அகில தேசாபிமானமும் பிரதேசப் பித்தும் தமிழ்நாடு தவிர நம்முடைய இந்தியா தேசம் முழுக்க எல்லாப் பகுதிகளி

அகில தேசாபிமானமும் பிரதேசப் பித்தும்

தமிழ்நாடு தவிர நம்முடைய இந்தியா தேசம் முழுக்க எல்லாப் பகுதிகளிலும் ‘நமஸ்தே’தான் சொல்கிறார்கள். ‘நமஸ்காரம்’ என்பதில் ‘நம:’ என்பதே வணக்கத்தைத் தெரிவிப்பது. ‘நமஸ்காரம்’ என்பது ’வணக்கம் புரிவது’ என்ற செயலைக் குறிப்பதே. ‘நமோ நம:’ என்கிறதிலும், சிவ பஞ்சாக்ஷரீ, நாராயண அஷ்டாக்ஷரீ முதலானவற்றிலும் ‘காரம்’ சேர்க்காமல் ‘நம:’ மட்டும்தானே சொல்கிறோம்? அதே மாதிரி ஒருத்தரைப் பார்க்கும்போது ‘உங்களுக்கு வணக்கம்’ என்பதுதான் ‘நமஸ்தே’. ‘தே’ என்றால் ‘உங்களுக்கு’. இந்த நமஸ்தேயைத்தான் நம் தேசம் பூராவிலும், தமிழ்நாடு ஒன்று மட்டும் நீங்கலாக, மரியாதை greeting – ஆகச் சொல்கிறார்கள். த்ராவிட ராஜ்யங்களேயான ஆந்திர-கர்நாடக-கேரள ராஜ்யங்களிலும் ‘நமஸ்தே’க்குத் தங்கள் தங்கள் தாய் பாஷையான தெலுங்கு-கன்னட-மலையாள பாஷைகளில் வார்த்தை சொல்லாமல் ‘நமஸ்தே’-யைத்தான் ‘அடாப்ட்’ செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழில் ‘வணக்கம்’ இருக்கிற மாதிரித் தெலுங்கில் ‘ம்ரொக்க’ என்று வார்த்தை இருக்கிறது. என்றாலும் அவர்கள் ரொம்பவும் அபூர்வமாகத் தான் அந்த வார்த்தையை உபயோகிப்பது. பொதுவாகச் சொல்கிறது ஸம்ஸ்க்ருத ‘நமஸ்தே’தான். அதையே ‘நமஸ்காரமண்டி’ என்று மரியாதையாய் சொல்வார்கள். தமிழ் தேசத்தில் மட்டும் பாஷா த்வேஷம் காரணமாகவே ‘ஆல்-இன்டியா கரென்ஸி’யாக உள்ள ‘நமஸ்தே’, ‘நமஸ்கார’ங்களைத் தள்ளிவிட்டு ‘வணக்கம்’ சொல்வதாக வழக்கம் கொண்டு வந்திருக்கிறார்கள். இங்கேயும் முன்னேயெல்லாம் பொதுவாகப் பேசும்போதும் எழுதும்போதும் ‘நமஸ்காரம்’தான் உபயோகப்படுத்திக் கொண்டிருந்தார்கள். நமஸ்காரம்-நமஸ்தே இரண்டுக்கும் ஒரே base தானே? அப்படித்தான் இங்கேயும் பழக்கம் இருந்தது. அப்புறந்தான் வேண்டுமென்று ‘வணக்க’த்தைக் கொண்டு வந்திருப்பது. அது அழகான, அர்த்த புஷ்டியான வார்த்தை தான் என்றாலும் அதைக் கொண்டு வந்திருக்கும் உத்தேசம் நல்லதாக இல்லை. பிரதேசாபிமானம் இருக்க வேண்டியது தான். ‘ரீஜனல் கல்ச்சர்’ என்பதாக ஒவ்வொரு பிராந்தியத்திலும் விசேஷமாக இருக்கிற கலாசார மரபுகளையும் பேணிக் காப்பாற்றத்தான் வேண்டும். ஆனாலும் ஸர்வதேசியமாக இருந்துகொண்டிருக்கிற விஷயங்களிலும் வேண்டுமென்று தேசியத்தைத் தள்ளிப் பிரதேசத்தைக் கொண்டு வருவது முறை தவறான பிரதேசாபிமானமேயாகும். இதைப் பிரதேச அபிமானம் என்பதை விடப் பிரதேசப் பித்து, மிஞ்சிப் போகிறபோது பிரதேச வெறி என்றே சொல்ல வேண்டும்.

ஆனாலும் பிரதேசாபிமானம் என்பதன் பேரில் ஒரு பிராந்தியத்தில் நடப்பதைத் தாங்களும் மதித்ததாகக் காட்டிக் கொள்ள வேண்டும்; வோட்டுப் பெட்டியை உத்தேசித்தும் எல்லாப் பிரதேச ஜனங்களையும் ‘ப்ளீஸ்’ பண்ண வேண்டும் என்பதால் மற்ற ராஜயத்துக்காரர்களும் வடக்கத்தித் தலைவர்களும்கூட இங்கே வந்து கூட்டங்களில் பேசுகிற போது ‘வணக்கம்’ என்றே சொல்வதாகத் தெரிகிறது. ‘வணக்கம்’ என்று தப்பாகவாவது சொல்பவர்களும் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன்!

வெளியிலே இப்படிச் சொன்னாலும் உள்ளுக்குள்ளே அவர்களுக்கெல்லாம் இதிலே ஒரு வருத்தம், நம்மைப் பற்றி ஒரு குறை இருக்கிறது. என்னிடமே ஒருத்தர் அதைத் தெரிவித்தார். தேசம் பூராவும் ஒரே ரீதியில் போய்க் கொண்டிருக்கும் விஷயங்களில், அந்த mainstream-ல் சேராமல், கொஞ்சம் துண்டித்துக் கொண்டு இந்த மாதிரிச் சின்ன அம்சங்களில் மாறுதலாகப் போவதுங்கூட ஒருமைப்பாட்டுக்குக் கொஞ்சம் ஊனம் செய்கிற மாதிரித்தான் என்று அவர் சொன்னார். ‘வணக்கம்’ விஷயமாகவும் அவர் உதாரணம் காட்டிச் சொன்னாரென்றாலும் அவர் முக்யமாகச் சொன்னது தமிழ் அர்ச்சனை பற்றித்தான்.