மனிதனின் அக-புற உயர்வு-வீழ்ச்சிகள் ’மற்ற ப்ராணி வர்க்கங்கள் அத்தனையும் குறுக்கே வளர்கிற ‘திர்யக்’ ஜந

மனிதனின் அக-புற உயர்வு-வீழ்ச்சிகள்

’மற்ற ப்ராணி வர்க்கங்கள் அத்தனையும் குறுக்கே வளர்கிற ‘திர்யக்’ ஜந்துக்கள்; மநுஷ்யன் ஒருத்தன் தான் காலுக்கு மேலேயும் உடம்பு, சிரஸு என்று உயரவாட்டில் ‘ஊர்த்வமுக’மாக வளர்கிறவன்; ஸ்ருஷ்டி வர்க்கங்களிலேயே இவன் தான் உசந்தவன் என்பதால் இப்படி இவனைப் படைத்திருப்பது’ என்று பெருமை சொல்கிறதுண்டு. ஆனால் இந்த உசத்தி அஹம்பாவத்திலேயும் தற்பெருமையிலேயும் கொண்டு விட்டால் இவன் மிருக ஜாதிக்கும் கீழே போக வேண்டியதுதான்! நம்முடைய சிந்தனை, வாழ்க்கை முறை எல்லாம் மற்ற ப்ராணிகளுடையதைப் போல இந்த்ரிய ஸெளக்யங்களோடு முடிந்து போகாமல் உசந்ததாக இருக்க வேண்டுமென்பதற்காகத்தான் பகவான் நம்மை இப்படிப் படைத்திருப்பதாகப் புரிந்து கொண்டு அதற்கான ப்ரயாஸைகளைப் பண்ணி இன்னும் உசந்த ஸ்திதிக்குப் போகணுமே தவிர, தற்பெருமைப் பட்டுக் கொண்டு கீழே விழுந்துவிடக் கூடாது.

தற்பெருமையை என்னவென்று சொல்கிறோம்? ‘தலைக் கனம்’, ‘மண்டைக் கனம்’ என்கிறோம். குறுக்கு வாட்டில் வளருகிற ப்ராணியாயிருந்து அப்படி மண்டைக்கனம் ஏறினால் பரவாயில்லை; ‘பாலன்ஸ்’ கெட்டுப் போகாமல் சமாளித்துக் கொண்டு விடலாம். ஆனால் உயரவாட்டில் இப்போது நாம் இருக்கிற தினுஸில் மண்டைக் கனம் ஏறினால்… ‘டாப்-ஹெவி’ ஆனால் என்னவாகும்? ‘ஈக்விலிப்ரியம்’ என்கிற ஸமசீர் நிலையே கெட்டுப் போய், குலைந்து போய், தடாலென்று விழ வேண்டியதுதான்! பகவான் நாம் உயரவாட்டில் வளரும்படி வைத்து சிரஸை உச்சியில் வைத்திருக்கிறானென்றால் ஒரு போதும் தலைக் கனம் ஏறாமல், பணிவாயிருந்து நம்மை விழுவதிலிருந்து – வீழ்ச்சியிலிருந்து – காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். ‘பதிதன்’, ‘பதிதை’ என்று ரொம்பவும் நிஷித்தமாகச் சொல்கிறோமே, அதற்கு நேர் அர்த்தமே விழுந்து விட்டவர்’ என்பதுதான்.

அப்படிக் கீழே விழாமலிருப்பதற்கு நமஸ்காரம் என்பதாக வினயத்தோடு கீழே விழுவதே ஸஹாயம் பண்ணும்! நிற்கிறவன் விழுந்து அடிபட்டுக் கொள்ளலாம். உட்கார்ந்திருக்கிறவன்கூட அப்படியே சாய்ந்து அடி, கிடி படலாம். பூமியோடு பூமியாக சரீரத்தைப் போட்டுக் கிடக்கிறவன் விழவோ, சாயவோ முடியுமா?

உயரம் ஜாஸ்தி ஆக ஆக, விழுந்தால் படுகிற அடியும் ஜாஸ்தி ஹானி உண்டாக்குவதாக இருக்கும். உசந்த ஸ்தானம் என்பதன் கதியும் அப்படித்தான். அங்கே இருக்கிறவன் தப்புப் பண்ணி இடறி விழுகிறபோதுதான் அப்புறம் எழுந்திருக்கவே முடியாமல் – அதாவது, அந்த உசத்தியை மறுபடி அடையவே முடியாதபடி – ஊர் உலகமெல்லாம் சிரித்து அவனை மட்டந்தட்டி வைத்து விடுகிறது.