உயர் ஸ்தானம்; ஆயின் கூலி வேலை! வெளியிலே பீடம் போட்டுக் கொண்டு “ஸ்தானம்’ கொண்டாடிக் கொண்டாலும் வாஸ்தவத

உயர் ஸ்தானம்; ஆயின் கூலி வேலை!

வெளியிலே பீடம் போட்டுக் கொண்டு “ஸ்தானம்’ கொண்டாடிக் கொண்டாலும் வாஸ்தவத்திலே பாரத்தைத் தூக்கிக் கொண்டு கூலி வேலை செய்கிறதுதான்! கூலி வேலை செய்கிறவனையே இங்கிலீஷில் cooly என்கிறார்கள்! அப்படித்தான் நாங்களும்! இன்னொருத்தனுக்காக அவன் பாரம் சுமக்கிற மாதிரிதான் நாங்களும்! அவன் உடம்பாலே பாரம் தூக்குகிற மாதிரி நாங்கள் உங்கள் நமஸ்காரத்தை மனஸாலே தூக்கி, உங்களுக்காக நாங்கள் செய்கிற ப்ரார்த்தனையின் ‘வெயிட்’’டையும் அதோடு சேர்த்து நாராயணனிடம் கொண்டு இறக்க வேண்டும். ஆனால் ஒரு கூலித் தொழிலாளிக்குத் தெரிகிற ஸத்யம் எங்களுக்குத் தெரியுமா என்பதே கேள்வி! தான் தூக்குகிற ஸாமான் தன்னுடையதில்லை, இன்னொருத்தனுடையதைத்தான் தூக்குகிறோம்; அதை இறக்க வேண்டிய இடத்தில் இறக்க வேண்டியதே தன் தொழில் என்று அவனுக்குத் தெரிகிற அந்த ஸத்யத்தைத்தான் சொன்னேன்! நாங்கள் இந்த ஸாமானை – நமஸ்காரம் என்கிற ஸாமானை – இறக்க வேண்டிய அந்த நாராயண பதத்தில் இறக்காவிட்டால் அந்த அபசாரத்திற்கு அவன் ‘கூலி கொடுத்து விடுவான்’! கூலிக்காரன் தூக்கும் ஸாமான் அவனுக்கு பாரமாயிருக்கிற மாதிரி நமஸ்காரத்தையும் எங்களுக்குப் பண்ணும் ஸம்மானமாக நினைக்காமல் பாரமாகத்தான் தெரிந்து கொள்ள வேண்டும்.

“ஸம்மாநாந் மரணாதிவ” என்று வித்யாரண்யாள் மஹாபாரத கொடேஷன் கொடுத்து ஸந்நியாஸிகளை எச்சரித்திருக்கிறார். அதாவது, நிஜ ஸந்நியாஸியென்றால் அவன் பாராட்டு, கெளரவம் முதலியவற்றால் ஸம்மானிக்கப்படுவதை மரணமாக நினைக்கவேண்டும். ‘மரணாதிவ’ என்பதற்கு ‘நரகாதிவ’ என்று ஒரு பாடபேதம் இருப்பதையும் சொல்லி, இன்னுங்கூட பலமாகவே பயமுறுத்தி அதை (ஸம்மானத்தை)த் தள்ளும்படிப் பண்ணுகிறார். ‘மரணம்’ ஒன்றும் தெரியாமல் ஆகிவிடும் ஸ்திதிதான்; நரகமோ சித்ரவதையே அல்லவா?

அது நிஜ ஸந்நியாசிக்கு! அவன் ஸம்மானத்தை மரணமாக நினைக்க வேண்டும் என்று சொல்லியிருப்பதற்கு முந்தி ஜன ஸமூஹத்தைப் பாம்பாக நினைத்து பயப்பட்டு ஒதுங்கி ஓடிப் போய் விடணும் என்று இருக்கிறது: ‘அஹேரிவ கணாத்-பீத: ஸம்மாநாந் மரணாதிவ’!

