அஞ்ஜலி வகைகள் அஞ்ஜலியைப் பற்றி பேச்சு வந்ததில் ஒற்றைக் கை அஞ்ஜலி முறை வந்து சேர்ந்தது தன் நெற்றியிலே

அஞ்ஜலி வகைகள்

அஞ்ஜலியைப் பற்றி பேச்சு வந்ததில் ஒற்றைக் கை அஞ்ஜலி முறை வந்து சேர்ந்தது. தன் நெற்றியிலேயே கை வைத்துப் போடும் ஒற்றைக்கை ஸல்யூட், தன்னுடைய ஒரு கையால் மற்றவரின் ஒரு கையைப் பிடித்துக் குலுக்குகிற shake-hand என்றிப்படி மேல்நாட்டு வழக்கமிருக்க, நாம் இரண்டு கைகளையுமே சேர்த்துக் குவித்து அஞ்ஜலி, கும்பிடு போடுகிறோம். பிரிந்து பிரிந்து போகிற சித்தத்தை ஒன்றாகச் சேர்த்து ஸமர்ப்பணம் செய்வதற்கு அது அடையாளமாக, அபிநயமாக இருக்கிறது.

கூம்பின புஷ்பம், அதாவது தாமரை மொக்கு மாதிரியான அபிநயம் அது. ‘கூம்புவது’ என்பதிலிருந்து தான் ‘கும்பிடுவது’ வந்ததோ என்னவோ? கை கூப்புவது  என்றே சொல்வதையும் கவனிக்கணும்.

ஹ்ருதயமே ஒரு தாமரை மொக்கு மாதிரிதானே இருக்கிறது? ஹ்ருதய பூர்வமாக அன்பு தெரிவிப்பதற்கு ‘ஸிம்பாலிக்’காக இருக்கிறது இந்த அஞ்ஜலி. அழகான எண்ணத்தில் பிறந்த அழகான சைகை.

புஷ்பாஞ்ஜலி என்று கையில் புஷ்பத்தை எடுத்து அஞ்ஜலி முத்ரையோடு ஸ்வாமி மேல் போடுகிறோம். அஞ்ஜலி முத்ரையே கூம்பின புஷ்பந்தான்!

ராத்ரி வேளையில் தாமரைப் புஷ்பம் கூம்பிவிடும். ’அம்பாளின் பாத நகங்கள் வெள்ளை வெளேரென்று ராத்ரியில் வீசுகிற சந்திரிகை மாதிரி இருக்கிறது. அவளுடைய பாதங்களின் மேலே கூப்பின கையை வைத்துக் கொண்டு தேவஸ்த்ரீகள் நமஸ்கரித்துக் கிடக்கிறார்கள். அதைப் பார்த்தால் அவர்களுடைய கர கமலங்கள் அவளுடைய நக சந்திரிகையில் கூம்பினதாகத் தோன்றுகிறது’ என்றிப்படி ஆசார்யாள் சொல்லியிருக்கிறார்.

நகைர்- நாகஸ்த்ரீணாம் கரகமல்-ஸங்கோச-சசிபி:*

*‘ஸெளந்தர்ய லஹரி’ ச்லோகம் 89

இப்படிக் கை கூப்புகிறதிலேயே இன்னாருக்கு இன்னபடி என்று நாலைந்து க்ரமங்கள் சொல்லியிருக்கிறது. பொதுவாகப் பண்ணுவது, யாருக்கானாலும் தங்களுடைய மார்புக்கு நேரே கைகூப்புவது. ஹ்ருதயம் அங்கேதானே இருக்கிறது? ஆகையினாலே ஹ்ருதய கமலவாஸியான ஈச்வரனுக்கு நம்முடைய ஹ்ருதயத்தைக் குவித்து நமஸ்காரம் தெரிவிப்பது உள்பட எவருக்குமே இப்படிப் பண்ணுவதில் தப்பில்லைதான். இருந்தாலும் மரியாதை க்ரமத்தில் ஈச்வரனிலிருந்து நம் மாதிரியானவர்கள் வரையில் பல மட்டங்களில் வித்யாஸமாக இருப்பதால் ஒவ்வொருவருக்கும் என்றே ஒரு விதமாக அஞ்ஜலி செய்வதிலும் ஒரு அர்த்தம் தெரிவதால் அதையும் சொல்கிறேன்.

ஸ்வாமிக்குக் கைகூப்பும்போது சிரஸுக்கு மேல் கைகளைத் தூக்கிச் செய்யவேண்டும் – ‘சென்னிமேற்கரம் தூக்கி’ என்று பாட்டில்கூட வருகிற மாதிரி.*

*’காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே!’ என்ற மாரிமுத்தாப்பிள்ளையின் பாடலில்.

இதிலேயே ஒரு பாகுபாடு, இஷ்ட தெய்வத்துக்கு சிரஸ் உச்சியில் படும்படிக் கைகூப்பாமல் அதற்கும் மேலே நன்றாக உயர்த்திக் கூப்பவேண்டும் என்றும், மற்ற தெய்வங்களுக்கு சிரஸுச்சியில் படும்படிக் கூப்பிய கையாகப் பண்ணவேண்டும் என்றும்.

