நரகாஸுர வதம்; ஸத்யபாமாவின் பங்கு உடனே கிருஷ்ணர் ஸாக்ஷாத் மஹாவிஷ்ணுவைப் போல் கருடனை அழைத்து அவன் மேலேறிக் கொ

நரகாஸுர வதம்; ஸத்யபாமாவின் பங்கு

உடனே கிருஷ்ணர் ஸாக்ஷாத் மஹாவிஷ்ணுவைப் போல் கருடனை அழைத்து அவன் மேலேறிக் கொண்டு, ஸத்ய பாமாவையும் துணை சேர்த்துக் கொண்டு ப்ராக்ஜ்யோதிஷபுரத்துக்குப் புறப்பட்டு விட்டார். ஸத்யபாமாவை எதற்கு அழைத்துக்கொண்டு போனாரென்றால், அவள் பூமாதேவியின் அவதாரம்தான். ருக்மிணி, ஸ்ரீதேவி. பாமா பூதேவி. பொதுவாக ருக்மிணிதான் அடக்கம் முதலான உத்தம குணங்கள் உள்ளவள், பாமாவுக்கு அஹங்காரம் ஜாஸ்தி என்று நினைக்கிறோம். பகவானும் மாய நாடகமாடி, பாமாவுக்கு ரொம்ப அநுகூலமாயிருக்கிறது போலக் காட்டியே கடைசியில் ருக்மிணியின் முன் அவள் ‘மூக்கு அறுபடும்படி’ செய்திருப்பதாகக் கதைகள் இருக்கின்றன. ஆனால் இப்போது ஸத்ய பாமாவிடம் இருந்த உயர்ந்த குணங்கள் தெரிவதற்காகவே அவளை அழைத்துக் கொண்டு போனார். என்ன இருந்தாலும் அவர் புருஷர். ஆதலால் பெற்ற பிள்ளையை வதம் பண்ணுவதற்கான நெஞ்சுரம் அவருக்கு இருந்ததுகூட ஆச்சரியமில்லை.   லோகத்துக்கே விரோதியாகத் தன் பிள்ளை இருக்கிறான் என்பதால் அவன் சாக வேண்டியது தான் என்று ஒரு தாயார் நினைப்பதுதான் இதைவிட விசேஷம். இப்படி நினைத்துத் தன் துஷ்டப் பிள்ளை சாவதையும் தன் கண்ணாலேயே பார்த்து லோக ‌க்ஷேமத்தை நினைக்கக் கூடிய உசந்த குணம் ஸத்ய பாமாவுக்கு உண்டு என்று தெரியப்படுத்துவதற்காகவே அவளை அழைத்துக் கொண்டு போனார்.

தர்மத்துக்காகப் போராடிய வீராங்கனைகளாகச் சில ராஜ ஸ்திரீகள் ஆதியிலிருந்து, ஸமீபத்து அஹில்யா பாய், ஜான்ஸி ராணி வரை இருந்திருக்கிறார்கள். கைகேயி ஸம்பராஸுர யுத்தத்தின் போது தசரதருக்கு ரத ஸாரத்யம் செய்திருக்கிறாள். கெளஸல்யை யுத்த பூமிக்குப் போனதாக இல்லை. அவள் அடக்க குணம் நிறைந்தவள். அதே மாதிரி ருக்மிணி. அவளை பகவான் யுத்த பூமிக்கு அழைத்துப் போனதில்லை. கைகேயி மாதிரி இளையாளாகவும், கொஞ்சம் ‘தாட் பூட்’ உள்ளவளுமான பாமாவைத்தான் அழைத்துப் போனார். கருட வாஹனத்துக்குப் பதில் ஸத்யபாமாதான் இந்தக் கதையில் பகவானை ரதத்தில் வைத்து ஸாரத்தியம் செய்துகொண்டு போனாள் என்றும் ஒரு கதாபேதம் உண்டு.

பொறுமைக்கு உருவமான பூமியினாலேயே துஷ்ட ராஜாக்கள் படுத்தும் பாடு தாங்க முடியாமல், அவள் பசுரூபம் எடுத்துக் கொண்டு போய், மஹாவிஷ்ணுவிடம் பிரார்த்தித்துக் கொண்டதன் மேல்தான் அவர் பூபாரம் தீர்ப்பதற்கென்றே கிருஷ்ணாவதாரம் செய்திருக்கிறார். அதில் கம்ஸன், சிசுபாலன், ஜராஸந்தன், துர்யோதனன் முதலானவர்களைத் தீர்த்துக் கட்டினால் மட்டும் போதாது; இவர்களையெல்லாம் விட க்ரூரமான நரகாஸுரனைத் தாயும் தந்தையுமான இரண்டு பேருமே சேர்ந்து வதம் பண்ண வேண்டும் என்று தம்பதியாகப் போனார்கள்.

ப்ராக்ஜ்யோதிஷபுரத்துக்குள் யாரும் நுழைய முடியாதபடி அநேக கோட்டைகளைக் கட்டிக் கொண்டு உள்ளே வஸித்தான் நரகன். வெளி எல்லையில் முதலில் மலைகளையே கோட்டையாக அமைத்துக் கொண்டிருந்தவன் அதற்குள்ளே ஆயுதங்களாலேயே ஆன கோட்டை, அப்புறம் ஜலத்தை மந்திர சக்தியால் எழுப்பி நிறுத்தி அமைத்துக் கொண்ட ஜலக் கோட்டை, அதற்கப்புறம் உள்ளே நெருப்பாலேயே ஆன அக்னிக் கோட்டை, அப்புறம் வாயுக்கோட்டை என்று பலவற்றைக் கட்டிக் கொண்டு உள்ளுக்குள்ளே இருந்தான்.

