கைப்பிடியும் தண்டமும்; பெண்கள் விஷயம் சிஷ்யனின் கையைப் பிடித்துக் கொண்டே ஆசார்யன் எப்பவும் இருப்பது

கைப்பிடியும் தண்டமும்; பெண்கள் விஷயம்

சிஷ்யனின் கையைப் பிடித்துக் கொண்டே ஆசார்யன் எப்பவும் இருப்பது என்றால் முடியுமா? அதனால் அவன் கைப்பிடிக்குத் தன் ஸ்தானத்திலேயே தண்டத்தைக் கொடுக்கிறான். மனஸடக்கம், பிரம்மசர்யாதி நியமத்திற்குத்தானே முக்யமாக ஆசார்யன்? அதற்குச் சின்னம்தான் தண்டம். அதோடு புத்தியில்-மனஸில் ஏற்றிக் கொண்ட வித்யையையும் மந்த்ரத்தையும் உள்ளே உறுதியாக ஸ்திரப்படுத்துகிற தாரணா சக்தியையும் அது தருகிறது. ப்ரஹமசாரிக்கு புரசைத் தண்டம், ஸந்நியாஸிக்குக் கல் மூங்கில் தண்டம் என்று வைத்தது அதற்கு முறையே ப்ரஹ்மசர்ய, ஸந்நியாஸ ஆச்ரமங்களுக்கு அவச்யமான விஷயங்களை ரக்ஷித்துக் கொடுப்பதில் இருக்கிற ஸூக்ஷ்ம சக்தியினால்தான்!

சிஷ்யை ஸ்தானத்திலுள்ள பத்னிக்குத் தண்டம் சொல்லவில்லையே என்றால், அங்கேதான் ஸ்த்ரீகளுடைய பாதிவ்ரத்ய பெருமை இருக்கிறது! பதியென்று ஒருத்தனைக் காட்டியவுடனே அவனிடத்தில் அப்படியே மனஸை ஒப்புக் கொடுத்து சரணாகதி பண்ணும் உத்தம குணம் ஒரு பெண்ணுக்கு ஸ்வாபாவிகமாகவே அதாவது ‘நாச்சுர’லாகவே உண்டு. புருஷ ப்ரஜைகளுக்குள்ள பெளருஷம், ஆண்மை என்பதில் ஸ்வாபாவிகமாகவே ஒரு அடங்காமையும் கொஞ்ச நஞ்சமாவது இருக்கிற மாதிரி ஸ்த்ரீக்கு இல்லை. அதனால் வெளியிலே அவளுக்கு ஸ்தூலமாக எந்த சின்னமும் தரவேண்டியுமிருக்கவில்லை.

மரியாதை தெரிவிக்கும் வகைகளில் கையைப் பிடித்துக் கொள்கிற விஷயத்தில் இருந்தோம். ஸம ஸ்தானத்திலுள்ளவர்கள், நெருங்கிய பந்துக்கள், ஸ்நேஹிதர்கள் ஆகியவர்கள் நம் தேசத்திலும் கையைப் பிடித்துக் கொள்வதுண்டு என்றேன். அப்போது பரஸ்பரமே பிடித்துக் கொள்வார்கள்; கோத்துக் கொள்வார்கள். ஆனால், hand-shake என்பதிலுள்ள shake- குலுக்கல் நமக்குக் கிடையாது. மனஸில் ஒரு ஸந்தோஷம் துள்ளித் துள்ளி வருகிறதற்கு அடையாளமாக வெள்ளைக்காரர்கள்  குலுக்குகிறார்கள் போலிருக்கிறது. அவர்கள் தேவலோகவாஸிகள் மாதிரி ஸந்தோஷ ப்ரியர்கள்; ஸந்தோஷமாக இருப்பார்கள்; குடித்துக் கொண்டு, குதித்து டான்ஸ் பண்ணிக் கொண்டிருப்பவர்கள். நமக்கோ எப்போதும் எதிலும் சாந்தமாக அடங்கும் லக்ஷ்யம் மறப்பதில்லை. அதனால், அன்பில் இமோஷனலாகவே கட்டிக் கொள்வது, கை கோத்துக் கொள்வது என்கிற மட்டும் போனாலும் அப்புறம் குலுக்கல், உலுக்கல் இல்லாமல் சாந்தமாக விட்டு விடுகிறோம்.