பூமாதேவியின் பிரார்த்தனை இப்படிச் சாகிற சமயத்தில்தான் நரகாஸுரன், தான் அழிந்த தினத்தை லோகமெல்லாம் மங்கள ஸ்நானம் ப

பூமாதேவியின் பிரார்த்தனை

இப்படிச் சாகிற சமயத்தில்தான் நரகாஸுரன், தான் அழிந்த தினத்தை லோகமெல்லாம் மங்கள ஸ்நானம் பண்ணி மங்களோத்ஸவமாகக் கொண்டாடி மகிழ வேண்டும் என்று வேண்டிக் கொண்ட்தாக ஒரு version.

பரம மங்களம் கங்கா ஸ்நானமே. அந்த ஸ்நான புண்யம் எந்த ஜலத்தில் ஸ்நானம் பண்ணுகிறவருக்கும் அன்றைய தினத்தில் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டான். இன்னொரு கதைப்படி, நரகனின் தாயாரான பூமாதேவி இப்படிப் பிரார்த்தித்து வரம் பெற்றதாக இருக்கிறது. முன்னேயே சொன்ன மாதிரி ஸாக்ஷாத் பரமாத்மாவின் கையால் வதமாகி ஸாயுஜ்ய முக்திக்குப் போகிற நிலையில் இருக்கிற நரகன் இப்படி லோகோபகாரமாக வரம் கேட்டுக் கொண்டதில் விசேஷம் எதுவும் தெரியவில்லை.   அவனுடைய பெற்றா தாயார் இப்படிக் கேட்டாளென்றால்தான் அது மஹா உசத்தி என்று தோன்றுகிறது. தன் பிள்ளை எத்தனையோ வருஷமாக லோகத்தை அழவைத்ததற்குப் பிராயச்சித்தமாக எதிர்காலத்தில் வரப்போகிற அத்தனை வருஷமும் ஜனங்கள் அவன் பேரைச் சொல்லிக் கொண்டு, தங்கள் வாழ்க்கைப் போராட்ட அழுகைகளை மறந்து, ஆனந்தமாகப் பண்டிகை கொண்டாட வேண்டும் என்று நினைத்து இப்படி வரம் கேட்டாள்.

பூமாதேவியின் அவதாரமான ஸத்யபாமாவே ஸம்ஹாரத்துக்கு ஸஹாயம் பண்ண, தனியாக பூமாதேவி வந்து நரகாஸுரன் அபஹரித்திருந்த குடை, குண்டலங்களைக் கிருஷ்ணருக்கு ஸமர்ப்பணம் செய்துவிட்டு இப்படிப் பிரார்த்தித்தாள் என்று சொல்லியிருக்கிறதே என்று தோன்றலாம். ஒரு தெய்வம் அவதாரம் பண்ணின பிறகும், அந்த மூல தெய்வமும் இருக்கிறபடியே இருந்து கொண்டு அவதாரமும் தனியாக இருந்திருக்கிறது. பரமேச்வர அவதாரமான ஆசார்யாளே கைலாஸத்தில் ஈச்வர தரிசனம் பண்ணிப் பஞ்ச லிங்கங்களை வாங்கிக் கொண்டிருக்கிறார். பாகவதத்திலேயே பிற்பாடு ஒரு பிராம்மணனின் செத்துப் போன குழந்தைகளை விஷ்ணு லோகத்திலிருந்து மீட்டு வருவதற்காக கிருஷ்ணர் அர்ஜுனனோடு அங்கே போனதாகவும், அங்கே சேஷ சயனத்திலிருந்த நாராயண மூர்த்தியைப் பார்த்ததாகவும் விஷ்ணுவும் கிருஷ்ணரும் ஸம்பாஷித்துக் கொண்டதாகவும் வருகிறது. அப்படித்தான் இப்போது பூமாதேவி, பாமா இரண்டு பேரும் ஏக காலத்தில் வெவ்வேறாக இருந்திருக்கிறார்கள்.

