அபிவாதனம் நமஸ்காரம் பண்ணுபவன் நமஸ்கரிப்பவரைப் பார்த்துச் சொல்லும் வாசகமே ‘அபிவாதனம்’ என்பது மொத்தத

அபிவாதனம்

நமஸ்காரம் பண்ணுபவன் நமஸ்கரிப்பவரைப் பார்த்துச் சொல்லும் வாசகமே ‘அபிவாதனம்’ என்பது.மொத்தத்தில் தான் யார், என்ன பெயர், எந்தப் பாரம்பர்யத்தில் வந்தவன் என்று தெரிவித்துக் கொள்வதே அபிவாதனம்.‘தன்னைவிட வயஸில் பெரிய ஒருவர் வருகிறபோது ஒருத்தனுடைய பிராணன் மேலே கிளம்பி வெளியில் போகப் பார்க்கும். அப்போது அவன் எழுந்து அவரை மரியாதையாக வரவேற்று அபிவாதனம் பண்ணுவதால், கிளம்பின பிரா0000ணன் அவனிடமே மறுபடி புகுந்து நிலைப்படுகிறது’ என்று மநு சொல்கிறார்:

ஊர்த்வம் ப்ராணாஹ்யுத்க்ராமந்தி யூந: ஸ்தவிர ஆயதி |

ப்ரத்யுத்தாநாபிவாதாப்யாம் புநஸ்தான் – ப்ரதிபத்யதே||*

இங்கே வயஸில் சின்னவன் உட்கார்ந்து கொண்டோ படுத்துக் கொண்டோ இருக்கும் போது ஒரு பெரியவர் அந்தப் பக்கம் வருவதைப் பற்றிச் சொல்லியிருக்கிறது.ஒரு பெரியவரை எப்போது பார்த்தாலும் நமஸ்காரம் பண்ணி அபிவாதனம் செய்வதையும் மநு உள்பட எல்லா தர்மசாஸ்த்ரகாரர்களும் சொல்லியிருக்கிறார்கள்.

*மநுஸ்ம்ருதி 2.120

முதலில் நமஸ்காரம். அப்புறம் எழுந்து, குனிந்து நின்றுகொண்டு இரண்டு காதையும் இரண்டு கையால் தொட்டுக் கொண்டு – வலது காதை வலது கையாலும், இடது காதை இடது கையாலும் தொட்டுக் கொண்டு – தான் இன்னார் என்று நமஸ்காரம் பண்ணப்படுகிறவருக்கு சாஸ்த்ரோக்தமாக அறிமுகம் செய்து கொள்வதான அபிவாதன வாசகத்தைச் சொல்லணும். காதை ஏன் தொட்டுக் கொள்ள வேண்டுமென்றால் அதுதான் பஞ்சபூதங்களில் உசந்த ஆகாசத்துக்குரியதான சப்தத்தை க்ரஹிப்பது.

அபிவாதனம் சொன்ன அப்புறம் இரண்டு கையையும் காதிலிருந்து எடுத்து, தன்னுடைய முழங்காலிலிருந்து பாதக் கட்டைவிரல் முடியத் தொட்டுக் கொள்ள வேண்டும்.

குனிந்து நிற்பது பணிவைக் காட்டுவது.விழுந்து நமஸ்கரித்தவன் எழுந்து நின்ற பின்னும் விறைப்பாக நிற்காமல் உடம்பை வளைத்துக் குனிவது அதே விநயத்தை ‘அன்டர்லைன்’ பண்ணி இன்னொரு விதத்தில் காட்டுகிறது தான்.காதிலிருந்து கையை எடுத்து கால் முடியத் தொடுவது தன்னை அப்படியே முழுக்கவும் நமஸ்காரம் பண்ணப்படுகிறவருக்கு அர்ப்பணம் பண்ணிக் கொள்வதற்கு அடையாளம்.காது சிரஸிலிருப்பதால் காதிலிருந்து பாதம் தொடுவதே தலையிலிருந்து கால் வரையில் அர்ப்பித்துக் கொள்கிற மாதிரிதான். ஏன் தலையைத் தொடாமல் காதைத் தொடணுமென்றால், காதின் முக்யத்வம் முன்னமேயே சொன்னேனே! அதுதான் ஆகாச பூதத்துக்கு உரித்தான சப்தத்தை க்ரஹிப்பது, என்றேனே?உபதேசம் கேட்டுக் கொள்வதும் காதுதான்.நமஸ்கரிக்கப்படுபவரின் ஆசீர்வாதத்தைக் கேட்டுக் கொள்ளப் போவதும் அதுதானே?அதனாலெல்லாம் காதிலிருந்து கால் வரையில்.

