ஐந்தொழில் பஞ்ச க்ருத்யம் – தமிழில் ‘ஐந்

ஐந்தொழில்

பஞ்ச க்ருத்யம் – தமிழில் ‘ஐந்தொழில்’ என்று சொல்வார்கள். எல்லாருக்கும் தெரிந்த ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் என்ற முத்தொழில்; ப்ரம்ம ஸ்வரூபத்தை மாயையால் மறைத்து இந்த முத்தொழிலுக்கும் இடம் உண்டாக்குவதான ‘திரோதானம்’ என்ற நாலாவது தொழில். ‘திரோதானம்’ என்றால் மறைப்பது. ப்ரம்ம ஸ்வரூபத்தை, அதாவது, நம்முடைய நிஜ ஸ்வரூபமேயான ஆத்ம ஸ்வரூபத்தை மறைத்து, ஜீவ-ஜகத்துக்களை உண்டாக்கி ஸ்ருஷ்டி-ஸ்திதி-லயத்துக்கு இடம் கொடுக்கிற ஜகத் வியாபாரமான மஹாகார்யத்தைச் செய்யும் மஹா மாயையே திரோதானம். ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் செய்யும் அதிகாரி தேவதைகளாக ப்ரம்ம, விஷ்ணு, ருத்ரர்கள் இருக்கிறதுபோல திரோதானத்துக்கு இருக்கும் அதிகாரிக்கே சைவ-சாக்த ஆகமங்களில் ஈச்வரன் என்று பெயர். மஹாமாயை என்றே சொல்லும்படியாக அகிலாண்டங்களையும் மாயையிலே கட்டிப் போட்டு ஆள்கிறதால் அந்த ஈச்வரனுக்கு ’மஹா’ பட்டம் கொடுத்து மஹேச்வரன் என்பார்கள்.

சிவ ஸம்பந்தமில்லாத ப்ரம்ம-விஷ்ணுக்களுக்கு ஐந்தில் இரண்டு தொழில்கள். பாக்கி மூன்றும் சிவனில் ஆவிர்பவித்த மூன்று பேர்களின் வசத்தில் இருக்கிறது. ஸம்ஹாரத் தொழில் ருத்ரன் என்ற சைவ மூர்த்தியின் வசம். திரோதானத் தொழில் ஈச்வரன் என்ற சைவ மூர்த்தி வசம்.

இன்னும் ஒன்று மிஞ்சுகிறது. ஐந்தாவதான அந்தத் தொழில்தான் உச்சமானது. அது என்ன என்றால் ’அநுக்ரஹம்’ என்பது. தமிழிலே சொல்லும்போது ஆக்கல்-காத்தல்-அழித்தல்-மறைத்தல்-அருளல் என்று முடிக்கிற அருளல்தான் அநுக்ரஹம்.

இரண்டு தினுஸான அநுக்ரஹம். அடிமட்டத்திலே, இந்த மாயா லோகத்திலே ஒரு ஜீவனைப் பிணைத்து வைத்திருக்கும்போது செய்வது ஒரு அநுக்ரஹம். அது என்ன என்றால் லோக வாழ்க்கை நடத்த அநுகூலமாக ஒரு உடம்பு, இந்திரியங்கள், லோகம் என்கிற அநுபோக ஸ்தானம், அதிலே பெறுகிற போகங்கள் என்ற நாலை அநுக்ரஹிப்பதுதான். இந்த நாலை முறையே தநு-கரணம்-புவனம்-போகம் என்று சொல்வது. ‘மாயா ப்ரபஞ்ச வாழ்க்கைக்கான நாலைத் தருவதா ஒரு அநுக்ரஹம்?’ என்று கேட்பீர்களானால் என்ன பதில் சொல்வார்கள் என்றால் : ‘கர்மா என்று ஒன்று எப்படியோ ஜீவனுக்கு ஸம்பவித்து விட்டது. அதற்கப்புறம் அதைக் கழித்தாகணுமே! இதை எப்படி ஸாதிப்பது! இந்த லோகத்திலேயே ஸத்கர்மா, ஸாதனை பண்ணித்தானே கழிக்க வேண்டும்? மாயா ப்ரபஞ்சத்திலிருந்து விடுபடுவதற்கும் ஸாதனை பண்ணுவதற்காக உடம்பு, இந்திரியம், ஜகத் என்ற ஒரு வாழுமிடம், ஸாதனை செய்வதற்காகவே உயிர் வாழும் பொருட்டு அவசியமான போகங்கள் ஆகியவை இருந்தால்தானே முடியும்? பிரக்ருத ஜீவிதத்திலே (நிகழ் பிறவியிலே) ஒரு ஜீவன் தன்னுடைய பூர்வகர்மாவைத் தீர்த்துக் கொள்வதற்காகத்தான் இந்த நாலைப் பரமாத்மா கொடுத்திருக்கிறானென்று புரிந்து கொண்டு இந்த நாலையே கர்ம நாசத்துக்கு உபாயமாக்கிக் கொண்டாயானால் இதுகளும் அநுக்ரஹத்தைச் சேர்ந்தவைதான் என்று தெரிந்து கொள்ளுவாய்’ – என்றிப்படி பதில் சொல்வார்கள்.

என்ன சொன்னாலும் இது அடிநிலை அநுக்ரஹம்தான்.நம்மில் ரொம்பப் பேர் தநு-கரண-புவன-போகங்களை அநுக்ரஹ விஷயங்களாக எடுத்துக் கொண்டு ஸம்ஸாரத்திலிருந்து கடைத்தேற இதுகளை உபாயமாக்கிக் கொள்ளாமல், இதுகளைக் கொண்டே கர்மாவை இன்னும் ஜாஸ்தியாக்கிக் கொண்டு ஸம்ஸாரத்தில் மேலும் மேலும் புதைந்துதான் போகிறோமாதலால் இதைப் பூரணமாக ‘அநுக்ரஹம்’ என்று ஸர்டிஃபை பண்ண முடியவில்லை!

இந்த அடிநிலை அநுக்ரஹம் மாதிரி இல்லாமல் உச்ச நிலையாக ஒரு அநுக்ரஹம் உண்டு. அதுதான் ஒருத்தனை ஸம்ஸாரத்திலிருந்து கடைத்தேற்றி மோக்ஷத்தை அளிப்பது. அதற்கு மேலே ஒரு அநுக்ரஹம் கிடையாது. மீளவே முடியாத புதைச் சேற்றிலிருந்து பரமாத்மா நம்மைத் தூக்கிவிட்டு அமிருத நிலையில் சாச்வதமாக இருத்துகிற அந்த அநுக்ரஹத்தில்தான் அவனுடைய ப்ரேமையும் கருணையும் அதன் உச்சஸ்தானத்தைத் தொடுகிறது.

பஞ்சக்ருத்யத்தில் ஐந்தாவதான, உச்சமான.. ஸ்ங்கீதத்தில் ரொம்ப உச்ச ஸ்வரம் தாரஸ்தாயி பஞ்சமம் என்று பிடிப்பார்கள்; அப்படிப் பஞ்ச க்ருத்யத்தில் பஞ்சமமான (ஐந்தாவதான) … மோக்ஷப்ரதானம் என்கிற அநுக்ரஹத்தைச் செய்யும் சைவ மூர்த்திக்கே ‘ஸதாசிவன்’ என்று பெயர்.