பகவான் ஒவ்வொரு கோட்டையையும் தவிடு பொடியாக்கிக் கொண்டு ஊருக்குள்ளே வந்து, பாஞ்சஜன்ய (சங்க)த்தை ‘பூம் பூம்’ என்று முழக்கி அஸுரனை யுத்தத்துக்குக் கூப்பிட்டார்.

முதலில் நரகாஸுரனுடைய ஸேனாதிபதியான முரன் என்கிறவன் சண்டைக்கு வந்தான். அவனுக்கு ஐந்து தலை. வீர பராக்கிரமத்தோடு சண்டை போட்டான். பகவான் ஸுதர்சன சக்ராயுதத்தால் அவனுடைய ஐந்து தலைகளையும் அறுத்து அவனை ஸம்ஹாரம் செய்தார்.

கருடன் எப்படி விஷ்ணுவின் வாஹனமோ, அப்படியே ஸுதர்சன சக்ரம் விஷ்ணுவின் ஆயுதம். கருடாரூடரான கிருஷ்ணர், இந்தச் சக்கரம், விஷ்ணுவின் கதையான கெளமோதகீ முதலானதுகளையும் தரித்திருக்கிறார். ராமர் முதலான அவதாரங்கள் இப்படிச் செய்ததில்லை. இதனால்தான் கிருஷ்ணரையே மஹாவிஷ்ணுவின் பூர்ணாவதாரம் என்பது.

முரனை வதைத்ததாலேயே அவருக்கு முராரி, முரஹரி என்ற பெயர்கள் ஏற்பட்டன. முரனுக்கு அரி (சத்ரு) முராரி. த்ரி-புரம் என்ற மூன்று புரங்களில் உருவமாயிருந்த அஸுரர்களுக்கு விரோதியானதால் ஈச்வரனுக்குப் புராரி என்று பெயர். முரஹரி என்றாலும் முரனை அழித்தவர்.

முரன் கதை முடிந்ததும் அவனுடைய ஏழு புத்திரர்களும் வந்து யுத்தம் பண்ணி, அவன் போன கதிக்கே தாங்களும் போய்ச் சேர்ந்தார்கள்.

கடைசியில் ஒரு பெரிய யானை மேல் ஏறிக் கொண்டு நரகாஸுரனே யுத்த பூமிக்கு வந்தான்.

கருடனின் மேலிருந்து கொண்டு பகவான் அவனோடு சண்டை போட்டார். அவனுடைய ஸைன்யத்தை வதம் பண்ணுவதில் கருடன், ஸத்யபாமா இரண்டு பேரும் அவருக்கு ஸஹாயம் செய்தார்கள்.  தாமே எதையும் ஸாதித்துக் கொள்ள முடியுமாயினும், அவர்கள் வெறுமனே வேடிக்கை பார்த்ததாக இருக்கக் கூடாது என்று நினைத்து, அவர்களுக்கும் இப்படி ஸேவா பாக்யத்தைக் கொடுத்தார்.

அஸுர ஸைன்யம் முழுவதும் நிர்மூலமான பின் பகவானுக்கும் நரகாஸுரனுக்கும் நேருக்கு நேர் உக்ரமான யுத்தம் நடந்தது. பகலோடு முடியாமல் ராத்திரியெல்லாம் சண்டை நீடித்தது. ராவேளையில் அஸுரர்களுக்கு பலம் விருத்தியாகும். ஆனாலும் பரமாத்மாவானதால் நரகனின் தாக்குதலைச் சமாளித்தார்.  அவனால்தான் இவருக்கு ஈடு கொடுக்க முடியவில்லை.

முடிவிலே அருணோதய காலத்தில் பகவான் நரகாஸுரனைச் சக்ராயுதத்தால் ஸம்ஹாரம் செய்துவிட்டார்.

அன்று விடிந்தபோது லோகத்துக்கே பெரிய விடிவு காலமாயிற்று!

இது நடந்தது ஒரு ஆச்வின மாஸத்துக் கிருஷ்ண பக்ஷ சதுர்த்தசியிலாகும்.  மறுநாள் அமாவாஸ்யை.

ஆச்வினம் என்பதை ஆச்வியுஜம் என்றும் சொல்வதுண்டு. நம்முடைய புரட்டாசி அமாவாஸ்யைக்கு மறுநாளான ப்ரத்மையிலிருந்து ஐப்பசி அமாவாஸ்யை முடிய இருக்கிற சுமார் முப்பது நாளுக்கே ஆச்வினமாஸம் என்று பெயர். அந்த மாசத்தில்தான் க்ருஷ்ணபக்ஷ சதுர்த்தசியில் நரகாஸுரவதம்.

கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசி என்பது பரமேச்வரனுக்கு ரொம்பவும் ப்ரீதியானது. மாஸம்தோறும் வரும் அந்த்த் திதிக்கு மாஸ சிவராத்ரி என்றே பெயர். மாசி மாஸத்தில் இப்படி வருவதைத்தான் மஹா சிவராத்திரி என்று கொண்டாடுகிறோம். ஒரு ஐப்பசி மாஸ சிவராத்திரி முழுதும் விழித்துக் கொண்டு சண்டை போட்டே பகவான் நரகாஸுரனை வதம் பண்ணியிருக்கிறார்!

ஸத்யபாமாவேதான் நரகனை ஸம்ஹாரம் பண்ணினது என்று இன்னொரு விதமாகவும் சொல்வதுண்டு.

யாரானாலும், இரண்டு பேருமே அதிலே ஸந்தோஷப் பட்டு, லோக க்ஷேமத்தையே புத்ர நாசத்தை விடப் பெரிதாக மதித்திருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.