இந்தக் காரணங்களைத் தவிர, இந்த நமஸ்கார க்ரியையே ஒரு யோகாப்யாஸம், பலவிதமான நாடி சலனங்களால் நம் சித்தத்தை சுத்தம் செய்யும் தேஹப்பயிற்சி என்று புரிந்து கொள்ளவேண்டும்.அதில் காதைத் தொடுவது, அப்புறம் முழங்காலிலிருந்து விரல் முடியத் தொடுகிறது எல்லாவற்றுக்குமே சித்த சுத்திக்கு ஸஹாயம் செய்வதான ப்ரயோஜனம் இருக்கிறது.

நமஸ்காரம் பண்ணப்படுகிறவருக்குத் தன்னை ஸர்வாங்கமும் அர்ப்பணம் செய்யும் தாத்பர்யத்தை உள்ளே அடக்கிக் கொண்டிருக்கிற யோகாப்யாஸமாக இதைச் சொல்லலாம்.

முடிவாக, நமஸ்காரம் பண்ணப்படுகிறவரின் பாதங்களைத் தொடவேண்டும்.

‘எதற்காக இப்படிப் பாதத்தைத் தொடவேண்டும்?’ என்று கேட்டால், ‘லாஜிக’லாக அதற்குப் பதில் சொல்ல முடியாது!பக்திக்கும் விநயத்துக்கும் ‘நாச்சுரல் எக்ஸ்ப்ரெஷ’னாகவே பாதஸ்பர்சம் இருக்கிறது.

அந்த ‘கெஸ்ச்’சரில் (சைகையில்) நமக்கு நமஸ்கரிக்கப்படுகிறவரிடமுள்ள பக்தி, அடக்கம் எல்லாம் பூர்ணமாக அடங்கி விடுகின்றன. நாம் சின்னவனாக இருந்துகொண்டு அவரை ரொம்பவும் பெரியவராக வைத்து – யாரை நமஸ்கரித்தாலும் அவரே ஈச்வரனின் ப்ரதிநிதி என்கிற மனோபாவத்தை வைத்து – அவருக்குள் பாய்கிற ஆசீர்வாத சிந்தையை அவரிடமிருந்து நமக்குள் பாய்ச்சிக் கொள்வதற்காகவே இப்படிப் பாதத்தைத் தொடுவது.இது ஒரு (சிரித்து) ஆத்ம ஸம்பந்தமான ‘எலெக்ட்ரிகல் ஸர்க்யூட்’!

‘தொடுவது’ என்று சொன்னாலும் நம்முடைய தக்‌ஷிண தேசத்தில் பெரும்பாலும் அது அசலே நேராகத் தொடுவதாயில்லாமல், நமஸ்காரத்துக்குப் பாத்திரமாகிறவரின் பாதத்தின் கிட்டே நமஸ்கரிக்கிறவன் தன் கைகளைக் கொண்டுபோய் தொடுகிற மாதிரி பாவனை பண்ணுவதாகத் தான் நடைமுறையில் இருக்கிறது.

அதற்குத் தகுந்த ந்யாயமும் இருக்கிறது.மடி போதாதவர், அதிலும் வயஸில் சின்னவர், மடியாயிருக்கிறவரைத் தொடுவது ஸரியில்லை.மடி-விழுப்பு ஸமாசாரம் ஒரு பக்கம் இருக்கட்டும்.தேஹ ரீதியாகவும் நமக்கு உள்ள தோஷம் நாம் தொடுகிறவரை கொஞ்சமோ நஞ்சமோ பாதிக்க இடமுண்டு.மனோரீதியில் நமக்குள்ள குணதோஷங்களும் அதே மாதிரிப் பண்ணலாம்.எலெக்ட்ரிக் கரென்ட் மாதிரி இவை ஒருத்தரிடமிருந்து இன்னொருத்தருக்குப் ‘பாஸ்’ ஆகக்கூடும் என்று இப்போது ஸயன்ஸுக்காரர்களே ஒத்துக் கொள்கிற மாதிரி பேசுகிறார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலே கர்மா, நாம் யாரை நமஸ்கரிக்கிறோமோ அவர் கருணை மனஸ் படைத்த ஒரு உத்க்ருஷ்டமான (உயர்வு பொருந்திய) ஜீவனாக இருந்தால் நாம் அவர் பாதத்தைத் தொடுகிறபோது நம்முடைய கர்மா – தப்புக் கர்மா, பாப கர்மாதான், அது – அவருக்குள்ளேயும் ‘பாஸ்’ ஆகி நம்முடைய கர்மாவுக்காக நாம் படவேண்டிய கஷ்டத்தைக் கொஞ்சமோ நஞ்சமோ அவர் அநுபவிக்கும்படி செய்து விடும்.

