வீரமும் வணக்கமும் இப்போது எப்படி நடந்தாலும், ‘நம்’மை வைத்து ‘நமஸ்காரம்’ என்றும் ‘வணக்கு’வதை வைத்து ‘

வீரமும் வணக்கமும்

இப்போது எப்படி நடந்தாலும், ‘நம்’மை வைத்து ‘நமஸ்காரம்’ என்றும் ‘வணக்கு’வதை வைத்து ‘வணக்கம்’ என்றும் வார்த்தைகள் தோன்றியிருப்பது, நம்முடைய தேசத்தில் பூர்வகால ஸகல மக்களும் எப்படி வளைந்து கொடுத்து, எங்கே நல்லது தெரிந்தாலும் அதைப் போற்றி வழிபட்டார்கள் என்று காட்டுகிறது.

‘Body language’ என்று ‘உடம்பின் பாஷை’யாக ஒன்று சொல்கிறார்கள். வாய் வார்த்தையால் ஒரு அபிப்ராயத்தைச் சொல்லாமல் உடம்பின் சைகையால் ரொம்பவும் இயற்கையாகத் தெரிவிப்பதே body language. அந்த மாதிரி மனஸிலே இருக்கிற எளிமையான விநய பாவத்தை, மரியாதை உணர்ச்சியைத் தெரிவிக்கவே ஏற்பட்டது இந்த நமஸ்கார க்ரியை. அந்த க்ரியையின் தாத்பர்யத்தை ‘நமஸ்காரம்’, ‘வணக்கம்’ என்ற வளைந்து கொடுக்கும் அர்த்தம் தரும் வார்த்தைகள் அழகாகத் தெரிவிக்கின்றன. ஒன்றுமில்லை என்ற அபிப்ராயத்தில் அதைக் கழி மாதிரி ஸாஷ்டாங்கமாகக் கிடத்தும்போதும் மனோபாவம் என்னவோ வளைந்து கொடுத்துப் படிமானமாக இருப்பதுதான்.

பஞ்சாங்கமாகப் பண்ணும்போது வளைந்து கொடுப்பது அழுத்தமாகவே body language – ஆகத் தெரிகிறது.

நமஸ்காரம், வணக்கம் என்ற வார்த்தைகளே நம் ஜனங்களின் பணிவுப் பண்பைக் காட்டுகிறது என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.

வீரம்-சூரம்- அது பாட்டுக்கு ஒரு பக்கம். காட்ட வேண்டிய இடத்தில் அதைக் காட்டினார்கள். அங்கே சத்ருவுக்கு, அக்ரமத்துக்குத் தலைவணங்கவேயில்லை. நேராக நிமிர்ந்து நின்றார்கள். ஆனால் நல்லது, உத்தமமானது என்றால் வணங்கி ஏற்றுக் கொண்டார்கள். ”தலையே, நீ வணங்காய்!” என்றே அப்பர் ஸ்வாமிகள் பாடிக் கொடுத்திருக்கிறார்**!

வேடிக்கையாக ஒன்று தோன்றுகிறது; வீர-சூரர்களாக இருக்கும்போது நம்முடைய முன்னோர்கள் வில்லை வளைத்தார்கள். விநயசாலிகளாக எங்கே நல்லது இருந்தாலும் அதை எடுத்துக் கொள்ளும்போது வில்லாக வளைந்தார்கள் – தாங்களே வில் மாதிரி வளைந்து பணிந்தார்கள்! ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்யும்போதும் முதலில் உடம்பை வளைக்கத்தானே வேண்டும்?

**’திரு அங்கமாலை’ என்ற பதிகத்தின் தொடக்கம்.

நமஸ்கரிப்பதை இங்கிலீஷில் Bowing என்று சொல்கிறார்கள். Bow என்றால் வில்; அது வளைந்து, அதாவது வளைக்கப்பட்டதாக இருக்கிறது. விறைப்பாக இல்லாமல் நெகிழ்ந்து பணிவாக இருப்பதற்கு அடையாளமாகவே இப்படி உடம்பை வணக்கி மரியாதை பண்ணுவது.

