தற்கால நிலைமையில் அவசியமானது; பொருளாதா

தற்கால நிலைமையில் அவசியமானது; பொருளாதாரத்திற்கு அருளாதாரத்தால் வரம்பு

’நமஸ்கார மாஹாத்ம்யம்’ ஸவிஸ்தாரமாகச் சொல்லி விட்டேன். இந்த ‘டாபிக்’ எதற்காக எடுத்துக் கொண்டேனென்றால், வர வர ஜனங்களிடம் விநய குணம், பணிவு, பவ்யம் என்பது குறைந்து கொண்டே வருகிறது. அப்படி ரொம்ப வருத்தப்படும்படியாக இன்றைக்கு ஒருத்தர் ஒன்று சொன்னார். அதைப் பற்றியும், அதற்கு மாற்று மருந்து பற்றியும் யோஜனை போயிற்று. அதைத்தான் தெரிவிக்க நினைத்துப் பேசினேன்.

என்னவென்றால்: ஸமத்வம், ஸ்வதந்திரம், ஸ்வய மரியாதை என்றெல்லாம் ரொம்பவும் முழக்க ஆரம்பித்த நாளாகவே விநய ஸம்பத்துக்கு ஹானி ஏற்பட ஆரம்பித்து இப்போது ஒரே முரட்டுத்தனத்திலும் அடங்காமையிலும் கொண்டு விட்டிருக்கிறது. Right, right என்று கிளம்பியதில் ஒரே fight ஆகியிருக்கிறது! ஸமூஹ வாழ்க்கை, பொருளாதாரம் என்று பார்த்தால் இந்தப் புதுக் கொள்கைகளிலும் ஓரளவு ந்யாயம் இல்லாமலில்லை. இதை ஆக்ஷேபிக்காமல் ஒப்புக் கொள்கிறேன். ஆனாலும், எதற்கும் ஒரு அளவு, வரம்பு இல்லையா? அந்த அளவு மீறாமல் வரம்பு கட்டிப் புதுக் கொள்கைகளை அமல்படுத்தினால் எல்லாம் அதனதன் இடத்தில் சீராக இருந்து, இப்போதுள்ள ஓயாத வர்க்கப் போராட்டங்கள் ஓய்ந்து லோகத்தில் சாந்தியும் ஸெளஜன்யமும் ஐக்கியமும் ஏற்படும்.

எப்படி அளவுபடுத்துவது, வரம்பு கட்டுவது என்றால் ஸமூஹம் முழுவதிலும் மறுபடி விநயஸம்பத்தை விருத்தி பண்ணுவதால்தான். பொருளாதாரம் மட்டும் ஒரு வாழ்க்கைக்குப் பூர்ணத்வம் தந்து விடுமா என்ன? ஒரு நாளும் இல்லை. அருளாதாரத்தைப் பிடித்து அதனால் இதை அளவுபடுத்தினால்தான் பூர்ண வாழ்வின் நிறைவு ஏற்படும். அந்த அருளாதாரத்தைப் பிடிக்க வழி விநயந்தான். விநயத்தை வரவழைக்க வழி? அது வேண்டும் என்ற ‘பேஸிக்’ எண்ணத்தோடு பெரியவர்களாக இருக்கப்பட்டவர்களைத் தேடிப் போய் விழுந்து நமஸ்காரம் பண்ணுவதுதான். இந்த க்ரியையே ‘பேஸிக்’காக, பேஸ்மென்டாக அடிமட்டத்தில் இருந்ததைப் பெரிய மாளிகையாக எழுப்பிக் கொடுத்து விடும்..

இந்த தேசத்தில் காலம் காலமாக வந்திருக்கிற மரபின் சக்தி விசேஷத்தால் எப்பேர்ப்பட்ட தன்மான சூரரானாலும் ஸரி, கொஞ்சம் மனஸு வைத்து விட்டால் தானாக அந்த ‘பேஸிக்’ மனோபாவம் ஏற்பட்டுவிடும்.

இப்பவுங்கூட அந்த மனோபாவம் அஸ்தமித்தே போய்விடவில்லை. அடி தளத்தில் இருந்துகொண்டே தானிருக்கிறது. ‘அவரவரும் அவரவர் இஷ்டப்படி; யாருக்கும் கீழ்ப்படியக்கூடாது’ என்றிருக்கிற ஸ்வதந்திர யுகம் இது. ஆனாலும் யாரைப் பார்த்தாலும் ஏதோ ஒரு ஸ்வாமி, எவரோ ஒரு ஸ்வாமியார் என்று போய்க் காலில் விழுந்து கொண்டிருப்பதாகத்தான் தெரிகிறது. இல்லாவிட்டால், தங்களுக்குப் பிடித்த தலைவர், (சிரித்து) ஸினிமா ஸ்டார், (மேலும் சிரித்து) கிரிக்கெட் ஸ்டார் – இப்படி எவரையாவது ஸ்வாமியாக ஆக்கி நமஸ்காரம் பண்ணுவதாகத் தெரிகிறது! நாஸ்திகர்கள், தன்மானக்காரர்கள் என்கிறவர்கள்தான் தலைவர்கள் என்கிறவர்களுக்கு ஏகமாக நமஸ்காரமாகப் பண்ணி, ஒரே புகழாரமாகப் பேச்சுத் திறமையில் சூட்டி, பாகவதம் சொன்னபடி ‘ப்ரணாம்’த்தோடு ‘நாம ஸங்கீர்த்தன’மும் செய்கிறார்கள் என்று தெரிகிறது!

ஆகக்கூடி, இந்த மண்ணிலே பிறந்த வாசி எல்லாருக்கும் நமஸ்காரம் பண்ணுவதில் ருசி உள்ளுக்குள்ளே இருந்து கொண்டுதானிருக்கிறது. அதை ஸரியான பாத்திரங்களுக்குச் ‘சானலைஸ்’ பண்ணுவதுதான் செய்ய வேண்டியது.

அதற்கு அந்த நாராயணனே வழி திறந்து விட வேண்டும்.