தன் பிள்ளை போன தினத்தில் எல்லோருக்கும் கங்கா ஸ்நான புண்ணியம் கிடைக்க வேண்டும் என்று பூமாதேவி கேட்டுக் கொண்ட விசேஷம்தான் இன்றைக்கும் நாம் தீபாவளியன்று ‘கங்கா ஸ்நானம்’ செய்வது.

உறவுக்காரர்கள் ‘போய்’விட்டால் ஸ்நானம் பண்ணுவது வழக்கம். எதுவாவது உபயோகமில்லை என்று முடித்துவிட்டால் ‘முழுக்குப் போட்டுவிட்டேன்’ என்கிறது இதனால்தான். செத்துப்போனதாலேயே லோகத்துக்கெல்லாம் உபகாரம் பண்ணின நரகாஸுரனை அத்தனை பேரும் எத்தனையோ தலைமுறைகளாக உறவுக்காரனாக நினைத்து வருஷா வருஷம் அவனுக்காக முழுக்குப் போடும்படி அவனுடைய அம்மா செய்திருக்கிறாள்! ஆனால் இது துக்க முழுக்கு இல்லை: ஸந்தோஷ முழுக்காக இருக்க வேண்டும் என்றே அவள் இதை மங்கள ஸ்நானமாக, அதாவது எண்ணைய் தேய்த்துக் கொண்டு செய்யும் ஸ்நானமாகப் பண்ணினாள். துக்க முழுக்கானாலும், உபவாஸ விரதாநுஷ்டானத்துக்கான ‘மடி’யான ஸ்நானமானாலும் பச்சைத் தண்ணீரில்தான் குளிக்க வேண்டும். ஆனால் இதுவோ ஸந்தோஷமான பண்டிகை அல்லவா? அதனால்தான் எண்ணைய் தேய்த்துக் கொண்டு அப்புறம் வெந்நீரில் ஸ்நானம் செய்ய வேண்டும் என்றும் வித்தியாசமாக அவள் வரம் வாங்கி வைத்திருக்கிறாள். ‘ஐப்பசி மாதம் அடைமழை’ என்பது வசனம். அதிலே எண்ணைய் தேய்த்துப் பச்சைத் தண்ணீர் ஸ்நானம் செய்தால் குளிர் நடுக்கும்; ஜலதோஷம், ஜ்வரம் வரும். நரகாஸுரனைச் சபிப்போம்! அதனால்தான் ஹிதமாக, ஸெளக்கியமாக வெந்நீர் ஸ்நானம் பண்ணும்படி வேண்டிக் கொண்டிருக்கிறாள்!

இதிலே இன்னொரு புதுமை – ஸூர்யோதயத்துக்கு முன்னாடி அப்யங்கனம் (எண்ணைய்க் குளியல்) பண்ணக் கூடாது என்பது விதி. ஆனாலும் இதற்கு வித்யாஸமாக ஒரு விதி சாக்ஷாத் பகவானிடமிருந்து வரமாக வாங்கி விட்டாலே பிள்ளையைப் பற்றி விசேஷமாக நினைக்கத் தூண்டும் என்று பூமாதேவி நினைத்தாள். அதனால்தான் தீபாவளி ஒரு நாளில் மட்டும் ஸுர்யோதயத்துக்கு முந்தி அருணோதய காலத்திலேயே தைல ஸ்நானம் பண்ண வேண்டும் என்று வரம் கேட்டு அதற்குப் பகவானின் அங்கீகாரத்தைப் பெற்றாள்.

அருணோதயம் என்றால் அருணனின் உதயம். அருணன் என்பவன் ஸுர்யனுடைய தேரோட்டி. அவன் ஒரே சிவப்பாக இருப்பான். நல்ல சிவப்புக்கு அருண வர்ணம் என்றே பெயர். ‘ஆனை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே’ என்கிறது போல சூரியன் அடிவானத்தில் தெரிகிறதற்கு ஒரு முஹூர்த்த காலத்துக்கு முந்தியே அங்கே சிவப்பு பரவ ஆரம்பித்து விடுவதைத்தான் அருணோதயம் என்பது. ஒரு முஹூர்த்தம் என்பது இரண்டு  நாழி. அதாவது நாற்பத்தெட்டு நிமிஷம். தீபாவளியன்று ஸுர்யோதயத்துக்கு ஒரு முஹூர்த்தம் முந்தியே எண்ணைய் தேய்த்துக் குளிக்க வேண்டும். விடிவதற்கு முன்னால் அப்யங்கனம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக, ராத்திரி இரண்டு மணி, மூன்று மணிக்கே ஸ்நானம் செய்வது தப்பு.