நாங்களோ ஜன ஸமூஹத்திற்கு நல்லது சொல்லி, அவர்களை நல்லது பண்ணும்படித் தூண்டிக் கொண்டிருக்கவே ஏற்பட்டவர்கள்.  ஆனபடியால் ஜனஸமூஹத்திலேயே நன்றாக உழன்று கொண்டிருக்க வேண்டியவர்கள். அப்படி இருக்கும் போது குரு, பீடாதிபதி, மடாதிபதி என்றெல்லாம் பெத்தப் பெயர் கொடுத்து உட்கார்த்தி வைத்திருக்கும் எங்களை ஜனஸமூஹம் ஸம்மானிக்கத்தானே செய்யும்? ஸ்தான கெளரவம், பீட கெளரவம், என்று சொல்லிக்கொண்டு, நாங்களே எங்களை எப்படி எல்லாம் ஸம்மானிக்க வேண்டும் என்று கண்டிஷன்கள் போட்டுக் கொடுத்துத்தான் எங்கேயாவது போகிறோம்! இருக்கிற இடத்திலேயும் எங்களுக்கு இப்படியிப்படி மரியாதை பண்ணினால்தான், பார்க்க வரலாம் என்று வைத்துக் கொண்டிருக்கிறோம்!

இதைத் தவிர்க்க முடியாதுதான். சிஷ்யலோகம் என்பது குருபீடம் என்று உள்ள ஒன்றில் இருப்பவரிடம் பணிவு, பவ்யங்களுடன் இருந்தால்தான் குரு செய்யும் உபதேசமும் அவருடைய அருளும் சிஷ்யர்களுக்குள் நன்றாக இறங்கும். ஆகையால் அவர்கள் மரியாதை – அதாவது ஸம்மானம் – பண்ண வேண்டியதுந்தான்; நாங்கள் அதை நிராகரிக்காமல் ஏற்றுக் கொள்கிற மாதிரியும் இருக்க வேண்டியதுதான்!...

ம்மானத்தை ‘ஸன்மானம்’ என்று தப்பாகச் சொல்லி வருகிறார்கள். இப்போது வடக்கத்திய ஸர்க்கார்கள் உள்படப் பல ஸ்தாபனங்கள் ‘காளிதாஸ் ஸம்மான்’ என்கிற மாதிரி மரியாதைகள் செய்வது நமக்கும் நன்றாகத் தெரிந்த பிற்பாடும் ‘ஸன்மானம்’ என்றே தப்பாக (தமிழ்நாட்டுப்) பத்திரிகைக்காரர்கள் எழுதி வருகிறார்கள். அதோடு, இந்த ‘ஸம்மான்’களில் கெளரவிப்புதான் முக்யம், இரண்டாம் பக்ஷமாக த்ரவ்ய ஸம்மானமும் இருக்கிறது என்றே தெரிகிற போதிலும், இங்கே (தமிழ்நாட்டில்) த்ரவ்யமாகத் தருவதை மட்டுமே “ஸன்மானம்’ என்றும் சொல்லியும் எழுதியும் வருகிறார்கள்…

வெறும் – அதாவது நிஜ – ஸந்நியாஸியாயில்லாமல், குரு பட்டம் கட்டிக்கொண்டும் ஸந்நியாஸிகள் என்று இருக்கும் நாங்கள் நீங்கள் ஸம்மானம் செய்யக்கூடாது என்று தடுப்பதற்கில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.

என்ன செய்யணுமென்றால், நீங்கள் எங்களை ஸம்மானிக்கவும் நாங்கள் ‘அலவ்’ செய்ய வேண்டும். அதே சமயம் அந்த ஸம்மானத்தை நாங்கள் ‘அக்ஸெப்ட்’ செய்து கொள்ளவும் கூடாது!

