ஸதாசிவம் ஆதிகுரு ஸதாசிவ ஸமாரம்பாம் சங்கராசார்ய மத்யமாம் | அஸ்மத் ஆசார்ய பர்யந்தாம் வந்த

ஸதாசிவம்

ஆதிகுரு

ஸதாசிவ ஸமாரம்பாம் சங்கராசார்ய மத்யமாம் |

அஸ்மத் ஆசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம் ||

இது ஆதியிலிருந்து இன்று வரை வந்திருக்கிற குரு பரம்பரைக்கு நமஸ்காரம் தெரிவிக்கிற ச்லோகம். ஸ்ரீ சங்கரபகவத் பாதாளின் வழியை அநுஸரிக்கிற எல்லோரும் சொல்கிற – இதுவரை சொல்லாவிட்டாலும் இனிமேலாவது ப்ரதி தினமும் இரண்டு வேளையும் சொல்ல வேண்டிய – ச்லோகம். ‘இன்றுவரை வந்திருக்கிற குரு’ என்றால் இன்றைக்கான, அதாவது இந்த நூற்றாண்டில் இப்போது இருக்கிற, குரு என்று அர்த்தமில்லை. என்றைன்றைக்கும் இந்த குரு பரம்பரையில் குருமார்கள் தொடர்ந்து வருவார்களாதலால் அன்றன்றைக்கும் அவர்களுக்கு சிஷ்யர்களாக இருக்கப் போகிறவர்கள் அவ்வப்போது நேரிலே ஸாக்ஷாத்தாகப் பார்த்து, பேசப் போகிற அந்த எதிர்கால குருவை ‘இன்று வரை வந்திருக்கிற குரு’  என்று சொல்லி நமஸ்கரிப்பதற்கான ச்லோகம் இது என்று புரிந்து கொள்ள வேண்டும்.  மூலத்தில் ‘இன்றுவரை’ என்று அர்த்தம் கொடுக்கிற வார்த்தை எதுவுமில்லை. ‘அஸ்மத் ஆசார்ய’ என்றே இருக்கிறது. அப்படியென்றால் ‘நம்முடைய ஆசாரியர்’ என்றுதான் அர்த்தம். ஸந்தர்பத்தைப் பொறுத்து அதை ’நம் காலத்தில் இப்போது நமக்கு உபதேசம் தந்து கொண்டு ஜீவ்யவந்தராக இருக்கிற ஆசார்யர்’ என்று அர்த்தம் பண்ணிக் கொள்ள வேண்டும்.

ஆதி-மத்ய-அந்தம் என்பார்கள். தமிழில் முதல்-நடுவு-முடிவு. ஆனால் குருபரம்பரைக்கு முடிவு கிடையாது. அது அமரமானது. அதனால் இங்கே ‘முதல்-நடுவு-இன்றைய காலமும், இனிமேல் எதிர்காலத்தில் ஒவ்வொரு தலைமுறைக் காலமும்’ என்று வைத்துக் கொள்ள வேண்டும்.

அந்த முதல்குரு, ஆதிகுரு யார்? ‘ஸதாசிவன்’ என்று ச்லோகம் சொல்கிறது. நடுகுரு? அவர் பெயரில் வந்திருக்கிற ஸம்ப்ரதாயஸ்தர்கள்தான் இந்த ச்லோகத்தைச் சொல்லுகிறவர்கள், சொல்ல வேண்டியவர்கள் என்பதால் அவர்தான் இந்த குரு பரம்பரைக்கே நடு நாயகம் என்ற சிறப்பு ஸ்தானம் பெற்றவர் என்று தெரிகிறது. ‘ஆசார்யாள்’ என்ற மாத்திரத்தில் நினைக்கப்படுகிற சங்கர பகவத் பாதாசார்யாள்தான் அவர்.

அவர் யாரென்றால் ஆதி குருவான ஸதாசிவனின் அவதாரமேதான்.

ஸாதாரணமாகச் சொல்லும்போது ஆசார்ய சிஷ்யர்களான நமக்கெல்லாம் – அதாவது ஸ்மார்த்தார்கள், அத்வைதிகள் என்று சொல்லப்படுகிறவர்களுக்கெல்லாம் – ஆதிகுரு தக்ஷிணாமூர்த்தி என்றே கேட்டிருக்கிறோம்.  பேசாமல், அசையாமல், எந்தக் கார்யமும் பண்ணாமல் உட்கார்ந்து கொண்டிருந்த அவரேதான் லோக ஜனங்களிடம் பரம கருணையினால் பரம தத்வத்தை விளக்கி விளக்கி நிறையப் பேசி உபதேசித்து, ஊர் ஊராகப் போய்ப் பிரசாரம் பண்ணி, மடங்கள் ஸ்தாபிப்பது முதலான அநேக கார்யங்களை ஸாதித்து ஸநாதன தர்மத்தை நன்றாக ஸ்திரப்படுத்தித் தருவதற்காக ஆசார்யாளாக அவதரித்தார் என்று கேட்டிருக்கிறோம்.

இங்கே, ச்லோகத்தில், தக்ஷிணாமூர்த்தி என்ற பேரைச் சொல்லியிருக்கவில்லை. ஸதாசிவன் என்றே இருக்கிறது.   ’ஸதாசிவ ஸாமரம்பம்’ – ‘ஸதாசிவனில் அழகாக ஆரம்பித்து’ – என்றே ச்லோகம் ஆரம்பிக்கிறது.

ஏனென்றால், தக்ஷிணாமூர்த்தி என்றால் அவர் மட்டும் யார்? சிவன் தானே? சிவனுக்கு அநேக ரூபங்கள்… நரஸிம்ஹ மூர்த்தி என்கிறோம். ராமசந்திரமூர்த்தி என்கிறோம், க்ருஷ்ணர், ஹயக்ரீவர் – இப்படிப் பல பேர் சொல்கிறோம். அவர்கள் எல்லாரும் மஹாவிஷ்ணுவின் ரூப பேதங்கள்தானே? அப்படியே தக்ஷிணாமூர்த்தி, நடராஜா, பிக்ஷாடனர், பைரவர் என்றெல்லாம் சொல்கிற பல ஸ்வாமிகளும் சிவனுடைய பலவிதமான ரூபங்கள் தான்.