ப்ரதக்ஷிணத்திற்குப் பின் செய்யும் நமஸ

ப்ரதக்ஷிணத்திற்குப் பின் செய்யும் நமஸ்காரம்

ப்ரதக்ஷிணம் முடித்தவுடன் கீழே விழுந்து நமஸ்காரம் பண்ணவேண்டும். ‘ப்ரதக்ஷிண நமஸ்காரம்’ என்றே சொல்வது. அந்த நமஸ்காரத்தை எந்தத் திசை பார்த்துச் செய்வது என்று விதி உண்டு.

கிழக்கும் மேற்கும் பார்த்த ஸ்வாமிகளுக்கு வடக்கு முகமாகவும், வடக்கும் தெற்கும் பார்த்த ஸ்வாமிகளுக்குக் கிழக்கு முகமாகவும் நமஸ்காரம் செய்யவேண்டும். அதாவது தெற்கு முகமாகவும், மேற்கு முகமாகவும் நமஸ்காரம் பண்ணப்படாது.

பொதுவாகவே மனிதர்களுக்குக்கூட ப்ரதக்ஷிணம் பண்ணாமலே நமஸ்கரிக்கிறபோது தெற்குப் பார்க்கவோ, மேற்குப் பார்க்கவோ பண்ணாமல், கிழக்கு அல்லது வடக்குப் பார்க்கவே பண்ணவேண்டும்.

ஒரு முக்யமான விஷயம். ஒரு கோவில் என்றிருந்தால் அதிலிருக்கும் அநேக ஸந்நிதிகள், கோஷ்டங்கள் முதலியவற்றிலுள்ள எந்த மூர்த்திக்கும் அந்த இடத்திலேயே கீழே விழுந்து நமஸ்காரம் கூடாது. கைகூப்பித்தான் அஞ்ஜலி. ஏன் இப்படியென்றால், கோவிலில் அநேக மூர்த்திகள் ஒவ்வொரு திசை பார்த்துக் கொண்டிருப்பதால் ஒன்றுக்கு எதிரே விழுந்து நமஸ்காரம் பண்ணினால் இன்னொரு மூர்த்திக்கு எதிரே காலை நீட்டிய அபசாரம் ஸம்பவித்து விடும். ஆகவே கொடிமரம் என்கிற த்வஜ ஸ்தம்பத்தைத் தாண்டி மூலவருக்குப் பக்க வாட்டமாக மட்டுமே விழுந்து நமஸ்காரம் செய்யவேண்டும். மூல மூர்த்திக்கு அப்படிப் பண்ணினால் அதுவே அவரது பரிவார மூர்த்தியாக இருக்கப்பட்ட மற்ற எல்லா மூர்த்திகளுக்கும் சேர்ந்துவிடும். ‘மூலம்’ என்கிற வேரில் விடுகிற ஜலம் எல்லாக் கிளைகளுக்கும் போய்ச் சேர்ந்து விடுகிற மாதிரி! ஆனால் கோவிலுக்குள்ளேயே தனியாக ஒரு கொடி மரத்துடன் ஒரு ஸந்நிதி இருந்தால் அங்கே அந்த மூர்த்திக்கு விழுந்து நமஸ்கரிக்கலாம்; தப்பேயில்லை. பெரும்பாலும் அம்மன் ஸந்நிதிகள் ‘அம்மன் கோவில்’ என்றே சொல்லும்படியாக அப்படி இருக்கின்றன.

இன்னொரு முக்யமான விஷயம்: ப்ரதக்ஷிணம் ரொம்ப ரொம்ப மெதுவாகப் பண்ண வேண்டும் என்று விதி. பூர்ணகர்ப்பிணியான ஒரு ஸ்த்ரீ விளிம்பு வரை எண்ணெய் உள்ள ஒரு கிண்ணம் வழியாமல் நடக்கணும் என்றால் எப்படிப் போவாளோ அப்படி அடி அடியாக மெதுவாக வைத்து, ப்ரதக்ஷிணம் பண்ணணும் என்பார்கள். அப்படிப் போனால்தான் பகவத்பரமாகவே சித்தத்தை ஒருமுகப்படுத்த முடியும். ப்ரதக்ஷிணம் நடை வேகமானால், சித்தமும் விருவிருவென்று ஓடும்; நானாதிசையும் ஓடும். இது ஒரு காரணம்.

முக்யமான காரணம், முன்னேயே சொன்னதுதான். சக்தியின் சலனத்திலேயே சிவனுடைய சாந்தத்தை இழைத்துப் பூர்த்தி பண்ணுவது என்றேனே, அது. ப்ரதக்ஷிணம் என்று சலிக்கிறபோதே அதை மந்தகதியில் பண்ணுவதென்றால் அந்த மந்த கதி சாந்தந்தானே?

அசேதன க்ரஹங்களின் அப்ரதக்ஷிணத்துக்கு மாறாகத்தான் சேதன ஜீவன் பண்ண வேண்டுமென்பதாலேயே அவன் ப்ரதக்ஷிணமாகப் போவது என்றேன். அதே ந்யாயப்படி, க்ரஹங்கள் அஸுர வேகத்தில் சுற்றுவதாலும் நாம் மெதுவாகத்தான் பண்ணணும் என்றும் வைத்துக் கொள்ளலாம்.