இந்த ஸ்நானத்திலே நாம் வைத்துக் கொள்கிற எண்ணையில் லக்ஷ்மி தேவி வாஸம் பண்ண வேண்டும் என்றும், குளிக்கிற வெந்நீரில் கங்கா தேவி வஸிக்க வேண்டும் என்றும் பூமாதேவி கேட்டுக் கொண்டாள். அதன் பின்பாதியை ஒட்டித்தான், பிரஸித்தமாக தீபாவளியன்று ‘கங்கா ஸ்நானம்’ என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் தைலத்தில் லக்ஷ்மி என்பதை நாம் மறந்து விட்டோம் என்றாலும் அதுதான் தீபாவளிக் கதையை பூமாதேவியோடு மட்டுமல்லாமல் ஸ்ரீதேவியுடனும் சேர்த்து வைக்கிறது! வடக்கே தீபாவளியை விசேஷமாக லக்ஷ்மி பூஜையாகவே செய்து, வியாபாரிகள் புதுக் கணக்கு ஆரம்பிக்கிறார்கள். இதிலேயும் பூமாதேவியின் பெருமை தெரிகிறது. தன்னை எந்தத் தினுஸிலும் பெருமைப்படுத்திக் கொள்ளாமல் சக்களத்தியான ஸ்ரீதேவிக்கும், பரமேச்வரனின் பத்னி ஸ்தானத்தில் நினைக்கப்படும் கங்கா தேவிக்குமே பண்டிகையில் ஸம்பந்தம் இருக்கும்படி செய்திருக்கிறாள்.

கங்காதரன் என்று ஈச்வரனுக்குப் பேர் இருப்பதால் கங்கை என்றவுடன் சிவ ஸம்பந்தமானது என்று தோன்றினாலும் அதற்கு விஷ்ணு சம்பந்தமும் நிரம்ப உண்டு. வாமன ப்ரம்மசாரி த்ரிவிக்ரமனாக வளர்ந்து லோகம் முழுவதையும் முதல் அடியால் அளந்துவிட்டு, தேவ லோகத்தை இரண்டாம் அடியால் அளந்தபோது ப்ரம்மா ஓடோடி வந்து அந்தப் பாதத்தில் வார்த்த தீர்த்தம்தான் ஆகாச கங்கையாயிற்று. அந்த கங்கையின் ஒரு தாரையையே பகீரதன் தன்னுடைய பித்ருக்களைக் கடைத்தேற்றுவதற்காகப் பூலோக கங்கையாகக் கொண்டு வரத் தபஸ் பண்ணினான். ஆகாச தாரையின் வேகத்தைப் பூமி தாங்க முடியாது என்றே பரம கருணாநிதியான ஈச்வரன் அதைத் தம் ஜடாபாரத்தில் தாங்கி, அடக்கி, பூமி தாங்கும்படியான வேகத்தில் கட்டுப்படுத்தி விட்டார். ஆகக்கூடி கங்கைக்கு விஷ்ணு, சிவன் இருவர் ஸம்பந்தமும் இருக்கிறது.

தன் பிள்ளையின் நினைவுக்காகப் புதிதாக ஒன்றைப் பண்ணி விட்டால் மட்டும் போதாது, அதனால் ஸகல ஜனங்களும் ஸந்தோஷப்பட்டு விட்டாலும் போதாது, அவர்களுக்குப் புண்ணியமும் கிடைக்கும்படி செய்ய வேண்டுமென்றுதான் தைலத்தில் லக்ஷ்மியின் ஸாந்நித்யமும், வெந்நீரில் கங்கா ஸாந்நித்யமும் இருக்கும்படி பூமாதேவி செய்தாள்.