சொல்லிக் கொண்டு போகிறபோதே உள்ளுக்குள்ளே விஷ்யங்கள் புதுசாகத் தெளிவாகிக் கொண்டு வருகிறதில் ஒன்று தெரிகிறது: ‘நமஸ்காரம்’ என்றால் நேர் அர்த்தம் ‘நமனம்’ பண்ணுவது என்றும் ‘நமனம்’ என்றாலும் வளைப்பதுதான் என்றும் சொன்னேன்.

‘நமனம்’ என்றால் ‘வளைவது’ என்பதை வைத்தே ‘நமஸ்காரம்’ என்ற வார்த்தை ஏற்பட்டதாக இலக்கணப்படிச் சொன்னாலும் தத்வார்த்தமாக இன்னோர் உசந்த அர்த்தமும் சொல்வதுண்டு. முன்னவே சொன்னேன்; மறுபடி சொல்கிறேன்; தனக்கில்லை என்று பகவானுக்கே ஸகலத்தையும் அர்ப்பணம் பண்ணும் சரணாகதியை ஸம்பந்தப்படுத்திச் சொல்கிற அர்த்தம். ஒரு கர்மாநுஷ்டானத்தில் முடிந்த முடிவாக “ந மம” என்று சொல்வது வழக்கம்; விதி. அதற்கு, “என்னுடையதில்லை” என்று அர்த்தம். அதாவது, “இந்த அநுஷ்டான பலன் எனக்கில்லை; உனக்கே!” என்று ஈச்வரார்ப்பணம் பண்ணுவதாக அர்த்தம். இந்த மாதிரி, “சரீரம் என்னுடையதில்லை’ உனக்கே ஸமர்ப்பித்தேன்” என்று விழுவதுதானே நமஸ்காரத்தின் பரம தாத்பர்யம்? அப்படி சரீரத்தை “ந மம” பண்ணுவதே ‘நம:’ அதை ஒரு க்ரியையாக, கார்யமாகப் பண்ணுவது ‘நமஸ்காரம்’ என்று தத்வார்த்தம் சொல்வதுண்டு.

நேர் அர்த்தம், இலக்கணப்படியான etymological derivation படி, நமஸ்காரம் என்றால் வளைவதுதான். ‘பிறத்தியாருக்கு வளைஞ்சு குடுக்கணும், தழைஞ்சு குடுக்கணும்’ என்று சொல்கிறதற்கு ஸ்தூல ரூபமாக வளைவதுதான்.  Bowing-ம் இதையேதான் தெரிவிக்கிறது. லோகம் பூரா ஜனஸமுதாயம் அத்தனைக்கும் ஒரே மாதிரி பாவம், கார்யம், வார்த்தைதான்! நாம் எத்தனைதான் வர்க்க பேதங்கள் கொண்டாடிக் கொண்டு பிரிந்து போனாலும் அடிப்படையில் ஒரே குடும்பந்தான்!

கிறிஸ்துவர்களும் துருக்கர்களும் மண்டி போட்டு மரியாதை செலுத்துகிறார்கள். அப்போது காலை வணக்குகிறார்கள். Kneel பண்ணுவது என்று அதைச் சொல்வது, முழங்காலை மடிப்பது, வணக்குவது என்றே நேர்ப்பட அர்த்தம் தருகிறதாக genuflexion என்று அதைச் சொல்கிறார்கள்.

