ரிக்வேதத்திலேயே ‘சங்கரர்’!
ஆசார்யாளை (ஆதிசங்கரரை)ச் சேர்ந்த நம் எல்லோருக்கும் ரொம்பப் பெருமை உண்டாக்குகிற ஒரு ஸமாசாரம் சொல்கிறேன். ‘சம்’ என்று ஸம்ஸ்க்ருதத்தில் ஒரு வார்த்தை. ’சிவம்’ என்றால் என்ன அர்த்தமோ அதுவேதான் ‘சம்’முக்கும் கிட்டத்தட்ட அர்த்தம். நல்லது, ஸெளக்யம் அளிப்பது ‘சம்’. லோகத்துக்கெல்லாம் நல்லதே செய்தவரானபடியால்தான் நம் ஆசார்யாளுக்கு சம்-கரர், சங்கரர் என்று பேர். அவருக்கு வைத்த இயற்பெயரே காரணப் பெயருமாக இருந்து விட்டது. இப்போது நான் சொன்ன அந்த முதல் ருத்ரஸுகதத்திலேயே ருத்ரனை சங்கரனாகச் சொல்லியிருக்கிறது! ’அவன் நம் எல்லோருக்கும், ஸகல ஜனங்களுக்கும், ஸ்திரீ-புருஷாள் அவ்வளவு பேருக்கும், இன்னும் ஆடு, மாடு, குதிரை முதலான மிருக ஜாதிகளுக்கும் நல்லதை, ஸுகத்தைக் கொடுக்கட்டும்’ என்று அதில் மந்திரம் வருகிறது.** ‘அவன் நமக்கு நல்லதைச் செய்யட்டும்’ என்பதற்கு மூலத்தில் நமக்கு ‘சம்கரனாகட்டும்’ என்றே, ‘சம்’ ‘கர’ வென்ற வார்த்தைகளைப் போட்டுச் சொல்லியிருக்கிறது! ஆனாலும் ‘மறை’ என்றே தமிழ் மரபு கொண்டாடுகிறபடி, எதையும் கொஞ்சமாவது ஒளித்து ரஹஸ்ய அழகோடு சொல்வதுதான் வேதத்தின் வழி. இங்கேயும் அந்த வழியில்தான் சொல்லியிருக்கிறது. ‘அவன் எங்கள் பொருட்டு நல்லதைச் செய்பவனாக’ என்கிற ஆர்டரில் வார்த்தை போட்டிருந்தால் ’ந:+சம்+கர’ என்று ‘சங்கர’ சப்தம் வெளிப்படவே சேர்ந்து வந்திருக்கும். ஆனால், மறைமுகம் பண்ண வேண்டுமென்றே, ‘நல்லதை எங்கள் பொருட்டுச் செய்பவனாக’ என்று ஆர்டரை மாற்றி ‘சம் ந: கர’ என்று மந்திரமாகக் கொடுத்திருக்கிறது. ‘ந:’வுக்கு ஒரு பக்கம் ‘சம்’மும், மறுபக்கம் ‘கர’வுமாகப் பிரித்துக் கொடுத்திருக்கிறது. ஆனாலும் ‘சம்கர’ சப்தம் எப்படியோ வந்து விடுகிறது! வேதமாதா பரமேச்வரனுக்கு அர்ப்பணிக்கிற முதல் ஸுக்தத்திலேயே அவனை சங்கராசாரியாளாகத் தெரிவித்துவிடுகிறாள்! மஹா அறிவு படைத்த ‘ப்ரசேதஸ்’ என்று முதலிலேயே சொன்னதும் அந்த ஸர்வக்ஞருக்குப் பொருந்திவிடுகிறது, அப்புறம் ஸுப்பர்லேடிவ் வள்ளல் என்பதும் ‘கருணாலயம்’ என்றே வர்ணிக்கப்படுகிற ஆசாரியாளுக்கு** சரியாகத்தான் இருக்கிறது! முப்பத்திரண்டு வயஸுக்குள் அவர் இத்தனை உபதேசம் பண்ணி, இத்தனை புஸ்தகம் எழுதி, வாதங்கள் நடத்தி, தேசம் பூராவும் மூன்று தரம் சுற்றி வந்தார் என்றால், மூன்றாவது லக்ஷணமாகச் சொன்னபடி அவர் நல்ல பலிஷ்டராகவுந்தான் இருந்திருக்கணும்!..
‘சம்’மைச் செய்கிற ஸெளம்ய மூர்த்தியாகவும் ருத்ரனை ஆதி முதற்கொண்டே வழிபட்டிருக்கிறார்கள்; ஆதி முதல் உக்ரனாகவும், அப்புறம் ஸெளம்ய மூர்த்தியையும் தன்னோடு அவியல் பண்ணிக் கொண்டவனாகவும் இல்லை – என்று காட்ட வந்தேன்.
** ஆறாவது மந்திரம்.
**ச்ருதி-ஸ்ம்ருதி-புராணானாம் ஆலயம் கருணாலயம் |
நமாமி பகவத்பாத சங்கரம் லோக சங்கரம் ||