பரம உத்க்ருஷ்டமாக இருந்தால் விஷயம் வேறே! அவருடைய ஞானாக்னி, தபோசக்தி, யோகசக்தி, பக்தியின் மஹிமை இப்படி ஏதோ ஒன்றின் ‘பவ’ரில் பிறத்தியாரிடமிருந்து வந்து சேர்கிற கர்மா பஸ்மமாகிவிடும்.ஆனால் அப்படி இருக்கக்கூடியவர்கள் ரொம்பவும் துர்லபம்தான்.

நமக்கோ பிறத்தியார் எவருடைய உள்சக்தியைப் பற்றியும் திட்டமாகத் தெரியத்தானே தெரியாது? அப்படியிருக்கும்போது, யார் எப்படிப்பட்டவர் என்று முழுக்கவும் ஸரியாகத் தெரிந்துகொண்டு இன்னாரைத் தொடுகிறது, இன்னாரைத் தொடாமல் அப்படி பாவனை மாத்திரம் பண்ணுவது என்றெல்லாம் பாகுபாடு பண்ணிக் கொண்டிருக்க முடியுமா?

ஆகையினால் எல்லோரையுமே பாத ஸ்பர்சம் பண்ணுகிற மாதிரி பாவனையில் செய்தாலே போதும்.அதுவே நடைமுறைக்கு ஸரியாக வரும்.

ஒரேயடியாக பக்தி பெருக்கிட்டு வந்து, அந்த ஆவேசத்தில் நமஸ்காரத்துக்குப் பாத்திரமாகிறவரின் பாதத்தைத் தொட்டால், இறுக்கிக் கட்டிக் கொண்டால் கூட, அதுவும் வேறே விஷயம்! அந்த பக்திப் பெருக்கே ஸமஸ்த தோஷங்களையும் நிவாரணம் பண்ணிவிடும்! ஆனால் அந்த மாதிரி நிஜ பக்தியின் ஆவேசம் நமக்கு வருவதும் ரொம்பவும் துர்லபந்தான்.ஏதோ தத்காலத்துக்கு (தற்காலத்துக்கு) ஏற்படுகிற ‘இமோஷ’னை நிஜபக்தியுடன் சேர்த்துவிடக் கூடாது.ஆனபடியால் நமஸ்கார பாத்திரரைத் தொடுவதில்லை என்று கட்டுப்படுத்திக் கொண்டு ஜாக்ரதையாயிருப்பதே நமக்கும் நல்லது, அவருக்கும் நல்லது.

ஒருத்தருடைய ஆசீர்வாதத்தினால் நமக்கு நல்லது நடக்கும், ச்ரேயஸ் கிடைக்கும் என்றுதான் அவரை நமஸ்கரிக்கிறது.அப்படி நமக்கு நல்லது செய்கிறவரிடம் நம்முடைய கெடுதலைக் கொண்டு சேர்க்கிறது தப்பு தானே?தெரியாத்தனத்தால் அப்படிப் பண்ணினால் பரவாயில்லை. ஆனால் இப்போது நான் தெரியப்படுத்தி விட்டேனே! தெரிந்து கொண்டும் தொடுகிறது என்று பண்ணினால் தப்புதானே?அது எப்படி நமக்கு நல்லதைத் தரமுடியும்?

எவ்வளவு உத்க்ருஷடமாயிருந்து, பிறத்தியாருடைய கர்மாவைப் பொசுக்கக் கூடியவராயிருந்தாலுங்கூட சாஸ்த்ராசாரங்களைத் தானும் பின்பற்றி, லோகத்துக்கும் எடுத்துச் சொல்ல வேண்டியவர்களான தர்மபீடங்களை மடாலயங்களைச் சேர்ந்த ஸ்வாமிமார்களுக்குப் பாதத்தைத் தொட்டு நமஸ்காரம் பண்ணுவது கூடாது. ஏனென்றால் அந்தப் பெரியவர்களை மடி-விழுப்பு முதலான எதுவும் தொடாது என்றாலும், பிறத்தியாருக்கு அவர்கள் எடுத்துச் சொல்கிற சாஸ்த்ரீய முறைகளில் வரும் இந்த மடி-விழுப்பு ஸமாசாரத்தை அவர்களே நடைமுறையில் பண்ணி லோகத்துக்கு உதாரணமாக வழி காட்டுவதற்கு இந்தப் பாதஸ்பர்சம் குந்தகம்தானே பண்ணிவிடும்?

ஆக மொத்தம், நமஸ்கரிக்கிறவன் நமஸ்கரிக்கப் படுகிறவரின் பாதத்தை ஸ்பர்சிக்கிற மாதிரி, அந்தப் பாதத்தின் பக்கமாகக் கையைக் கொண்டு போய் பாவனா ரூபத்தில் பண்ணுவதே யுக்தம்.