இதிலே ஒரு வேடிக்கை. K-N-E-E என்று ஸ்பெல்லிங் பார்த்தால் ‘க்னீ’ என்று உச்சரிப்பு வரணும். அது ‘கணு’ என்கிற தமிழ் வார்த்தையுடன் ஸம்பந்தப்பட்டதாகத் தெரிகிறது.   Genu என்பதிலோ ‘ஜாநு’ என்ற ஸம்ஸ்க்ருத வார்த்தை ஸம்பந்தம் நன்றாகவே தெரிகிறது. ‘ஜாநு’ என்றால் முழங்கால். ‘ஆஜாநுபாஹூ’ என்றால் முழங்கால் வரைக்கும் கை நீண்டி’ருப்பவன் என்று அர்த்தம். பாஷா சாஸ்த்ரம் தெரிந்தவர்களுக்கு ’ஜ’காரம் ‘க’(ka)காரமாவதுண்டு என்று தெரியும். ‘ஜ’வும், ‘ய’வும் ஒன்றுக்கொன்று மாறுவது ஜாஸ்தி. அபூர்வமாக ‘ஜ’-’க’ மாறுதலும் உண்டு.  ’ka’ சப்தம் வலுத்துத்தானே ‘ga’ ஆனது? அந்த ‘ga’வைக் குறிக்கிற  G(ஜி) என்கிற எழுத்தே ‘ஜ’கர வரிசையைச் சேர்ந்ததாக இருக்கிறது! இதிலிருந்தே ja-ka ஒன்றுக்கொன்று மாறமுடியும் என்று தெரிகிறதோல்லியோ? இதைப் பார்க்கிறபோது ‘ஜாநு’தான் ‘கணு’ஆகி, ஆனால் அது முழங்காலைக் குறிக்காமல் ‘குல்பம்’-   anklet என்று சொல்லுகிற அவயவத்தைக் குறிப்பதாக ஆகிவிட்டதோ என்று தோன்றுகிறது. ‘ஆஜாநுபாஹு’வின் கை முழம் போடுகிறது போல் ஜாநுவில் முடிவதால் அதற்கு ‘முழங்கால்’ என்று பெயர் வந்ததோ என்னவோ? அல்லது இடுப்பிலிருந்து பாதம் (foot) வரையில் இரண்டு முழ நீளம் இருப்பதில் நடுப்பாதியில் அந்த பாகம், இடுப்பிலிருந்தும் ஒரு முழம், பாதத்திலிருந்தும் ஒரு முழம் என்றிருப்பதாலும் அப்படிப் பேர் வந்திருக்கலாம். கரும்பு, மூங்கில் முதலானதில் கணு கணுவாக இருக்கிற மாதிரி காலில் இருப்பதே கணு என்று பொதுவில் சொல்வது. நான் சொல்வது ஸரியானால் கால் கணுவை வைத்துத்தான் கரும்பு முதலானதிலும் கணு என்று ஒன்றைச் சொல்வதாக ஆகும்….

மண்டி போடு நமஸ்கரிப்பது இதர மதஸ்தர்கள் வழக்கம். நம்மிடையிலும் அந்த வழக்கமில்லாமலில்லை.

அதோடு துருக்கர்கள் ‘ஸலாம்’ என்றும் பண்ணுகிறார்கள். கிறிஸ்துவர்களும் கையால் ‘ஸல்யூட்’ அடிக்கிறார்கள்; ஸலாம், ஸல்யூட் இரண்டும் ‘ஸல்’ என்றே ஆரம்பிக்கின்றன. எங்கே பார்த்தாலும் இப்படி ஜனப் பிரிவுகளுக்கிடையில் ஒற்றுமை இருப்பதைப் பார்த்தால் ஸந்தோஷமாயிருக்கிறது.

இன்னும் ஒற்றுமையைக் காட்டுவதாக நம் மடத்திலேயே ‘தீவட்டி ஸலாம்’ என்று ஒன்று நித்யம் நடக்கிறது. தீபம் வைக்கிற ஸமயத்தில் ஜகத்துக்கே ஞான தீபமாக வந்த ஆசார்யாளின் பாதுகைகளுக்கு நமஸ்காரம் பண்ணி, மடத்தின் கணக்கு வழக்குகளை அவருக்கு ஸமர்ப்பிப்பதாக வழக்கமிருந்து வருகிறது. அதற்கு ‘தீபநமஸ்காரம்’ என்பது யதோக்தமான பெயர். நமஸ்காரத்திற்கு உள்ள விசேஷத்தை அது தெரிவிக்கிறது. அப்போது மடத்து யானை ஆசார்ய பாதுகைகளுக்கு சாமரம் போட்டுவிட்டுத் தும்பிக்கையைத் தூக்கிக் கும்பிட்டுவிட்டு, பிளிறியும் நமஸ்காரம் தெரிவித்துவிட்டுப் போகும். ‘தீப நமஸ்காரம்’   என்கிற அந்த அயிட்டத்திற்கு இங்கே பேச்சு வழக்கிலுள்ள பெயர் ‘தீவட்டி ஸலாம்’ என்பதே!

