தெய்வத்தின் நாமத்திற்கு முன்பும்! நமஸ்காரம் பண்ணுகிறவனின் நாமத்தைச் சொல்வதற்கு முன்னே அவன் செய்கிற

தெய்வத்தின் நாமத்திற்கு முன்பும்!

நமஸ்காரம் பண்ணுகிறவனின் நாமத்தைச் சொல்வதற்கு முன்னே அவன் செய்கிறது ‘ப்ரநாமம்’ – ப்ரணாமம் – என்று வேடிக்கையாகச் சொன்னேன். ஸகலமான பேரும் நமஸ்காரம் பண்ணுகிற ஸாக்ஷாத் பரமேச்வரனுக்கும் மஹாவிஷ்ணுவுக்குங்கூட அவர்களுடைய நாமத்துக்கு முன்னாடி நம்முடைய நமஸ்காரம் இருக்கிறது. எங்கே?

அவர்களுடைய மந்த்ரங்களான பஞ்சாக்ஷரீ அஷ்டாக்ஷரீகளில்தான். (சிவ பஞ்சாக்ஷரீயில்) முதலில் “நம:”, அப்புறமே ஈச்வர நாமாவைச் சொல்லும் ‘சிவாய”. (நாராயண அஷ்டாக்ஷரீயில்) முதலில் ”நமோ”, அப்புறமே விஷ்ணு நாமாவைச் சொல்லும் “நாராயணாய”.

நாங்கள் (துறவிகள்) நமஸ்காரத்தை நாராயணனுக்கே ஸமர்ப்பித்தாலும் பரமேச்வரனும் நமஸ்கார ப்ரியன் தான். ‘அபிஷேகப்ரியன்’ என்று பொதுவில் சிவனைச் சொல்வது. மஹா விஷ்ணுவை ‘அலங்கார ப்ரியன்’ என்பார்கள். (சிரித்து) சிவன் ‘மடிப் பார்ப்பான்’! ஓயாமல் முழுகிக் கொண்டு! பெருமாள் ராஜாதிராஜனாக லோக பாலனம் பண்ணுவதால் கிரீட, குண்டல, வஸ்த்ர, பூஷணாதிகளால் ராஜ அலங்காரம் பண்ணிக் கொள்பவன்…. ஈச்வரன் நமஸ்கார ப்ரியனுந்தான் என்று சொல்லவந்தேன். ‘ஸ்ரீருத்ரம்’ என்று ப்ரஸித்தமாக வேதம் அவனை ஸ்துதிப்பதில் ஒரே ‘நமோநம’ மயமாகவே இருக்கும். அதற்கு ‘நமகம்’ என்றே ஒரு பெயர்….