அப்படிப் பண்ணினாலே போதும், முன்னே நான் சொன்ன மாதிரி அவருடைய ஆசீர்வாத சித்தம் நமக்குள் பாய்ந்துவிடும்.

சுத்தமான பாவத்தோடு ஒன்றைப் பண்ணினால் அந்த பாவனைக்கே ஸாக்ஷாத்தாகச் செய்கிற கார்யத்தை விடவும் சக்தி ஜாஸ்தி.அதனால் தான் ஈச்வரனையே ‘பாவ க்ராஹி’தான்; ‘பாஹ்யக்ராஹி’ இல்லை என்பது.‘பாஹ்யக்ராஹி’ என்றால் வெளியிலே பண்ணுவதை ஏற்றுக் கொள்கிறவன்.‘பாவ க்ராஹி’ என்றால் மனோபாவத்தை ஏற்றுக் கொள்கிறவன்.

(சிரித்து) ‘பாவனை’ என்பதைப் ’பாசாங்கு’ என்று அர்த்தம் கொடுக்கிற அளவுக்கு நாம் கொண்டு வந்து விட்டோம்! அப்படிப்பட்டதை நான் சொல்லவில்லை. ‘பாஹ்யத்தில் (வெளிப்பட) செய்ய முடியவில்லையே’ என்ற தாபமும் சேர்ந்து உள்ளேயுள்ள நிஜமான பக்தியையும், பணிவையும் வ்ருத்தி பண்ணி, அதற்கு அடையாளமாகப் பண்ணுவதையே ‘பாவனையாகப் பண்ணுவது’ என்று சொல்கிறேன்.

அப்படி மனோபாவத்தால், நமஸ்கரிக்கப்படுபவரின் பாதத்தை அதற்குச் சற்று தூரத்தில் நம் கையால் தொடுகிற மாதிரி பண்ணுவதையே அவரை நிஜமாகத் தொடுவதாக பாவித்து, அவருடைய ஆசீர்வாதத்தை நமக்குள் இறக்கிக் கொள்ள வேண்டும்.

அவர் ஆசீர்வாதம் என்று பண்ணினாலும் பண்ணாவிட்டாலும் ஸரி, அப்படிப் பண்ணவேண்டும் என்று நினைக்காதவராகக் கூட இருந்தாலும் ஸரி, நம்முடைய நிஜமான, அந்தரங்க சுத்தமான பாவனா நமஸ்காரத்தினால் அவருக்குள் அந்தராத்மாவாக இருக்கப்பட்ட ஈச்வரன் – நாராயணன் – ஆசீர்வாதம் செய்துவிடுவான். அதிலே ஸந்தேஹமேயில்லை…

வலது காதை வலது கையாலும் இடது காதை இடது கையாலும் அபிவாதனத்தின்போது தொடுகிறாற்போலவே தான் எதிரே இருப்பவர் காலைத் தொடும்போதும், அதாவது பாவனையாக அப்படிப் பண்ணும்போதும் அவருடைய வலது காலை நம்முடைய வலது கையாலும் இடது காலை இடது கையாலுந்தான் தொடுகிற மாதிரிச் செய்யவேண்டும். அதாவது அவருடைய வலது காலுக்குக் கிட்டே நம்முடைய வலது கையும், இடது காலுக்குக் கிட்டே இடது கையும் இருக்கும்படி கைகளை மறித்துப் போட்டுக் கொள்ளவேண்டும்.ஸாதாரணமாக இப்படிப் பண்ணுவதில்லை.அந்த இரண்டு கையாலும் அதற்கு நேரே உள்ள காலைத்தான் தொடுகிறோம்; அல்லது தொடுகிற மாதிரிப் பண்ணுகிறோம்.இப்படிப் பண்ணும் போது நம்முடைய வலது கை அவருடைய இடது காலையும், இடது கை வலது காலையும் தொடுவதாகவே இருக்கும்.ஏனென்றால் அவர் நமக்கு எதிர்த் திசை பார்த்துக் கொண்டிருப்பதால் கண்ணாடி பிம்பம் மாதிரி வலது-இடது மாறிப் போகும். (சிரித்து) உல்டா! அதனால் கத்தரிக்கோல் மாதிரி நம்முடைய இடது கைக்கு மேல் வலது கையை மறித்து எதிரே இருப்பவரின் வலது-இடது கால்களை நம்முடைய அந்தந்தக் கையாலேயே தொடவேண்டும். அப்படித்தான் செய்யவேண்டுமென்று சாஸ்த்ரம் – ஸவ்யேந ஸவ்ய: ஸம்ப்ரஷ்டவ்யோ தக்ஷிணேந ச தக்ஷிண:*. ஒரு புஸ்தகத்தில் “கர்தரீமிவ” – கத்திரி மாதிரி – என்றே இருக்கிறது.‘கர்தரி’யிலிருந்து வந்ததே நம் ‘கத்திரி! ‘கர்தனம்’ என்றால் நறுக்குவது…….