தேசாந்தரங்களில் ஒற்றைக்கை ‘ஸல்யூட்’ இருந்தாலும் நம்முடைய சாஸ்த்ரங்களில் அது கூடாது என்றே இருக்கிறது. “ஏகஹஸ்த ப்ரணாமச்ச ஹந்தி புண்யம் புராதநம்”. அதாவது, ‘ஒரு கையால் நமஸ்கரிப்பது ஏற்கெனவே பண்ணியிருந்த அத்தனை புண்யத்தையும் அழித்துவிடும்’ என்றே இருக்கிறது. முறைப்படி நமஸ்கரித்தால் பாபிக்கும் புண்யம் சேரும் என்று சொல்லும் சாஸ்த்ரத்திலேயே முறைதவறிப் பண்ணுவதால் இப்படி ஆகும் என்றும் இருக்கிறது!

நம் தேசத்திலும் ஸல்யூட் போட்டுத்தானாக வேண்டும் என்று, கட்டாயமாகச் சில ஸமயங்களில் ஆகியிருக்கிறது. இதற்கு முறைத்துக் கொண்டாலும் முறைகேடாகத்தான் தோன்றுகிறது! ‘இப்படிப் பண்ண மாட்டேன். வேறே மாதிரிதான் மரியாதை பண்ணுவேன்’ என்றே ஒரு சண்டை ஆரம்பித்தால் அப்புறம் அங்கே மரியாதை எங்கே இருக்கும்? ஆனாலும் அப்படிப் பண்ணும்போது சாஸ்த்ர வசனம் வேறே மாதிரி இருப்பதை நினைத்து மனஸினால் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, பண்ணலாம்.

ராணுவம், போலீஸ் விஷயம் வேறே. அங்கே தேச பக்தியினால் உயிரையும் கொடுப்பது, தேசத்தில் ஒழுக்கமும், சட்டமும் இருப்பதற்காகப் பாடுபடுவது லக்ஷ்யம். லக்ஷ்யம் மனஸிலும் பாவமாக இருக்கும்தானென்றாலும், இங்கே வீர-தீர பாவத்துக்கே மனஸுக்குள்ளேயும், வெளியிலே தெரிகிற சரீர கார்யத்திலேயும் முடிந்த மட்டில் இடம் கொடுத்தால்தான் அந்த இலாகாக்களில் இருப்பவர்களுக்குத் தங்கள் லக்ஷ்யத்தில் டெடிகேஷனை வளர்த்துக் கொடுப்பதாகும். அதனால், அங்கேயெல்லாம் உடம்பை வளைக்காமல் நேராக – அஞ்சா நெஞ்சத்திற்கே உடம்பை நிமிர்த்தி நிற்பதுதானே body language – ஆக இருக்கிறது? அதற்கேற்க – விறைப்பாக நின்றுதான் Guard of Honour மாதிரியுள்ள மரியாதை அணிவகுப்பு முதலானவற்றையும் செய்யவேண்டியது. என்றாலும் நம் தேசத்து  Guard of Honour –ல் ஒற்றைக்கை ஸல்யூட்டுக்குப் பதில் வேறேதாவது – வீரம்-மரியாதை இரண்டும் கலந்த ஸமிஜ்ஞையாகப் பண்ண வழியிருக்கிறதா என்று பார்த்து அப்படிச் செய்தாலும் தேவலைதான். நம்முடைய பழைய சரித்ரத்தில் ஆராய்ந்து பார்த்து வீரர்கள் எப்படிப் பண்ணினார்கள் என்று தெரிய வந்தால் அதை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒன்று மறந்து விடக்கூடாது. அதாவது வீரபாவத்துக்கு விறைப்பு தேவைதான் என்று படுகிறது; அந்த வீரமும் தேச க்ஷேமத்திற்கேயானதால் அதை அநுமதித்துத்தானாகணும்.

