நிஜ ஸந்நியாஸியும் நமஸ்காரமும் நிஜ ஸந்நியாசி – நூறு பெர்ஸெண்ட் ஸந்நியாஸி என்றால் – அவனுக்கு ஒரு கடமைய

நிஜ ஸந்நியாஸியும் நமஸ்காரமும்

நிஜ ஸந்நியாசி – நூறு பெர்ஸெண்ட் ஸந்நியாஸி என்றால் – அவனுக்கு ஒரு கடமையும் இல்லை. அவன் யாருக்கும் எந்த விதத்திலும் கடமைப்பட்டிருக்கவில்லை. ஆனபடியால் அவன் யாருடைய நல்லது பொல்லாததைப் பற்றியும் நினைக்க வேண்டியதில்லை. அப்படிப்பட்ட ஸ்திதியில் அவனுக்கு யாரோ நமஸ்காரம் பண்ணுகிறார்களென்றால் அதற்காக அவர்களுடைய நல்லதை அவன் நினைக்க வேண்டுமென்பதில்லை. அப்படி நினைக்க ஆரம்பித்து விட்டானென்றால் அப்புறம் அந்தப்படி அவர்களுக்கு நல்லது நடந்ததா என்றும் பார்ப்பதில் அவன் புத்தி போக ஆரம்பிக்கும். இப்படிப் பல பேர் விஷயமாக அவன் புத்தியைப் போக விட்டால் அப்புறம் அவனுடைய ஆச்ரம தர்மப்படி ஒரே சிந்தனையாக நினைக்க வேண்டிய ஆத்ம விசாரம் என்ன ஆவது? அவனுக்கான பரம தர்மம் ஸதா ஸர்வதா ஆத்மவிசாரம் பண்ணிக் கொண்டிருப்பது தான். பண்ணாவிட்டால் அவன் ஸந்நியாஸி இல்லை; ஸந்நியாஸியாயில்லாத அவனுக்கு யாரும் நமஸ்காரமும் பண்ண வேண்டியதில்லை என்று ஆகிவிடுகிறது! அதனால் ஒரு நிஜ ஸந்நியாசி அவனுக்கு ஒருத்தன் நமஸ்காரம் பண்ணுகிற போது தன்னுடைய லக்ஷ்யமான ஆத்மாவையே த்வைத லோக நிர்வாஹகனான நாராயண ரூபத்தில் பாவித்து, அந்த நாராயணனிடம் நமஸ்காரம் பண்ணுகிறவனின் நல்லதோ, பொல்லாததோ எதுவானாலும் ‘அது உன் (நாராயணனின்) பாடு’ என்று போட்டு விட்டு அதோடு விஷயத்தைக் கத்திரித்து விட வேண்டும்.

இது விஷயமாக வித்யாரண்யாள் ‘ஜீவன் முக்தி விவேகம்’ என்ற புஸ்தகத்தில் ரொம்பவும் ‘க்ளிய’ராகச் சொல்லியிருக்கிறார்.

ப்ரஹமஞானி என்ற அர்த்தத்தில் ‘ப்ராஹ்மணன்’ என்ற வார்த்தையை உபயோகித்து, அதாவது ப்ரஹ்ம ஞானியாயுள்ள ஸந்நியாசியை – நூறு பெர்ஸெண்ட் ஸந்நியாசியை – ஜீவன் முக்தனை1 – ப்ராஹமணன் என்று சொல்லி அதில் ஒரு மஹாபாரத ‘கொடேஷன்’ கொடுத்திருக்கிறார். அதில் (மஹாபாரத ஸ்லோகத்தில்) அந்த நிஜ ஸந்நியாஸியை ‘நமஸ்காரமும் இல்லாதவன்’, ‘ஆசீர்வாதமும் இல்லாதவன்’ – ‘நிர்நமஸ்காரம்’, ‘நிராரிஷம்’ (நிர் ஆசிஷம்) என்று சொல்லியிருக்கிறது2.

1 உடலில் உயிர் வாழும்போதே பிரம்மத்தை உணர்ந்துவிட்டதால் முக்தி நிலையில் உள்ளவர்.

2 ‘நிராசிஷம் அநாரம்பம் நிர்நமஸ்காரம் அஸ்துதிம்.’

நிஜ ஸந்நியாசி என்றால் அவனுக்கு ஸகலமுமே ஆத்ம ஸ்வரூபந்தான். அப்போது தனக்கே தான் எப்படி நமஸ்காரம் பண்ணிக் கொள்வது, ஆசீர்வாதமுந்தான் பண்ணிக் கொள்வது?

ஸரி, இவனுக்குத்தான் நமஸ்காரம் பண்ணுகிறவர்களும் ஆத்ம ஸ்வரூபமாகத் தெரிகிறார்கள். அவர்களுக்கோ அப்படித் தெரியாமல், தாங்கள் சின்னவர்கள், ஸாமான்ய ஜீவர்கள், இவன் ரொம்பப் பெரியவன், மஹான் என்று தெரிவதால்தானே இவனுக்கு நமஸ்காரம் பண்ணுகிறார்கள்? அப்படிப் பண்ணினால் நமஸ்கரிக்கப்படும் மற்ற எல்லார் மாதிரியும் இவனும் ஆசீர்வாதம் பண்ணுவான், மற்றவர்கள் பண்ணும் ஆசீர்வாதத்தைவிட இவனுடைய ஆசீர்வாதத்திற்குச் சக்தி உண்டு என்றுதானே கூட்டங்கூட்டமாக வந்து விழுந்து விழுந்து நமஸ்காரம் பண்ணுகிறார்கள்? அப்படியிருக்கும் போது இவன் நிராசீர்வாதக்காரன், நிர்நமஸ்காரக்காரன் என்று உதாஸீனமாக, உம்மணாமூஞ்சியாட்டம் இருந்தால் அவர்கள் (சிரித்து) hurt ஆகத்தானே ஆவார்கள்? அப்படி ஆகவிடலாமா? அந்த அஞ்ஞானிகளின் மனப்பான்மைக்கும் அந்த ஞானி தாக்ஷிண்யம் காட்டினால் தானே நன்றாக இருக்கும்? 

இந்தக் கேள்வியை வித்யாரண்யாள் எழுப்பிக்கொண்டு, பதிலாக, ‘இதற்காகத்தான் அவன் மற்றவர்கள் நமஸ்கரிக்கும்போது சும்மா இல்லாமல் ‘நாராயண’ என்று சொல்லும்படியாக வைத்திருக்கிறது. ஏனென்றால் அந்த நாராயண சப்தமே அத்தனை ஆசீர்வாதத்திற்கும் ப்ரதிநிதி – நிகில ஆசீர்வாத ப்ரதிநிதித்வேன நாராயண ச்ப்த ப்ரயோக’ – என்று எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

நமஸ்கரிப்பவனுக்கு ஆசீர்வாதம் என்று வெளிப்படப் பண்ணாமலிருந்தாலும் அவன் படுகிற துக்கத்திற்குப் பரிஹாரமாகவே நாராயண வசனம். இந்தக் குட்டி துக்கம் மட்டுமில்லை; பெரிய துக்கமாக லோகவாஸனை என்று ஒன்று நமஸ்கரிக்கும் ஜன ஸமூஹத்துக்கு இருக்கிறதே, அதற்கும் பரிஹாரம் பண்ணிப் போக்கடிக்கவே ‘நாராயண’ சொல்லும்படி வைத்திருக்கிறது என்று அந்த நாம விசேஷத்தைத் தெளிவுபடுத்தியிருக்கிறார்.