குருவின் ஸ்தானம் ப்ரூகுடியில் – அதாவது இரண்டு புருவத்திற்கும் மத்தியிலுள்ள இடத்தில் இருக்கும் ஆஜ்ஞா சக்ரத்தில் – என்று சொல்வதுண்டு. குருதானே ஆஜ்ஞை பண்ணுகிறவர்? குருவுக்கான அஞ்ஜலியை அப்படிப் புருவங்களுக்கு நடுவில் கை கூப்பிச் செய்ய வேண்டும்.

பிதாவுக்கு வாய்க்கு நேராகச் செய்யவேண்டும். மாதாவுக்கு வயிற்றுக்கு நேராகச் செய்யவேண்டும்.

அப்பாதானே நாம் வாய்க்குப் போட்டுக் கொள்கிறதற்காக… புரிகிறதோல்லியோ? வாய்வழியாக வயிற்றுக்குப் போட்டுக் கொள்வதற்காக ஸம்பாதித்துப் போடுகிறவர்? அதோடு நாமே வேலைக்குப் போய் நம் வாய்க்குப் போட்டுக் கொள்வதற்கு வழியாக, நாம் வாயால் பண்ணுகிற படிப்புக்கு வசதி பண்ணித் தருகிறவர்? தாமே குருவாயிருந்தோ, வேறே குருவிடம் அனுப்பியோ முக்யமாக வாய்க் கார்யமாயுள்ள கல்வி கற்க அவர்தானே உபகாரம் செய்கிறார்? அதனால் வாய்க்கு நேராகக் கைகூப்புவதாக இருக்கலாம்.

ப்ரஜைகளின் ஜீவனோபாயத்திற்கு முடிவாக ராஜாவே காரணம் என்பதால் போலிருக்கிறது, ராஜாவுக்கும் நம்முடைய வாய்க்கு நேராகப் பண்ணணும் என்று இருக்கிறது. ‘டெமாக்ரளி’யில் ராஜா என்பதற்குப் பதில் ஆட்சித் தலைவர் என்று வைத்துக் கொள்ளலாம்.

அம்மாவுக்கு ஏன் வயிற்றுக்கு நேரே என்று சொல்லவே வேண்டாம். ‘பெற்ற வயிறு’ என்னும்படியாக அவள்தானே பரமத் தியாகத்துடன் நம்மை உதரத்திலேயே தாங்கினவள்?

மற்ற எல்லாருக்கும் மார்புக்கு நேராக அஞ்ஜலி.

ஸ்வாமி உள்பட எல்லோருக்குமே அப்படிப் பண்ணலாம் என்றேன். (மார்புக்கு நேரே அஞ்ஜலி செய்கையில்) ஸ்வாமிக்கானால், கூப்பின விரல்களை மார்புப் பக்கம் திருப்பி, அதாவது மார்புக்குள்ளேயே ஹ்ருதயத்திலுள்ள ஸ்வாமிக்குப் போய்ச் சேருகிறது என்று காட்டுகிற பாவனையில் செய்யவேண்டும். மற்றவர்கள் இப்படி நமக்கு உள்ளே இல்லாமல் வெளியிலே இருப்பதால் விரல்கள் அவர்களைப் பார்க்க இருக்கும் படியாகவும் அஞ்ஜலி செய்யவேண்டும். ஸ்வாமிக்கு அந்தர்முக (உள்முக) அஞ்ஜலி; ஆஸாமிக்கு பஹிர்முக (வெளிமுக) அஞ்ஜலி.

நமஸ்காரம் என்று ஸஹஜமாகப் பண்ணும் சின்ன கார்யத்தில் இத்தனை துணுக்கங்களும், தாத்பர்யங்களும்!

தலையே, நீ வணங்காய்!” பாட்டில் அப்பர் ஸ்வாமிகள் “கைகாள், கூப்பித் தொழீர்!” என்று அஞ்ஜலியையே கை படைத்ததன் பரம பாக்ய க்ரியையாகச் சொல்லியிருக்கிறார்.

தலையால் வணங்குவதையும் கையால் வணங்குவதையும் சொல்லிவிட்டார். அந்தப் பதிகம் நம் சரீரத்தில் ஸர்வாங்கங்களையும் ஈச்வரபரமாக அர்ப்பிப்பதைச் சொல்லவே அவர் பாடியது. ’பாடி அருளியது’ என்று சொல்லவேண்டும். ‘திரு அங்க மாலை’ என்று அதற்குப் பெயர். நம்முடைய அங்கம் ஒவ்வொன்றையுமே புஷ்பமாக்கி மாலையாகத் தொடுத்து அவனுக்கு ஸமர்ப்பிக்க வழி காட்டும் பதிகம். அப்போது இந்த நாற்ற உடலே திரு போட்டுக் கொண்டு ‘திரு அங்க மாலை’ ஆகிறது!

அதில் ‘ஆக்கையாற் பயன் என்?” – ’இந்த  உடம்பினாலே என்ன ப்ரயோஜனம்?” – என்று ஒரு அடி. “ஸரி, இங்கே மொத்த சரீரத்தையும் சொல்லுவார். என்ன சொல்லுவார்? தலையோடு கால் சரீரம் பூராவும் பூமியில் கிடக்கப் பண்ணும் ஸாஷ்டாங்க நமஸ்காரத்தைத்தான் சொல்வார்’ என்று நாம் எதிர்பார்த்தால், அவரோ அப்படிப் பண்ணவில்லை, பின்னே என்ன சொல்கிறார்?