வெளி வேஷம்கூட இதற்கு உதவுவதால்தான் நம் மடத்து (காவலாட்களான) பாராகாரர்களுக்குக்கூடப் போலீஸ் ட்ரெஸ் கொடுத்திருப்பது. நம்முடைய ஸொந்தப் பழைய சரித்ரம், ஸ்வதேசியம் என்று சொல்லிக் கொண்டு இங்கே லக்ஷ்யத்திற்கு ஹானி செய்கிறாற்போல எதுவும் பண்ணிவிடக்கூடாது.

மதாந்தரஸ்தர்கள் (பிறமதத்தினர்) ஸல்யூட்டையும் வளைந்து கொடுக்கும் வணக்க மனப்பான்மைக்கு அடையாளமாகவே ஏற்படுத்திக் கொண்டிருப்பதாகத்தான் தோன்றுகிறது. ஸலாமானாலும், ஸல்யூட்டானாலும் ஒவ்வொரு தினுஸில் வலது கையை மட்டும் வளைத்து – வணக்கி – பண்ணுவதாகத்தானே இருக்கிறது?

துருக்கர்கள் ஸலாம் போடும்போது உடம்பு, சிரஸு இரண்டையுங்கூட ஓரளவு வணக்குகிறார்கள். ஸல்யூட்டில் அந்த வணக்கம் இல்லை.

கர்த்தர், யேஸு, ரொம்பவும் மரியாதைப்பட்டவர்கள் ஆகியோருக்கே மண்டி போடுவது, ஸல்யூட் செய்யாமல் மண்டி மட்டும் போடுவது; அப்போது தலையையும் குனிப்பது – வணக்குவது என்றும் அதற்குக் கீழ் லெவல்காரர்களுக்கு ஸல்யூட் என்றும் கிறிஸ்துவர்கள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். (முன்பே) சொன்னாற் போல மிலிடரிக்காரன், போலீஸ்காரன் ஸல்யூட் போடும்போது உடம்பை வணக்காதது மட்டுமில்லை, ஒரே விறைப்பாக விறைத்துக் கொண்டு பண்ணுகிறான்! (குரலை மிகவும் கனமாகவும், அதிகாரி பாணியிலும் உயர்த்தி) ‘அடென்ஷன்’ என்று சப்தம் போட்டுக்கொண்டு, தப் தப்பென்று பூட்ஸ் ஓசையோடு இவர்கள் விருட்டென்று ஸல்யூட் அடிப்பதைப் பார்த்தால், “மரியாதையா? அதிகார அதட்டலா” என்றே இருக்கும்! மரியாதைதான். அதிலே ஸந்தேஹமில்லை. ஆனால் ப்ராணனையும் கொடுத்து தேசத்தையும் சட்டத்தையும் ரக்ஷிக்கவே இந்தத் துறைக் காவலர்கள் கொஞ்சங்கூட வீர்ய – செளர்யங்களில் (வீர-சூரத்தனத்தில்) தளராமலிருக்கவேண்டுமென்பதால் பவ்யமாக மரியாதை செலுத்தும்போதுகூட வீர சூரத்தனமாகவே அதைப் பண்ண வேண்டும் என்று இப்படி வைத்தார்கள். மற்ற எல்லா இடங்களையும் விட மேலதிகாரிகளுக்கு ரொம்பவும் அடங்கிக் கட்டுப் பாட்டுக்கு வருகிறவர்கள் இவர்களேயானாலும் இங்கேயே பவ்ய நமஸ்காரம் தடாபுடாவாக இருக்கிறது. ஒருவேளை அதனாலேயே இப்படி என்றும் இருக்கலாம். அவர்களுக்கு ‘பவ்யம்’ என்கிறதற்குக்கூட ஸ்வபாவிகமாக உள்ள தழைந்து குழைந்த அபிநயமான body language இருக்க வேண்டாம், அதற்கு விரோதமாகத்தான் பண்ணணும் என்று ‘ரூல்’. அந்த ’ரூல்’படிப் பண்ணுகிறதுதான் நிஜமான அடக்க குணம் என்றே இப்படி வைத்திருக்கலாம்!