‘அபிவாதனம்’ என்று முதலில் சொன்னேனே.அதன் வாசகத்தைப் பற்றிக் கொஞ்சம் ‘எக்ஸ்ப்ளெய்ன்’ பண்ணுகிறேன்.

அபிவாதனம் சொல்வதில் முதலில் ஒருத்தன் என்ன கோத்ரமோ அதை ஆரம்பித்து வைத்தவர்களான மூலரிஷிகளின் பெயர்கள் வரும்.இதற்கு ‘ப்ரவரம்’ என்று பெயர்.‘ரிஷி’ என்றால் வேதங்களில் அதுவரை லோகத்துக்கு வந்திருக்காத ஒரு புது மந்திரத்தை அகண்ட ஆகாசத்திலிருந்து கண்டு பிடித்து லோகத்துக்குக் கொடுத்தவர்.இப்படி ஒவ்வொரு கோத்ரத்திலும் மூலவர்களாக ஒன்றிலிருந்து ஐந்து வரை ரிஷிகள் இருந்திருக்கிறார்கள்.அந்த ரிஷிகளிலும் யார் ரொம்ப முக்யமானவரோ அவர் பெயரிலேயே கோத்ரம் இருக்கும்.‘ஆங்கீரஸ கோத்ரம்’ என்பது அந்த வம்ச ஆரம்பத்தில் வந்த முதல் ரிஷியான ஆங்கிரஸர் பெயரில் இருக்கிறது.‘கெளண்டின்ய கோத்ரம்’ என்பது அந்த வம்ச ஆரம்பத்தில் வந்த மூன்று ரிஷிகளில் மூன்றாமவரான கெளண்டின்யரின் பெயரில் இருக்கிறது.இதற்குச் சில விலக்கும் உண்டு.அந்த ஸமாசாரம் இப்போது வேண்டாம்.அபிவாதனத்தின் முதலில் ‘ப்ரவரம்’ என்ற பெயரில் வம்ச மூலவர்களான ரிஷிகளின் பெயர் வரும்.

  • மநுஸ்ம்ருதி – 2.72

ப்ரவரத்தில் சொல்கிற ரிஷிகளில் – பெரும்பாலான கோத்ரங்களில் மூன்று ரிஷிகளின் பெயர் வரும்; அப்படிப் பட்ட ரிஷிகளில் – எவர் பெயரில் கோத்ரமிருந்தாலும் அந்த ரிஷிகளின் பரம்பரை க்ரமம், lineage, ஆதி முதலில் இருந்த ரிஷி, அப்புறம் அவருடைய பிள்ளை ரிஷி, அதற்கப்புறம் அந்தப் பிள்ளையின் பிள்ளை ரிஷி என்பதாகவே வரும். பித்ரு தர்ப்பணத்திலோ இதற்கு மாறாக நம் வம்சத்தில் முடிவாக நமக்கு முன்னால் வந்த மூன்று பேரைச் சொல்லி அவர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பது.அதிலும் கடைசி கடைசியாய் வந்த அப்பாவில் ஆரம்பித்து, அப்புறம் அவருடைய அப்பா, அதற்கப்புறம் அவருக்கும் அப்பா என்று வரிசைப்படுத்திக் கொடுக்கிறது.கல்யாணங்களில் கன கோஷமாக ப்ரவரம் சொல்கிறது வழக்கம். வதூ-வரர் என்ற கல்யாணப் பெண்ணும் பிள்ளையும் ஸகோத்ரமாக இல்லாமல் வெவ்வேறு கோத்ரத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டுமென்பது முக்யமான விதியாதலால், அந்த விதியை அநுஸரித்தே ஒரு விவாஹம் நடக்கிறது என்று ஸபைக்கு ப்ரகடனம் செய்யும் உத்தேசத்துடன் இப்படி கனகோஷமாக ப்ரவரம் சொல்வது. அதன்போது அபிவாதனத்தில் சொல்வது, தர்ப்பணத்தில் சொல்வது ஆகிய இரண்டையும் சேர்த்துச் சொல்வார்கள்.முதலில் அபிவாதனத்தில் சொல்லும் அதே வரிசைக் க்ரமத்தில் ஆதி முதல் ரிஷி, அவர் பிள்ளை, பேரர் என்று கோத்ரத்தைத் தெரிவிப்பார்கள்.அப்புறம் பித்ருக்களின் வரிசை.ஆனால் தர்ப்பணத்தில் அப்பா-தாத்தா-கொள்ளுத்தாத்தா என்று சொல்கிற க்ரமத்தை இங்கு மாற்றிக் கொள்ளுத் தாத்தா-தாத்தா-அப்பா என்று சொல்வார்கள்.தர்ப்பணத்தில் ஒவ்வொரு பெயரைச் சொல்லும்போதும் இன்ன கோத்ரத்தைச் சேர்ந்தவர் என்று ஆரம்பித்து அப்புறம்தான் பெயரைச் சொல்வது.

