அஞ்சலிக் கை, ஆசி அபிநயமாக ’ஸ்தானம்’ படுத்துகிற பாடு, இப்படிப் பண்ணுகிற ப்ரார்த்தனையைக் கூட எங்கள் மாத

அஞ்சலிக் கை, ஆசி அபிநயமாக

’ஸ்தானம்’ படுத்துகிற பாடு, இப்படிப் பண்ணுகிற ப்ரார்த்தனையைக் கூட எங்கள் மாதிரி இருக்கிறவர்கள் கையினாலே அஞ்ஜலி பண்ணிச் செலுத்த முடிவதில்லை! நீங்கள் எங்களுக்கு நமஸ்கரிக்கிற போது நாங்களே ஆசீர்வாதம் பண்ணுவோம், பண்ண வேண்டும் என்று தான் எதிர்பார்க்கிறீர்கள். நாங்களும் இன்னொருத்தருக்கு நமஸ்காரம் பண்ணி அந்த ஆசீர்வாத source-ஐத்தான் tap பண்ணப் பார்க்கணும் என்றால் உங்களுக்கு ஏமாற்றமாயிருக்கும். பண்ணிய நமஸ்காரத்திற்கு, யாருக்குப் பண்ணினோமோ அவரிடமிருந்தே உடனே ஆசீர்வாதம் வந்தால்தானே ஆறுதலாயிருக்கும்?

நாராயணன் கண்ணுக்குத் தெரியாதவன், அவன் பண்ணும் ஆசீர்வாதம் காதுக்குக் கேட்பதில்லை என்பதால்தான் கண்ணுக்கும் காதுக்கும் தெரிகிறவரிடம் போய்ப் பார்த்து ஆசீர்வசனம் பெறணும் என்றே ஜனங்கள் பெரியவராக நினைக்கிற ஒருவரிடம் போவது.

ஆனால் பக்குவம் பெற்றவர்களாகவும் ஸ்ம்ப்ரதாயம் தெரிந்தவர்களாகவும் பக்தர்கள் இருந்தால் அவர்களும் அந்த நாராயணனின் ப்ரதிநிதியே இவர், இவரை நமஸ்கரித்தால் அது அவனையே சேரும், அவனுடைய ஆசீர்வாதமே இவர் மூலமாய் வரும் என்ற எண்ணத்தோடு போய் “நமோ நாராயணாய” என்று சொல்லித்தான் அவரை நமஸ்கரிக்கணும். (அஷ்டாக்‌ஷரீ மந்த்ர) உபதேசமானவர்களாக இருந்தால் முதலில் ப்ரணவம் சேர்த்து “நமோ நாராயணாய” சொல்லி நமஸ்கரிக்கணும்.

எதனாலோ நடைமுறையில் அப்படிக் காணவே காணோம்! நல்ல வழக்கம். (அதற்குப்) புத்துயிர் கொடுத்தால் தேவலை. நமஸ்கரிக்கிறவன் இப்படி நாராயண நாமாவைச் சொன்னதாலாவது நமஸ்காரம் பெறுகிறவனுக்கும் அது நினைவு வந்து அந்த நாராயணன் ஸொத்துதான் நமஸ்காரம் என்ற ப்ரக்ஞையும் உண்டோகுமோல்லியோ?

அதெப்படியானாலும், ஒருத்தருக்கு நமஸ்காரம் பண்ணினால் அவரிடமிருந்து அநுக்ரஹத்தைக் காட்டுவதாக ஏதேனும் பதில் வந்தால்தான் நமஸ்கரிப்பவனுக்கு த்ருப்தியாயிருக்கும்.

ஆசீர்வசனம் என்று வாய் வார்த்தையில் நாங்கள் பண்ண முடியாமலிருந்தாலும், ‘நாராயண’தான் சொல்லுணுமென்றிருந்தாலும், அநுக்ரஹ ஸமிக்ஞையாக சைகையாவது பண்ணினால்தான் தேடி வந்து காலில் விழுகிறவர்களுக்குத் த்ருப்தியாயிருக்கும்.  அதனால் நாங்கள் மனஸுக்குள்ளே உங்கள் நமஸ்காரத்தை நாராயணனுக்கு அனுப்பி வைத்தாலும், வெளியிலே உங்களுக்கு நாங்களே ஆசீர்வாதம் பண்ணுகிறமாதிரிதான் கை தூக்க வேண்டியிருக்கிறது. கூப்ப வேண்டிய கையைத் தூக்கி! அவனுக்கு அஞ்ஜலி பண்ண வேண்டிய கையை உங்களுக்கு ஆசீர்வாத அபிநயமாகத் தூக்க வேண்டியிருக்கிறது!