’ம்’மில் முடியும் பெயர்கள்

ம்’மில் முடியும் பெயர்கள்

வடதேசத்தில் ‘ஸதாசிவ்’ என்று பேர் வைத்துக் கொள்வார்கள். அதை ‘ஸதாசிவன்’ என்றும் ‘ஸதாசிவம்’ என்றும் இரண்டு தினுசாகவும் அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம். இரண்டிலும் எது என்று தீர்மானமாகச் சொல்ல முடியாது. தமிழில் அப்படியில்லை. தமிழ்நாட்டில் ‘ஸதாசிவன்’ என்று அதிகம் வைத்துக் கொள்வதில்லை; ‘ஸதாசிவம்’ தான் ஜாஸ்தி! ராமன், கிருஷ்ணன், ஸுப்ரம்மண்யன், கணேசன் என்று ‘ன்’னில் முடிகிற பெயர்களாகவே வைத்துக் கொள்கிற நம்முடைய சீமையில் இங்கே மட்டும் ஸதாசிவன் இல்லை; ஸதாசிவம் தான். வேதத்திலே ஸதாசிவ நாமாவை நிர்குணமான ப்ரணவத்தோடு சேர்த்து ப்ரம்மமாக நிறுத்திக் காட்டியிருப்பதற்கேற்ப இப்படி சிவனை சிவமாக்கிப் பெயர் வைத்துக் கொள்கிறோம்.

சிதம்பரம், ஸ்ரீரங்கம் மாதிரி சில ஊர்ப்பெயர்களை மநுஷ்யர்களுக்கு வைக்கிறோம். பஞ்சாக்‌ஷரம், நமசிவாயம், என்று சைவர்களும், பாஷ்யம், வேதாந்தம் என்று வைஷ்ணவர்களும் பெயர்கள் வைக்கிறார்கள். இவை தத்வப் பெயர்கள். இதெல்லாம் ‘ம்’மில் முடிந்தாலும் இங்கே விசேஷித்துச் சொல்ல ஒன்றுமில்லை. ஏனென்றால் ஊர், தத்வம் முதலானவை நபும்ஸகலிங்கம் என்கிற ந்யூடர் ஜென்டரே. தமிழில் ஒன்றன்பால், பலவின்பால் என்பது. அது ‘ம்’மில்தான் முடியும். ஏகாம்பரம் என்றும் இந்தக் காஞ்சீபுரம் வட்டத்தில் நிறைய மநுஷப் பெயராக வைக்கப்படுகிறது. ‘ஏகாம்பரம்’தான் தப்பாக ‘ஏகாம்பர’மாயிருக்கிறது. ‘ஏக ஆம்ரம்:’ ஒற்றை மா – அதாவது ஏகாம்பரேச்வரர் கோவிலில் இருக்கிற, ஒரே ஒரு பழம் பழுக்கிற மாமரம். ‘அம்பரம்’ என்றால் ஆகாசம், ‘அம்பர’த்தின் திரிபு ‘அம்பலம்’. ‘பொன்னம்பலம்’ என்று மநுஷ்யர்கள் பேர் வைத்துக் கொள்ளும் போது, அந்த வார்த்தை ந்யூடர் ‘ம்’மில்தான் முடிகிறதாகையால் அதில் குறிப்பிட்டுச் சொல்ல ஒன்றுமில்லை. இதே மாதிரிதான் அசேதனமான (ஜடமான) கல்லு, மணிகளை வைத்து மாணிக்கம், ரத்தினம், ராஜமாணிக்கம், நாகரத்தினம் என்று பெயர்கள் வைக்கிறபோதும் – இன்னுமுள்ள அநேக ‘ம்’மில் முடிகிற பெயர்களிலும் – பெயரைக் கொடுத்திருக்கிற வஸ்து அசேதனமானதால் மநுஷப் பெயரும் ந்யூடர் முடிவாக இருப்பதில் விசேஷமில்லை.