அபிவாதனத்தில் முதலில் மூலரிஷிகளின் பெயர் வரும் என்பதுதான் இங்கே விஷயம். அப்புறம் அந்த கோத்ரப் பெயரும், அப்புறம் கர்மாக்களை வகை தொகைப்படுத்திக் கொடுக்கும் ஸூத்ரங்களில் இவன் எதைச் சேர்ந்தவனோ அதன் பெயரும், அப்புறம் நாலு வேதங்களில் இவன் எதைச் சேர்ந்தவனோ அதன் பெயரும் வரும்., அந்த வேத சாகையைத் தான் அத்யயனம் பண்ணுவதாக வரும். (சிரித்து) இந்தக் காலத்தில் ‘பண்ண வேண்டியவன்’ என்று வைத்துக் கொள்ளலாம்.முடிவாகத் தன் பெயரைச் சொல்வதாக வரும். சொல்லி, ”போ:” (Bhoh) – அதாவது ‘பெரியவரே!’, ‘ஐயனே!’ – என்று நமஸ்கரிக்கப்படுபவரைக் கூப்பிட்டு நமஸ்காரத்தை ஸமர்ப்பிக்க வேண்டும். “இன்ன ரிஷிகளைக் கொண்ட இன்ன கோத்ரக்காரன், இன்ன ஸூத்ரக்காரன், இன்ன வேத சாகையை அத்யயனம் பண்ணும் இன்ன பெயருள்ளவனாக இருக்கிறேன் ஐயா!” என்று மொத்தத்தில் அர்த்தம் கொடுக்கும்.

எப்பேர்ப்பட்ட உத்தமமான பரம்பரையில் நாம் வந்திருக்கிறோம்; லோகம் முழுதற்கும் பரம கல்யாணத்தைச் செய்யும் வேதங்களிலும், ஸூத்ரங்களிலும் நாம் எதைச் சேர்ந்தவராக இருக்கிறோம் என்று எவ்வளவுக்கெவ்வளவு ஞாபகப்படுத்திக் கொள்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நமக்கு ச்ரேயஸாகும். இப்பேர்ப்பட்ட பரம்பரையில் பிறந்தோம் என்பதற்கு ஏற்ற யோக்யதாம்சங்களோடு, அந்தப் பரம்பரைக்கு worthy descendants – ஆக நாம் இருக்கவேண்டும் என்பதற்கு இப்படி அபிவாதனம் சொல்வதே reminder ஆக, அதாவது ஞாபகமூட்டியாகவும், inspiration ஆகவும், அதாவது நமக்கு உள்ளே பூந்து ஊக்குகிற சக்தியாகவும் இருக்கும். அதனால்தான் நம் கோத்ர-ஸூத்ராதிகள் நன்றாகத் தெரிந்த நம்மகத்துப் பெரியவர்களுக்கும் – அப்பா, சித்தப்பா மாதிரியானவர்களுக்கே – ஒவ்வொரு தடவை நமஸ்காரம் பண்ணும் போதும் அபிவாதனம் சொல்லணும் என்று வைத்திருக்கிறார்கள். நம்முடைய வேதத்தின் ஞாபகம், வேத ரிஷிகளின் ஞாபகம், வம்ச மஹிமை – ‘குடிப் பெருமை’ என்பது – எப்போதும் நம் மனஸில் இருக்கவேண்டும் என்பதே இதன் அடிப்படை தாத்பர்யம்.

’இப்பேர்ப்பட்ட குடியின் வழித்தோன்றலாக இன்ன பெயர் கொண்ட நான் இருக்கிறேன்’ என்பதாகக் குடியைச் சொன்னவிட்டுத் தன்னுடைய பெயரை ஒருத்தன் சொல்வதாக அபிவாதனத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள்.