ஆனால் பொதுவிலே இப்படியில்லாமல் உள்பாவத்தை ப்ரதிபலிப்பதாகவே வெளி க்ரியை இருக்க வேண்டுமென்றால், பரஸ்பரம் அவை ஒன்றையொன்று போஷித்துக் கொள்ள வேண்டுமானால், தழைவு – குழைவான மனோபாவமென்றால் அதற்கான க்ரியையும் தழைந்து குழைந்து இருந்தால்தான் ஸரியாய் வரும்; பலன் தருவதாக இருக்கும். சரீரத்தை வளைப்பதில்தான் அந்த மனக்குழைவு ப்ரதிபலிக்கிறது. தலையைக் குனிவது, உடம்பை வில்லாய் வளைப்பது – வணக்குவது, காலை வணக்கி மண்டி போடுவது எல்லாம் உள்ளே குழைந்து தழைந்து இருப்பதற்குத்தான் வெளியடையாளம்.

தண்ட நமஸ்காரம், ஸாஷ்டாங்கம் என்று இத்தனை நாழி விசேஷித்துச் சொன்னேனே அதிலேயோ ஒரேயடியாக தழைந்து விழுந்து கிடந்தாலும் குழைவு என்று பார்த்தால் இல்லவே இல்லை!

ஏனிப்படி என்றால் அதற்கு இன்னொரு உசந்த தாத்பர்யமும் இப்போது தோன்றுகிறது; மனஸை நம்முடைய நமஸ்காரத்திற்குப் பாத்திரமாகிறவரிடம் திமிர்தண்டியாக நிறுத்தாமல் அவர் வளைக்கிறபடி வளைக்கக் கொடுப்பதற்கு அடையாளமாகவே வளைந்து வணங்குவது. அப்படிச் சொன்னால் நம்முடைய ஸொந்த மனஸ் என்று ஒன்று இருக்கிறது; அதை அவர் வளைக்கக் கொடுக்கிறோம் என்று ஆகிறது. மனஸென்றே ஒன்றில்லை என்று தள்ளுவதானால்?... மனஸையேதானே ‘நாம் நாம்’ என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்?  ஆனதால் நாமென்றே ஒன்றில்லை என்று மனஸையே வீசி எறிகிற பாவம் என்றால், (சிரித்து) ‘விட்டுக் கடாசு!’ என்று மனஸையே கடாசுவது என்றால் அப்போது மனசில்லாத மரக் கழி மாதிரிதானே உடம்பைத் தள்ளணும்? ‘மரத்துப் போச்சு’ என்றால் மனஸின் உணர்ச்சி அந்த பாகத்தில் ஓடவில்லை என்றுதானே அர்த்தம்? உடம்பை ‘இந்தக் கட்டை’ என்கிறதும் இந்த பாவத்தில்தானே? அப்படி, மனமற்று உள்ள மரத் தடி மாதிரிதான் நீள நெடுக விழ வேண்டும். ஆக, தண்ட நமஸ்கார க்ரியையும் உத்தமமான பவ்ய பாவத்துக்கு வெளியடையாளந்தான்.

மொத்தத்தில் எல்லாவிதமான நமஸ்காரச் செயல்களுக்குமே – அஷ்டாங்கமோ, பஞ்சாங்கமோ, ஸல்யூட்டோ, ஸலாமோ, எல்லாவற்றுக்குமே – அடிப்படை ஒரே உத்தமமான பாவந்தான்: - கீழ்ப்படிவது என்பதுதான். Obeisance என்று (அதைச்) சொல்கிறார்கள்; அதாவது obey பண்ணுவது, கீழ்ப்படிவதுதான்.