கங்கா ஸ்நானமும் காவேரி ஸ்நானமும்
முன்னுரை
ஸ்ரீ மஹா பெரியவர்கள் ஸ்ரீகாளஹஸ்தியில் 1966ம் ஆண்டு எழுந்தருளியிருந்த போது, தீபாவளிக்கு அண்மையில் அவர்களைத் தரிசிக்கச் சென்ற அடியார்களில் ஒருவர், “தீபாவளிக்கும் கங்கா ஸ்நானத்துக்கும் என்ன தொடர்பு?” என்று விளக்கி வைக்குமாறு பெரியவர்களை வேண்டிக் கொண்டார்.
பெரியவர்கள் புன்னகை பூத்து, “ஏன், தீபாவளிக்கும் கங்கைக்கும் சம்பந்தம் இருக்க முடியாதென்று நினைக்கிறாயா? தீபாவளி க்ருஷ்ண பரமாத்மா நரகாஸுரனைக் கொன்றதால் ஏற்பட்ட பண்டிகை. கங்கையோ பரமேச்வர ஸம்பந்தமுள்ளது. யமுனைதான் கிருஷ்ணனுடைய நதி. ‘யமுனா தீர விஹாரி’ என்றே அவரைச் சொல்கிறோம். அதனால் தீபாவளியில் கங்கா ஸ்நானம் என்று ஏன் விசேஷம் கொடுத்திருக்கிறது என்று உனக்குத் தோன்றுகிறதாக்கும்?” என்று கேட்டார்.
அந்த அடியார் அப்படித்தான் எண்ணியிருப்பார் போலும். பேசாமல் இருந்தார்.
“அது இருக்கட்டும்; தீபாவளிக்கு நாம் எல்லோரும் கங்கா ஸ்நானம் பண்ணுகிறோமென்றால் அதற்குக் காரண புருஷரான கிருஷ்ணர் அன்றைக்குக் காவேரி ஸ்நானம் பண்ணினார் என்று நீ கேள்விப் பட்டிருக்கிறாயோ?” என்று ஓர் அபூர்வ விஷயத்தை வினாவாக விடுத்தார் ஸ்ரீ ஜகத்குரு.
“இல்லை. பெரியவாள்தான் சொல்லி அநுக்ரஹம் செய்ய வேணும்” என்று அவர் விண்ணப்பித்துக் கொண்டார்.
கூடியிருந்தவர்களில் வேறு எவருக்காவது அந்தக் கதை தெரியுமா என்று பெரியவர்கள் அலுக்காமல் ஒவ்வொருவராக்க் கேட்டார். எவருக்கும் தெரியவில்லை.
பண்டிதராகத் தோன்றிய ஒருவர், “ஸ்ரீமத் பாகவதத்தில் நரகாஸுர வதத்தைச் சொல்லியிருக்கும் இடத்தில், அதற்கு தீபாவளி, கங்கை, காவேரி ஆகிய எந்த ஸம்பந்தமுமே சொல்லியிருக்கவில்லை” என்றார். அவர் சொன்ன மாதிரியிலிருந்து, அதனால் இவ்விஷயங்களை ஏற்பதற்கில்லை என்பது போலிருந்தது.
“பாகவதத்திலே இல்லாவிட்டாலும் புராணந்தரங்களில் (வேறு புராணங்களில்) இந்த ஸமாசாரங்கள் இருக்கின்றன. ராமாயண, பாரத, பாகவதாதிகளில் வால்மீகியும், வியாஸரும், சுகப்ரம்மமும் சொல்லாமல் விட்ட அநேக விஷயங்கள் வேறு புராணங்களிலும், உப புராணங்களிலும், ஸ்தல புராணங்களிலும் வருகின்றன. கதைப் போக்கு, கதா பாத்திரங்களுடைய குண விசேஷம், லோகத்துக்கு இதனால் கிடைக்கிற உபதேசம் என்று எப்படிப் பார்த்தாலும் இவை பெரும்பாலும் மூல ராமாயண, பாரத, பாகவதாதிகளுக்கு complimentaryயாகவே (இட்டு நிரப்பி முழுமை தருவனவாகவே) இருக்கின்றன. ஆகையால், மூலக்ரந்தத்துக்கு contradictoryயாக (முரணாக) இல்லாதவரை இப்படிப்பட்ட additional (கூடுதலான) ஸமாசாரங்களையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்” என்று கூறிய பெரியவர்கள், “நரகாஸுரனை பகவான் ஸம்ஹாரம் பண்ணினவுடன் பூமாதேவி வந்து அவரிடம் பிரார்த்தித்துக் கொண்டதாக பாகவதத்தில் வருகிறதோ இல்லையோ?” என்று தெரியாதவர் போலப் பெரியவாள் பண்டிதரைக் கேட்டார்.
