நேரேயுள்ள பெரியோரிடமே அதிக மரியாதை இன்னொரு வித்யாஸங்கூட – இப்போது சொன்னேனே அந்த வித்யாஸத்துக்கே வித

நேரேயுள்ள பெரியோரிடமே அதிக மரியாதை

இன்னொரு வித்யாஸங்கூட – இப்போது சொன்னேனே அந்த வித்யாஸத்துக்கே வித்யாஸம் மாதிரியாக! நான் சொன்ன வித்யாஸத்திலிருந்து ப்ரத்யக்ஷத்தில் தெரிகிற பெரியவர்களிடம் நாம் காட்டும் மரியாதையைவிட ஜாஸ்தியாகப் பூர்விகப் பெரியவர்களிடமும் தேவதைகளிடமுந்தான் காட்ட வேண்டும் என்று தோன்றலாம். ஆனால் யதார்த்தத்தில் எப்படி இருக்கிறது? நீங்களே எப்படிப் பண்ணுகிறீர்களென்று கொஞ்சம் ஆலோசித்துப் பாருங்கள். தேவதா மூர்த்திகளிடம் பக்தி என்பது யதேஷ்டமாக இருப்பது வாஸ்தவம். கைகட்டி வாய் புதைத்துக் கொண்டா போகிறோம்? மரியாதையும் இல்லாமலில்லை. ஆனாலும் அதுதான் முக்யமென்று இருக்கவில்லை. பக்தி என்பது இன்னவென்றே வரையறுத்து லக்ஷணம் சொல்ல முடியாமல் இருக்கிற ஒன்று. அது அன்பின் அநேக ரஸபாவங்கள் நிரம்பியதாக இருக்கிறது. பக்திக்குப் பாத்திரமாகிற தேவதையிடம் நம் ‘அப்ரோச்’சையும் வரையறுத்து லக்ஷணம் சொல்ல முடியவில்லை. நாம் எப்படி ‘அப்ரோச்’ பண்ணுகிறோம் என்று நமக்கே புத்திபூர்வமாகத் தெரியாமல் உண்டாகிற ஏதோ ஒன்று என்றுதான் அதைச் சொல்லணும். அதிலே மரியாதையும் ஒரு அம்சமாக இருக்கும். ஏன், இல்லாமலும் இருக்கும்! ஒரே ஸ்வாதீனத்தில் மரியாதையே பார்க்காமல் நிந்தா ஸ்துதிகூடச் செய்கிறதுண்டாச்சே!

பூர்விக புண்ய புருஷர்களைப் பார்த்தால் அங்கே நாம் இத்தனை ஸ்வாதீனம் எடுத்துக் கொள்வதாக இல்லை. தேவதைகளிடம் காட்டியதைவிட இவர்களிடம் மரியாதை அம்சம் முன்னுக்கு வந்து தெரிகிறது. ஆனால் அதுதான் முக்யமென்று சொல்வதற்கில்லாமல் பக்தியின் மற்ற ரஸபாவங்களையும் அதற்கு ஸமமாகக் காட்டுகிறோம்.

நம் காலத்தில் நமக்கு முன்னே கண்ணுக்குத் தெரிகிற பெரியவர்களுக்கு வந்தால், இங்கேதான் மரியாதை என்ற அம்சம் ரொம்பவும் முக்ய ஸ்தானத்தில் இடம் பெறுகிறது. தெய்வசக்தி என்பதைப் பற்றிய நம் கணக்குப்படி – அது ஸரியா, தப்பா என்பது வேறு விஷயம்;  ஆனால் அதுதானே நடை முறையில் இருக்கிறது? அந்தக் கணக்குப்படி – பார்த்தால் தெய்வங்கள், பூர்வகால மஹான்கள், நம் காலத்துப் பெரியவர்கள் ஆகிய மூன்று பேருக்கு எப்படி மார்க் போடுகிறோமோ அதற்கு ‘இன்வர்ஸ் ப்ரபோர்ஷ’னிலேயே (எதிரிடை விகிதாசாரத்திலேயே) நாம் அவர்களிடம் காட்டுகிற மரியாதை இருக்கிறது! ப்ரியம், பந்துத்வம், ஸ்வாதீனம் என்றெல்லாம் இருக்கிற பக்தியம்சங்கள் ப்ரத்யக்ஷப் பெரியவர்களிடம் தூக்கலாக இல்லாமல், அதனாலேயேதானோ என்னவோ, மரியாதையம்சம் இங்கேதான் தலைதூக்கிக் கொண்டு முக்யமாக நிற்கிறது.

