பகவானுக்கும் தோஷம் ஸமஸ்த ஜனங்களுக்கும் கங்கா ஸ்நானத்தால் தோஷங்கள் போய், அவர்கள் ஸந்தோஷமாகப் பண்டிகை கொண்டாடும்ப

பகவானுக்கும் தோஷம்

ஸமஸ்த ஜனங்களுக்கும் கங்கா ஸ்நானத்தால் தோஷங்கள் போய், அவர்கள் ஸந்தோஷமாகப் பண்டிகை கொண்டாடும்படி வரம் கொடுத்த கிருஷ்ண பரமாத்மாவோ இப்போது தம்மையே ஒரு தோஷத்துக்கு ஆளாக்கிக்கொண்டார்! தெய்வமேயானாலும் சாஸ்திரம் சொல்கிற விதி நிஷேதங்களின்படி – ‘இதைச் செய்’ என்பது விதி; ‘இதைச் செய்யாதே’ என்பது நிஷேதம்; இதுகளின்படி – பலன்களை ஏற்றுக் கொண்டு அநுபவித்துக் காட்டினால்தான் லோகத்தில் தர்மாநுஷ்டானம் நிற்கும் என்பதால் இப்படிப் பண்ணினார். என்ன செய்தாரென்றால், ‘வீர ஹத்தி’ என்ற தோஷத்தைத் தாம் ஏற்றுக் கொண்டார். மஹா வீரனாக உள்ள ஒருவரைக் கொன்றால் அதனால் ஏற்படும் தோஷம்தான் ‘வீரஹத்தி’. நரகாஸுரன் துஷ்டனானாலும் உண்மையான வீரமுள்ளவனானதால், இப்போது பகவான் வீர்ஹத்திக்குத் தம்மை ஆளாக்கிக் கொண்டார்.

வீரஹத்தி தோஷம் பிடித்ததால் பகவானுடைய நீலமணி மாதிரியான பிரகாச ஸ்வரூபம் மங்கிப் போயிற்று. கறுத்து, வாடிக் கிடப்பவர்களை “பிரம்மஹத்தி மாதிரி இருக்கு” என்கிறோமல்லவா? பிராம்மணனைக் கொல்வதால் ஏற்படும் தோஷந்தான் பிரம்மஹத்தி. இம்மாதிரிக் கொலை பாதகங்களால் தேஹ காந்தி, தேஜஸ் போய்விடும்.

ராமசந்திர மூர்த்தி ராவணனைக் கொன்றதால் அவருக்கு வீரஹத்தி மட்டுமில்லாமல் ப்ரம்மஹத்தி, சாயாஹத்தி என்று மொத்தம் மூன்று தோஷங்கள் ஸம்பவித்தன. ராவணன் ப்ராம்மணன், விச்ரவஸ் என்ற ரிஷியின் பிள்ளை அவன். நன்றாக வேத அத்யயனம் பண்ணியிருந்த அவன், கைலாஸத்துக்கு அடியில் மாட்டிக் கொண்டபோது ஸாம கானத்தோடு வீணா கானம் செய்தே ஈச்வர்னை ப்ரீதி பண்ணி மீண்டு வந்தான். அதனால் அவனைக் கொன்றதில் ராமருக்கு ப்ரம்மஹத்தியும் ஏற்பட்டது. ‘சாயா’ என்றால் பிரகாசம், ஒளி என்று அர்த்தம்; figurative ஆக (உருவகமாக) ‘சாயா’ என்பது கீர்த்திக்குரிய எந்தக் குணத்தையும் குறிக்கும். இங்கிலீஷில் கூட lustre-illustrious, glow-glory என்கிற போது பிரகாசம் என்பதே கீர்த்திக்குரிய தன்மைகளையும் குறிக்கிறதைப் பார்க்கிறோம். ராவணனுக்கு ரூப காம்பீர்யம், வேத சாஸ்திரப் படிப்பு, ஸங்கீத ஞானம், சிவ பக்தி என்றிப்படி அநேக ‘சாயா’க்களிருந்ததால் அவனை வதைத்ததில் ராமருக்கு சாயா ஹத்தி தோஷம் உண்டாயிற்று. இந்த மூன்றில் ப்ரம்மஹத்தி போக அவர் ராமேச்வரத்திலும், வீரஹத்தியிலிருந்து விமோசனம் பெற வேதாரண்யத்திலும், சாயாஹத்தி விலகுவதற்காகக் கும்பகோணத்துக்குப் பக்கத்திலுள்ள பட்டீச்வரத்திலும் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்தார். ராமேச்வர விஷயம் மட்டும் இப்போது எல்லோருக்கும் தெரிகிறது. ஆனால் இதே மாதிரி மற்ற இரண்டு ஊர் கோவில்களிலும் கூட ‘ராமலிங்கம்’ என்றே இப்போதும் இருக்கிறது.