இத்தனைக்கும் ஆரம்பம் ‘அபிவாதயே’ – ’சரிவரச் சொல்கிறேன், அதாவது அறிமுகம் பண்ணிக் கொள்கிறேன்’ என்று நேர் அர்த்தம்.‘தங்களுடைய ஆசீர்வசனத்தை – ஆசீர்வாத ப்ரதிவசனத்தை (மறு மொழியை) வேண்டிச் சொல்கிறேன்’ என்று நீட்டி அர்த்தம் சொல்வதுண்டு.

அந்த ப்ரதிவசனத்திற்கு ‘ப்ரத்யபிவாதனம்’ என்று பெயர்.அது சொல்லத் தெரியாதவனுக்கு நமஸ்காரம் பண்ணப்படாது என்றுகூடச் சொல்லியிருக்கிறது.நமஸ்காரம் பண்ணினவன் தெரிவித்துக் கொண்டபடி அவன் சர்மாவை (பெயரை) ‘இன்ன பெயருள்ள சர்மா’ என்று கூப்பிட்டு “தீர்க்காயுஷ்மான் பவ ஸெளம்ய!” என்று சொல்வதே அந்த ப்ரத்யபிவாதனம்.

ப்ரத்யபிவாதனம் சொல்லத் தெரியாதவனுக்கு நமஸ்காரம் கூடாது என்கிற மாதிரியே வேறே சில பேருக்கும் (கூடாதென்று) சொல்லியிருக்கிறது. எல்லாம் தெரிந்தவரானாலும் ஒரு பெரியவர் படுத்துக் கொண்டிருக்கும்போதும், ஜபம்-பூஜை பண்ணும்போதும், ஹோமம் பண்ணும்போதும், தலையில் எண்ணைய் வைத்துக் கொண்டு ஊறிக் கொண்டிருக்கிறபோதும், கையில் தீர்த்த பாத்ரம், புஷ்ப-அக்ஷதை, தர்ப்பை – ஸமித், நெய் முதலியவை வைத்துக் கொண்டிருக்கும் போதும், ஆஹார வஸ்துக்கள் வைத்துக் கொண்டிருக்கும் போதும், ஆஹாரம் பண்ணும்போதும், இன்னும் சில ஸந்தர்பங்களிலும் நமஸ்காரம் பண்ணப்படாது.

சில பேருக்கு நமஸ்காரம் பண்ணினாலும் அபிவாதனம் சொல்லக்கூடாது என்றும் தர்ம சாஸ்திரத்தில் விதிமுறை இருக்கிறது.‘யதீன்’, அதாவது எங்கள் மாதிரி ஸந்நியாஸிகளுக்கு, அபிவாதனம் சொல்லக்கூடாது.நமஸ்காரம் பண்ணணுமே தவிர ‘அபிவாதயே’ சொல்லப்படாது.‘யதீன்’ என்று சொல்லி முடிக்குமுன் இன்னும் நாலைந்து பேரையும் சொல்லியிருக்கிறது.

தேவான், நதீம், ஸபாம், வ்ருக்ஷாம், அக்னீனபி ததா யதீன்|

தண்டவத் ப்ரண்மேத் பூமெள நாபிவாதனம் ஆசரேத் ||

இங்கே சொல்லியிருக்கிறவர்களுக்கெல்லாம் கழி மாதிரி நிலம் தோய விழுந்து தண்டவத்தாக நமஸ்கரிக்கத் தான் வேண்டுமானாலும் அபிவாதனம் கூடாது.யாரார்?முதலில் தேவர்கள், அதனால்தான் கோவிலிலும் அகத்துப் பூஜையிலும் நமஸ்கரிக்கிறபோது ‘அபிவாதயே’ சொல்வதில்லை.அப்புறம் நதிகள், கங்கா பூஜை பண்ணுகிறோம்.ராமேச்வரத்தில் ஸமுத்ர பூஜை செய்கிறோம்.அங்கேயெல்லாம் அபிவாதனம் கூடாது.ஒரு ஸபை நடக்கிறது.அதிலே பல பெரியவர்களும் இருக்கிறார்கள்.தனிப்படக் கண்டால் அந்த ஒவ்வொருத்தருக்கும் அபிவாதனத்தோடேயே நமஸ்காரம் செய்யணும்.ஆனால் ஸபையாக அப்படிப் பல பேர் உள்பட ஜனங்கள் சேர்ந்திருக்கிறபோது, ஸபைக்கு நமஸ்காரம் உண்டாயினும், அபிவாதனம் சொல்லப்படாது.அச்வத்தம் மாதிரி வ்ருக்ஷங்களுக்கும் அபிவாதனமில்லாத நமஸ்காரம் மட்டுமே.அக்னிக்கும் அப்படியே தான்.

