப் பண்ணினாலே போதும்.

எந்த விதி இருந்தாலும், ந்யாயமான காரணங்களுக்காக அதற்கு விலக்கும் உண்டு என்பதற்காகச் சொன்னேன்.

*இவ்வறிவுரையை கேட்டோரில் உடற்பிணி காரணமாகக் குனிந்து நமஸ்காரம் செய்யவியலாத ஒருவரைக் கண்டதில் கருணா மூர்த்தியான ஸ்ரீசரணர் அருளியது இப்பகுதி.