“அதெப்படி முடியும்? பரஸ்பர விருத்தமாக (ஒன்றுக்கொன்று முரணாக) இருக்கே!” என்றால்-

கொஞ்சம் திரிசமன் பண்ணணும்! முன்னேயே சொன்னாற்போல் குருவுக்கு சிஷ்யாள் ஸம்மானம் பண்ண வேண்டியதே என்பதை மதித்தும், அதோடு, ‘நாம் செய்யும் ஸம்மானத்தை ஸ்வாமியார் ஏற்றுக்கொண்டார்’ என்று நீங்கள் நினைத்துத் திருப்திப்படும்படியாகவும் நாங்கள் அதை ‘அக்ஸெப்ட்’ பண்ணிக் கொண்டாற் போலவே காட்டிக் கொள்ள வேண்டும். அதாவது வெளியிலே காட்டுவது இப்படி; காட்டுவதுதான் இப்படி. உள்ளுக்குள்ளே எங்கள் பாவம் எப்படியிருக்கணுமென்றால், ‘லோக வ்யவஸ்தைக்காகவே இப்படிப் பண்ணவேண்டியிருக்கிறது. வாஸ்தவத்திலே இந்த ஸம்மானம் நமக்கே சேருவதாக நாம் நினைத்தோமோ, அதோகதிதான், நாராயணன் பெயரில் – வாஸ்தவமாக அவன் பெயரைச் சொல்லிக் கொண்டு – அவனுக்கு ஸம்மானத்தை சேர்ப்பிக்கும் கூலிக்காரனாகவே இதை ஏற்றுக் கொண்டு சேர்ப்பித்துவிட வேண்டும் – ஸமர்ப்பணம் பண்ணிவிட வேண்டும்’ என்றே இருக்க வேண்டும்.

எந்த விதத்தில் மரியாதை பண்ணினாலும் அது ஸம்மானந்தான் என்று சொன்னேன். நல்ல வேளையாக எங்களுக்குப் பட்டம், பிருது (விருது) கொடுத்து ஸம்மானம் பண்ணுவதற்கு இடமில்லாமல் வைத்திருக்கிறது – ‘பகவானுக்கு நாம் பட்டம் கொடுப்பதா? அப்படித்தான் குருவுக்கும்’ என்பதால், த்ரவ்ய ஸம்மானம் நிறையவே செய்யப்படுகிறது. இல்லாவிட்டால் மடம் எப்படி நடக்கும்? எங்கள் ஆதிகுருவான நாராயணனின் ஆஜ்ஞையிலேயே நடக்கிற மடம் என்பதால் – எந்த ஸ்தாபனமும், வீடும், நாடும் எல்லாமுமே அவன் நடத்தித் தானே நடக்கிறது? அதில் இது கொஞ்சம் கூடுதலாகவே, “of, for, by”** என்கிறார்களே,  அப்படி அவனுடையதாக, அவனுக்காக, அவனால் நடத்தப்படுவதால் – அவன் பேரிலேயே அந்த த்ரவ்ய ஸம்மானத்தை அங்கீகரிக்கிறோம். நீங்களாகக் கொடுக்காவிட்டாலும் அதிகாரப் பிச்சையாகக் கேட்டே வாங்கிக் கொள்கிறோம்!

நாம் பார்த்துக் கொண்டிருக்கும் விஷயமான நமஸ்கார ஸம்மானத்தை, “இது நமக்குக் கொஞ்சங்கூட உரிமைப் பண்டமில்லை. நம் மூலமும் எதாவது நல்லது நடந்தால் அப்படி நடத்துவிக்கும் அந்த நாராயணனுக்கே உரிய ஸாமான் இது. அதை நாம் ஒரு கூலியாகத்தான் தாங்குகிறோம்” என்பது புரிந்து கொண்டு வாங்கிக் கொள்ள வேண்டும். பக்தர்களிடம் ப்ரியத்தினால் அந்த பாரத்தை ஸந்தோஷமாகவே தாங்கி – தாற்காலிகமாகத் தாங்கி – பகவானிடம் இறக்க வேண்டும். இறக்கத்தான் வேண்டுமென்றாலும் தாங்குகிற மட்டும் பாரம் பாரம் தான். அப்படி இறக்காமல் எங்களுக்கே என்று துரார்ஜிதம் பண்ணிக் கொண்டாலோ அது நிரந்தரமான பாப பாரமே ஆகி விடும்.

** ஜனநாயகம் மக்களுடையது, மக்களுக்கானது, மக்களாலேயே நடத்தப்படுவது என்று கூறுவதை நினைவு கூர்ந்து மொழிந்தது.

நமஸ்காரம் பண்ணப்படுகிறவன் கதை இத்தனை ‘ரிஸ்கி’யாக இருக்கிறது!