புருஷர்களும் பஞ்சாங்க நமஸ்காரம் செய்யலாம் ஸ்த்ரீகள் பஞ்சாங்கமாகத்தான் நமஸ்கரிக்கணும்; அஷ்டாங்கம் க

புருஷர்களும் பஞ்சாங்க நமஸ்காரம் செய்யலாம்

ஸ்த்ரீகள் பஞ்சாங்கமாகத்தான் நமஸ்கரிக்கணும்; அஷ்டாங்கம் கூடாது என்று வைத்திருக்கிறது. ஆனால் புருஷர்கள் பஞ்சாங்க நமஸ்காரம் பண்ணக்கூடாது என்று இல்லை. இரண்டு தினுஸாகவும் அவர்கள் பண்ணலாம். வடக்கே அநேகமாகப் பஞ்வாங்கமாகத்தான் பண்ணுகிறார்கள்.

தர்ம சாஸ்திரங்களிலும் அஷ்டாங்கம், பஞ்சாங்கம் என்ற இரண்டு நமஸ்கார வகைகளையும் புருஷர்களுக்கானதாகவே கொடுத்திருக்கிறது. ஸுந்தர மூர்த்தி நாயனாரே அப்படி இரண்டு தினுஸாகவும் பண்ணினார், ‘எட்டினொடு ஐந்துமாகும் உறுப்பினால் பணிந்து வணங்கினார்” என்று சேக்கிழார் சொல்லியிருக்கிறார்.**

எல்லா விதமான கர்மாக்களையும் விதிப்பதாகப் பல ரிஷிகள் எழுதியுள்ள கல்பங்கள் என்ற அநேக சாஸ்த்ர நூல்களில் ஒன்றில் தெய்வங்களையும், தெய்வ ஸமானமான குருமார்-பித்ருக்கள்-மஹான்கள் ஆகியோருக்கு மாத்திரமே ஸாஷ்டாங்க நமஸ்காரம் என்றும், மற்ற எல்லப் பெரியவர்களுக்குமே பஞ்சாங்கம் தான் என்றுங்கூட இருக்கிறது. ஆனால் மற்ற கல்பங்களில் அப்படியில்லாததால் அந்த மாதிரித்தான் பண்ண வேண்டுமென்றில்லை. இப்போது வழக்கத்தில் மிகவும் அதிகமாகவும் உள்ளபடியே பண்ணலாம். பஞ்சாங்கமாகப் பண்ணினாலும் தப்பில்லை என்பதற்காகச் சொன்னேன்.

ரொம்பக் குறுகலான இடத்தில் ஒரு மஹான் இருக்கிறார். ஒரு சந்நிதி அங்கே இருக்கிறது என்றால் அப்போது அங்கே உடம்பை முழுசாகக் கீழே போட்டு ஸாஷ்டாங்கம் பண்ணுவது ச்ரமந்தானே? அம்மாதிரி இருக்கும்போது பஞ்சாங்கமாகப் பண்ணலாம்.

வணக்கம், உடம்பை வளைத்துப் பண்ணுவது என்ற அடிப்படையில் தோன்றிய வார்த்தை. இப்போது தமிழபிமானத்தில் அந்த வார்த்தையே ‘அஃபீஷிய’லாகியிருக்கிறது; ஸர்வ வ்யாபகமாயிருக்கிறது. ‘வணக்கம்’ ரொம்பவும் அழகான வார்த்தைதான். ஆனால் இந்த வணக்க க்ரியை எதற்கு ரூபகமாக இருக்கிறதோ அந்த வளைந்து கொடுக்கும் ஹ்ருதய பாவத்துக்கு நேர் எதிரான பாஷா த்வேஷத்திலேயேதான் இப்போது இந்த வார்த்தையைக் கொண்டுவந்திருப்பது என்பதைப் பார்க்கும்போது வருத்தமாகத்தான் இருக்கிறது.

*……. எட்டினோடு

ஐந்தும் ஆகும் உறுப்பினால்

பீடு நீடு நிலத்தின் மேல் பெருகப்

பணிந்து வணங்கினார்.  ( பெரியபுராணம், 3257)