மதஸம்பந்தமாகப் பெரியவர்கள் என்றிருக்கிற ஸ்வாமியார்கள் மட்டுந்தான் என்றில்லை; அரசியல் ப்ரமுகர்கள், கட்சித் தலைவர்கள், அறிவாளிகளாக இருக்கப்பட்டவர்கள், கலைகளில் சிறப்புப் பெற்றவர்கள், பணபலம் படைத்தவர்கள் என்று யாரை எடுத்தாலும், எந்தத் துறையிலும் பெரியவர்களாக உள்ளவர்களிடம் மரியாதைதான் நம் அப்ரோச்சில் முக்யமாயிருக்கிறது.

‘மரியாதை’ என்பதை விட ‘ரெஸ்பெக்ட்’ என்று சொன்னால் இந்த விஷயம் நன்றாகப் புரியும். தேவதைகளுக்கு ‘ரெஸ்பெக்ட்’ சொல்வதுண்டா? ‘Respected’ போடுவதுண்டா? பூர்வகாலப் பெரியவர்களுக்கும் – நம்முடைய ஆசார்யாள், வ்யாஸாசார்யாள் மாதிரியானவர்களுக்கும் ‘respected’ போடுவதில்லை; ‘adored’ என்றுதான் போடுகிறோம்.  Adoration என்பது பூஜிப்பது. அதில் ரெஸ்பெக்ட் ஒரு அம்சந்தான்; இன்னும் என்னென்னவோ அதற்குள் உண்டு. ப்ரதயக்‌ஷத்திலே பார்க்கிற பெரியவர்கள் விஷயத்தில்தான் ‘ரெஸ்பெக்ட்’, ‘ரெஸ்பெக்டெட்’ எல்லாம் முதல் அம்சமாக வருகிறது.

தேவதைகள் எத்தனை உசத்தியாயிருந்தாலும் அந்த உசத்தி அவர்களுக்கு ஸ்வாபாவிகம் (தன்னியல்பாயிருப்பது) என்பதால் அதைப் பெரிசாக எடுத்துக் கொண்டு நாம் விசேஷமாக மரியாதை கொள்ளுவதில்லை. முற்கால மஹாபுருஷர்களையும், “தெய்வாம்சம் பெற்றவர்கள்; அதனால் உசந்தவர்களாக இருக்கிறார்கள்” என்று லேசாக எடுத்துக் கொண்டு போய்விடுகிறோம். நம் மாதிரி மநுஷ்யர்களாக நமக்கு மத்தியிலே இருந்து கொண்டே நம்மைவிட உசந்தவர்களாக ஆத்மாநுபவத்திலேயோ, அறிவிலேயோ, பணம்-பதவியிலேயோ இருக்கும் பெரியவர்களைப் பார்க்கும்போதுதான் நம்முடைய வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும் நமக்கில்லாத உயர்வை அடைந்திருக்கிறார்களே என்பதால் மரியாதை விசேஷமாக உண்டாகிறது. அதிலும் ஆத்மா, மதம், ஸ்வாமி என்று ஸம்பந்தப்பட்டவர்களிடம் நன்றாகப் பூரித்துக் கொண்டு உண்டாகிறது. அதனால் ஸ்வாமி, புராண புருஷர்கள், பூர்வகாலப் பெரியவர்கள் முதலியவர்களை விடவும் இவர்களுக்குச் செய்யும் நமஸ்காரத்தில்தான் ‘நாம் சின்னவர்’ என்ற எளிமை ஆழமாக ஏற்படுகிறது.