ராமப்ரம்மம், ராமாவதாரம் என்று அபூர்வமாக வைத்துக் கொள்கிற பேர்களிலும், முடிகிற ‘பிரம்மம்’ ‘அவதாரம்’ என்கிறவை அதே ரூபத்தில்தான் வழக்கிலிருக்கின்றன. ஸுதர்சனம் என்கிற மஹாவிஷ்ணுவின் சக்கரம், வேலாயுதம் என்கிற முருகனின் அஸ்திரம் ஆகியவற்றைப் பேராக வைக்கிற போதும் அஃறிணையான அந்த ஆயுதங்களின் பெயர் ‘ம்’ என்றே முடிவதால் மநுஷப் பேரும் அப்படியே இருக்கிறது.

ஆனால் இந்த மாதிரிக் காரணங்களுக்கெல்லாம் வித்தியாஸமாக ‘ஸதாசிவம்’ என்று ‘ம்’மில் முடிப்பதற்கு மட்டும் தனிப் பெருமை  - யுனீக் டிஸ்டிங்க்‌ஷன் – இருக்கிறது! ஸதாசிவன் என்றே ஒரு பெயர் உள்ளபோதிலும், ஸம்ஸ்கிருதத்தில் ‘ஸதாசிவ:’  (ஸதாசிவஹ) என்று புருஷப் பெயராக உள்ள பெயர் தமிழில் ‘ஸதாசிவன்’ என்று வந்திருக்கிறபோதிலும், ‘ஸதாசிவம்’ என்றே அது ஜாஸ்தி வழங்குவதற்குத்தான் தனிச்சிறப்பு. ஸகுண மூர்த்தியாக த்வைத ப்ரபஞ்சத்துடன் ஸம்பந்தப்பட்டிருக்கும் ஸதாசிவனை விட நிர்குண அத்வைத தத்வமாக உள்ள ஸதாசிவத்தைத்தான் இந்த நம்முடைய தமிழ் தேசத்து மரபுகளை, வழக்கங்களை உருவாக்கித் தந்திருக்கிற நம் பூர்வ காலப் பெரியவர்கள் லக்ஷயமாக நினைத்திருக்கிறார்கள் என்று இதிலிருந்து தெரிகிறது. இது நமக்கு ரொம்பப் பெருமை; சிறப்பு அளிக்கிற பெருமை.

ந்யூடர் ஜென்டர் என்றால் பொதுவாக அது அஃறிணை என்பதான அசேதன (ஜட) வஸ்துவாகத்தான் இருக்கும். ஆனால் சிவம், வேதாந்தம், அவதாரம், ஞானம், சிவஞானம் என்றெல்லாம் மநுஷ்யர்களுக்கு வைக்கிற பெயர்களிலோ ந்யூடரானது உயர்திணை என்கிற நம்மை விடவும் ரொம்ப ரொம்ப உயர்ந்த திணையாயிருக்கிறது! சிவமேதான் வேதத்தின் அந்தமான வேதாந்தம், அது உண்டாக்கும் ஞானம் எல்லாமும். ஒரு தினுஸிலே பார்த்தால் சராசர வஸ்துக்களான ஸகலமுமே அதனுடைய அவதாரங்கள்தான்! ப்ரம்மத்திலிருந்துதான் அத்தனைக்கும் பிறப்பு; ஜன்மாதயஸ்ய யத:**

சின்னதான இந்த ஜீவ பாவம் போய், அகண்டமான, ஏகமான ஆத்மாவாக நாம் இருக்கும் உச்சநிலைதான் சிவம். அது என்றும் அழியாமல் சாச்வத ஸத்யமாயிருப்பது என்று காட்டவே ‘ஸதா’ போட்டுக்கொண்டு பேர் வைத்துக் கொள்கிறோம். ஸாக்ஷாத் ப்ரம்ம வாசகமே ‘ஸதாசிவம்’. ஸதாசிவ ப்ரம்மம்  என்றே ப்ரம்மஞானியும் இருந்திருக்கிறார்! ’ப்ரம்மேந்திராள்’ என்று சொல்லப்படுகிறவர்.

    

** ப்ரஹ்ம ஸூத்ரம் 1.1.2