அஷ்ட நாமங்கள்; மஹாதேவன் ’மஹாவிஷ்ணு’ மாதிரி ‘மஹாசிவன்’ என்பதில்லை ‘மஹாசிவராத்ரி’ என்பதில் முழு வார்த்தைக்க

அஷ்ட நாமங்கள்; மஹாதேவன்

’மஹாவிஷ்ணு’ மாதிரி ‘மஹாசிவன்’ என்பதில்லை. ‘மஹாசிவராத்ரி’ என்பதில் முழு வார்த்தைக்குமே ‘மஹா’ என்பது அடைமொழி; ‘சிவ’ என்பதற்கு மட்டும் இல்லை. ப்ரதி மாஸமும் வருகிற தேய்பிறைச் சதுர்தசி இரவுக்கு ‘சிவராத்ரி’ என்று பெயர். ‘மாஸ சிவராத்ரி’ என்று சொல்வது, இப்படி வரும் பன்னிரண்டு சிவராத்ரிகளில் எது மஹிமை மிக்கதாக இருக்கிறதோ அந்த மாசி மாஸ சிவராத்ரிக்கு அதன் மஹிமையைக் காட்டி ‘மஹா சிவராத்ரி’ என்று பெயர் கொடுத்திருக்கிறது.

அப்படியானால் சிவனுக்கு மஹிமை கிடையாதோ, அவன் ‘மஹா’ பட்டத்துக்கு யோக்யன் (தகுதி பெற்றவன்) இல்லையோ என்று நினத்துவிடக் கூடாது. ‘மஹாசிவன்’ என்று பேர் இல்லாவிட்டாலும் ‘மஹான்’ என்றே அவனுக்குத்தான் நாமா சொல்லியிருக்கிறது.

சிவ நாமாக்களில் ரொம்ப உசந்ததாக எட்டு உண்டு. அதிலே முடிவான நாமா ‘மஹான்’தான். பவன், சர்வன், ஈசானன், பசுபதி, ருத்ரன், உக்ரன், பீமன், மஹான் என்று இப்படி அஷ்ட நாமா. ஸஹஸ்ரநாமம், த்ரிசதி, அஷ்டோத்தர (சத) அர்ச்சனை எல்லாம் பண்ணி முடித்து முடிவிலே இந்த எட்டுப் பெயர்களை ‘பவாய தேவாய நம:’, ‘சர்வாய தேவாய நம:’, ‘ஈசானாய தேவாய நம:’, ‘பசுபதயே தேவாய நம:’, ‘ருத்ராய தேவாய நம:’, ‘உக்ராய தேவாய நம:’, ‘பீமாய தேவாய நம:’, ‘மஹதே தேவாய நம:’, என்று இந்த ஆர்டரில் சொல்லி அர்ச்சித்து விட்டு, அப்புறமே தூப-தீப-நைவேத்யம் என்று போகிறதுதான் தொன்று தொட்டு வந்துள்ள பூஜாவிதி. முதல் வேற்றுமையில் ‘மஹான்’ என்பதாக இருக்கிற பெயர், நாலாம் வேற்றுமையில் ‘மஹானுக்கு நமஸ்காரம்’ என்று வரும்போது ‘மஹதே நம:’ என்று வருகிறது.

’மஹதே தேவாய நம:’ என்று ‘தேவ’ சப்தம் சேர்த்துக் கொள்ள வேண்டும். எட்டுப் பேர்களில் ஒவ்வொன்றுக்கும் ‘பவாய தேவாய’, ‘சர்வாய தேவாய’ என்று தேவ சப்தம் சேர்த்துச் சொல்லிக் கொண்டே போய், கடைசியில் ‘மஹதே தேவாய’ என்று பூர்த்தி பண்ண வேண்டும்.

அந்த விசேஷத்தால்தான் ‘மஹாதேவன்’ என்றே சிவனுக்குப் பிரஸித்தமாக நாமா இருக்கிறது.

இந்த அஷ்ட நாமாக்களில் ஒரு விசேஷம்; வேடிக்கை. அம்பாளுக்கு லகுவாக (எளிதாக) அர்ச்சனை பண்ண வேண்டுமா? அதற்கும் இந்த நாமாக்களில் ஒவ்வொன்றையும் சொல்லி, அந்த பெயர்க்கார்ருடைய பத்தினிக்கு நமஸ்காரம் என்று அர்ச்சித்து விட்டால் போதும். ‘பவஸ்ய தேவஸ்ய பத்ன்யை நம:’, ‘சர்வஸ்ய தேவஸ்ய பத்ன்யை நம:’, என்று இப்படி சொல்லிக் கொண்டே போய், ‘மஹதோ தேவஸ்ய பத்ன்யை நம:’ என்று முடித்துவிட வேண்டும். ‘மஹான்’ என்ற முதல் வேற்றுமைப் பேர் ‘மஹானுடைய பத்னி’ என்று ஆறாம் வேற்றுமையில் வரும் போது ‘மஹத:’ என்று ஆகும். சேர்த்துச் சொல்கிறபோது ‘மஹத:’ என்பது ‘மஹதோ’ என்றாகும். இப்படியே ஸுப்ரம்மண்யர் – விக்நேச்வரர்களுக்கும் இந்த அஷ்ட நாமாக்காரரின் பிள்ளை என்று சொல்லியே ஸம்க்ஷிப்தமாக (சுருக்கமாக) அர்ச்சனை பண்ணி விடலாம். ’பவஸ்ய தேவஸ்ய புத்ராய நம: என்று ஆரம்பித்து, ‘மஹதோ தேவஸ்ய புத்ராய நம:’ என்று முடிப்பது. ‘புத்ராய’ என்பதற்குப் பதில் ‘ஸுநவே’ என்றும் சொல்வதுண்டு. ஸுநு என்றாலும் புத்திரன் தான்.’  

வேடிக்கை என்று எதைச் சொன்னேன் என்றால், வள்ளி இருக்கிறாள், தேவஸேனை இருக்கிறாள். விக்நேச்வர பத்னிகளாக ஸித்தி-புத்திகள் இருக்கிறார்கள். வல்லபை என்று வேறு ஒருத்தி இருக்கிறாள். இவர்களுக்கும் அர்ச்சனை பண்ணணும் என்று ஆசை இருந்தால், அவர்களுக்கு வேறே பெயர் எதுவும் தெரியவில்லையே! லக்ஷக் கணக்கான மேஜர், மைனர் புராண க்ரந்தங்களைக் கிளறினால் அவர்களுக்கும் அஷ்டோத்தரம் அகப்படலாம். ஆனால் அதற்கெல்லாம் நமக்கு எங்கே பொழுது இருக்கிறது? இங்கேதான் அஷ்டோத்தர சதத்துக்குப் பதில் இந்த அஷ்ட நாமாக்களே – அஷ்டோத்தம (அஷ்ட உத்தம) – நாமாக்களே கைகொடுக்கின்றன! ‘பவ தேவனுடைய பிள்ளையின் பத்னிக்கு நமஸ்காரம்’, ‘சர்வ தேவனுடைய பிள்ளையின் பத்னிக்கு நமஸ்காரம்’ என்று அர்த்தம் கொடுக்கும்படியான ‘பவஸ்ய தேவஸ்ய புத்ரஸ்ய பத்ன்யை நம:’, என்று ஆரம்பித்து ‘மஹதோ தேவஸ்ய புத்ரஸ்ய பத்ன்யை நம:!’ என்று முடித்து நம்முடைய ஆசையை பூர்த்தி பண்ணிக் கொண்டு விடலாம்.