நமஸ்காரம் யாவும் நாராயணனுக்கே!
ஸகலத்தையும் ஆக்கிப் படைத்து, அததற்கும் ஒரு சக்தியைக் கொடுத்திருக்கிற அந்த நாராயணனுக்குத்தான் அத்தனை நமஸ்காரத்தையும் வாங்கிக் கொள்கிற ‘ரைட்’ இருக்கிறது. எந்த தேவதைக்கு நமஸ்காரம் பண்ணினாலும் அது கேசவனைத்தான் சேர்கிறது “ஸர்வதேவ நமஸ்கார: கேசவம் ப்ரதிகச்சதி” என்றே ஸ்லோகம் சொல்கிறோம்.
அந்தக் கேசவன் யாரென்றால் நாராயணன் தான். எல்லாருக்கும் தெரிந்ததுதான், அது விஷ்ணுவின் பெயர், குறிப்பாக க்ருஷ்ண பரமாத்மாவை அப்படிச் சொல்வது என்று. விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் அந்தப் பேர் வருகிறது.1 அதற்கு ஆசார்யாள் பல விதமாக அர்த்தம் சொல்லியிருக்கிறார்.2 அதிலே இங்கே நமக்கு விஷயமாவது: க, அ, ஈச, வ என்ற நாலு சப்தங்களும் சேர்ந்தே ‘கேசவ’ என்று ஆகிறது. ‘க’ என்று பிரம்மாவுக்குப் பேர்; ‘அ’ என்று விஷ்ணுவுக்குப் பேர்; ‘ஈச’ (என்பது) சிவன்பேர் என்பது தெரிந்ததே. ஆகையினால் ப்ரம்ம-விஷ்ணு-ருத்ரர்கள் ஒன்று சேர்ந்த த்ரிமூர்த்தி க+அ+ஈச=கேச என்றாகிறது. ஸ்ருஷ்டி-ஸ்திதி-ஸம்ஹாரங்களுக்கு தெய்வங்களான இந்த மூன்று பேரையும், அதாவது ‘கேச’வை அவர்களுக்கும் மேலே பரமாத்ம-பராசக்தி ஸ்வரூபமாக இருந்து கொண்டு எவன் தன்வசத்தில் வைத்துக் கொண்டிருக்கிறானோ அந்தக் ‘கேசவசன்’தான் கேசவன்; அதாவது அவன் முத்தொழில்களில் ஒன்றைச் செய்கிற ஸ்வாமியாக மட்டுமில்லாமல் மூன்றுக்கும் மூல சக்தியாக உள்ள மூர்த்தியே. இதுவேதான் ஆசார்யாள் நாராயணன் என்று சொல்வதும். ஆனபடியால் ‘எல்லா தேவர்களுக்குப் பண்ணும் நமஸ்காரமும் கேசவனுக்கே’ என்றால் ‘நாராயணனுக்கே’ என்றுந்தான் ஆகும்.
அப்படி மற்ற தேவதைகளுக்குப் பண்ணும் நமஸ்காரங்களே அவனொருத்தனுக்குத்தான் போய்ச் சேருகிறது என்னும்போது மநுஷ்யர்களுக்குப் பண்ணும் நமஸ்காரம் அந்த மநுஷ்யர்களுக்கு ஸொந்தமாக முடியுமா? இந்த நமஸ்காரமெல்லாமும் நாராயணனிடந்தான் போய்ச் சேருகிறது.
இதைத்தான் எங்களுக்கு யார், எப்போது நமஸ்காரம் பண்ணினாலும் நாங்கள் நினைவு வைத்துக் கொண்டு அவனுக்கே உரித்தான நமஸ்காரத்தை எங்களுக்கே ‘மிஸப்ரோப்ரியேட்’ பண்ணிக் கொண்டு விடாமல் அவனுக்கு ‘ரீடைரக்ட்’ செய்வதற்காக ஆசார்யாள் கருணையோடு ஒரு விதி – ஈஸியாகத் தோன்றும் விதி – போட்டுக் கொடுத்திருக்கிறார். என்னவென்றால், எங்களுக்கு ஒருத்தர் நமஸ்காரம் பண்ணும்போது நாங்கள், “நாராயண, நாராயண” என்று சொல்ல வேண்டும். அதுதான் விதி.
அப்படிச் சொன்னால், பேரைச் சொன்னவுடன் ஆஸாமி ஞாபகம் வந்து விடுமோல்லியோ? இங்கே ஸ்வாமிதான் ஆஸாமி! அவன் ஞாபகம் வந்தவுடன், ‘எல்லா நமஸ்காரத்திற்கும் உரியவன் அவன் தான். அவன் உரிமையை, உடைமையை நாம் அபஹரித்து விடக் கூடாது’ என்றும் தோன்றி அவனுக்கே நமஸ்காரத்தை அனுப்பி விடுவோமோல்லியோ? அதற்காகத்தான் நாராயண ஸ்மரணத்தை விதித்தார். ‘ஸ்மரணம்’ என்கிறது முக்கியம்.
1 – இரு இடங்களில் : 23, 648 நாமங்கள்.
2 – அவரது விஷ்ணு ஸஹஸ்ரநாம பாஷ்யத்தில்