(சிரித்து) ஜாக்ரதையாக இப்போது ஒன்று சொல்கிறேன்: ஸ்த்ரீகளில் தாயார் தவிர மற்றவர்களுக்கு அபிவாதனம் இல்லாமலேதான் நமஸ்காரம். இதை முதலிலேயே சொல்லியிருந்தால் நவீன காலத்தில் ஸ்த்ரீ ஸமத்வம் சொல்கிறவர்களுக்குக் கோபம் வரும் என்பதால் தான் ஜாக்ரதைப்படுத்திக் கொண்டு, ‘ஆனானப்பட்ட தேவர்கள், ஸந்நியாஸிகள், புண்ய தீர்த்தங்கள், வித்வத் ஸபைகள் ஆகியவற்றிக்குக் கூடத்தான் அபிவாதனம் இல்லை. அதனால் இங்கே உசத்தி-தாழ்த்தி காட்டிப் பாகுபடுத்தவில்லை. ஏதோ நமக்குத் தெரியாத, தெரிவிக்க முடியாத காரணத்துக்காகத்தான் இப்படி விதி இருக்கிறது’ என்று காட்டுவதற்கு அநுகூலமாகச் சொல்லிக்கொண்டு போகிறேன்!

ஸ்த்ரீகளில் ஸ்தானத்தில் உயர்ந்த எல்லாருக்கும் நமஸ்காரம் பண்ணலாமானாலும் தாயாரொருத்திக்கே நமஸ்காரத்தோடு அபிவாதனமும் சொல்லுவது.சிஷ்டாசாரத்தில் இப்படித்தான் நடந்து வருகிறது.குருபத்னிக்கும், தாயார் காலமானபிறகு தமையன் பத்னிக்கும் தாயார் ஸ்தானமே கொடுப்பதும் சிஷ்ட ஸம்ப்ரதாயத்தில் வந்திருக்கிறது.

தன்னைவிட உயரத்தில் இருப்பவருக்கோ, கீழ் மட்டத்தில் இருப்பவருக்கோ (நமஸ்காரம் செய்யக்) கூடாது என்றும் இருக்கிறது.குருவைத் தவிர மற்றவர்களுக்கு இந்த விதி என்றும் இருக்கிறது. குருப்பட்டம் கட்டிக் கொண்டால் மற்றவர்களைவிட நிறைய நமஸ்காரத்தை வாங்கிக் கொண்டு கஷ்டப்பட்டுத்தான் ஆகணும் என்று வைத்திருக்கிறது!

நமஸ்காரம் பண்ணுபவனும் இப்படியிப்படி இருக்கக்கூடாது என்று சொல்லியிருக்கிறது.நமஸ்கரிக்கப்படுபவனுக்குச் சொன்ன அதே வஸ்துக்களை இவனும் கையில் வைத்துக் கொண்டு நமஸ்கரிக்கக் கூடாது.புருஷர்களானால் மேலே வஸ்திரம் கூடாது.அதை இடுப்பில் கட்டிக்கொண்டே பண்ணணும்.திறந்த உடம்பாக என்பது முக்யம்.ஒளிவு மறைவு இல்லாமல் தன்னை அப்படியே ஒழித்துத் தருவதற்கு ஹ்ருதய பாகத்தை மூடாமல் காலில் விழுவது அடையாளம்.அதனால் சட்டை போட்டுக் கொண்டு (நமஸ்கரிப்பது) கூடாது.

நமஸ்காரம் பண்ணுபவன், வாங்கிக் கொள்பவன் இரண்டு பேரும் அசுத்தனாயிருக்கப்படாது.இந்தக் காலத்தில், ரொம்பவும் மடித் தப்பாக இருக்கப்படாது என்று ‘லிபர’லாக அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம்.

வித்யை, அநுஷ்டானம், ஞானம் முதலிய ஏதோ ஒன்றில் தேர்ச்சியடைந்தவர்கள் ஸமவயஸானாலும், அல்லது வயஸில் சின்னவர்களானாலுங்கூட நமஸ்காரம்.மற்றவர் விஷயத்தில் மூன்று வயஸாவது பெரியவனாயிருப்பவருக்கே நமஸ்கரிக்கணும் என்று ஒரு அபிப்ராயம் இருக்கிறது. அப்படிப் பார்க்காமல், பொதுவாக நம்மைவிட வயஸில் கொஞ்சம் பெரியவராயிருப்பவரிலிருந்து ஆரம்பித்து எல்லோர் முன்னாலுமே உடம்பைக் கீழே போடுவது நல்லது; எளிமைப் பண்புக்கு உதவுவது. ஆவணியவிட்டத்தன்று முஹுர்த்த காலமே பெரியவனுக்கும் நமஸ்கரிப்பதாக சிஷ்டாசாரம்; அன்றைக்குத் தேடித் தேடிப் போய் நமஸ்கரிப்பார்கள்….