“வருகிறது, நரகன் அபஹரித்திருந்த இந்திரனுடைய குடையையும், (இந்திரனின் தாயாரான) அதிதியின் குண்டலங்களையும் பூமாதேவிதான் கொண்டு வந்து பகவானிடம் அர்ப்பணித்தாள் என்று வருகிறது. அப்போது அவள் செய்த ஒரு ஸ்தோத்திரமும் இருக்கிறது. ஆனால் இது பொதுப்படையான ஸ்துதியாக இருக்கிறதே தவிர, நரகனின் ஞாபகார்த்தமாகத் தீபாவளி கொண்டாடப்பட வேண்டும் என்று அவள் வரம் கேட்டதாக இல்லை” என்று கூறிய பண்டிதர் “நரகாஸுரனுடைய பிள்ளை பகதத்தனை பகவான் தான் ரக்ஷிக்க வேண்டும் என்று பூமாதேவி ஒப்புக்கொடுத்ததாகவும் இருக்கிறது” என்றார்.
“வாலியை ராமர் ஸம்ஹாரம் பண்ணினவுடன் அவன், பிள்ளை அங்கதனை அவருடைய guardianshipலேயே விட்ட மாதிரி” என மொழிந்த ஜகத்குரு, “அது ஸரி; நரகாஸுரனே இப்படி, தான் வதமான தினத்தை லோகமெல்லாம் பண்டிகையாகக் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும் இன்னொரு version (கதாபேதம்) கேள்விப்பட்டிருக்கிறாயோல்லியோ?” என்று கேட்டார்.
“கேட்டிருக்கிறேன்” என்றார் அவர்.
“எனக்கென்னவோ அவனுடைய அம்மாவான பூமாதேவி இப்படி வரம் கேட்டாள் என்பதுதான் ரொம்ப விஸேஷமாக மனஸில் படுகிறது. பகவான் ஹஸ்தத்தால் மரணமடைந்து அவருக்குள்ளேயே ஐக்கியமாகிற ஸ்டேஜில் இருக்கும் ஒருத்தனுக்கு நல்லறிவு உண்டாகி இம்மாதிரி வேண்டிக் கொள்வதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஆனால் ஒரு பெற்ற தாய் புத்ர சோகத்தில் வயிறெரியாமல், பரம துக்கமான ஸமயத்தில், நம் பிள்ளை போனாலும், அவன் போனதற்காகவே, லோகத்தில் ஸமஸ்த ஜனங்களும் ஸந்தோஷமாக விழா கொண்டாட வேண்டும் என்று வேண்டிக் கொண்டாளென்றால் அதுதான் நெஞ்சைத் தொடுகிற மாதிரி இருக்கிறது. பொறுமைக்கு பூமாதேவி என்பது இங்கேதான் நிரூபணமாகிறது. அந்தத் தாயாருடைய தியாக சக்தியினால்தான் தேசம் பூராவிலும் வேறெந்தப் பண்டிகைக்குமில்லாத பிராதான்யம் (முதன்மை) தீபாவளிக்கே ஏற்பட்டிருக்கிறது என்று எனக்கு அபிப்ராயம்” என்றார்.
கண்ணன் காவேரி ஸ்நானம் செய்த கதையைத் தெரிந்து கொள்வதில் தங்கள் ஆர்வத்தைச் சில பக்தர்கள் தெரிவித்துக் கொண்டனர்.
“அவன் (முதலில் விண்ணப்பித்த அடியார்) ‘கங்கா ஸ்நான ஸம்பந்தத்தைச் சொல்லு’ என்று கேட்டான். நான் காவேரி ஸ்நானத்தைப் பற்றிச் சொல்கிறேனென்றால், “ஸ்வாமிகளுக்கு நாம் கேட்ட விஷ்யம் தெரியாது” என்று நினைக்க மாட்டானா? அதனால், கங்கா ஸ்நானம், காவேரி ஸ்நானம் எல்லாவற்றையும் பற்றிச் சொல்கிறேன்” என்று குறும்பாகக் கூறிய குருநாதர், மேலும் குறும்பாக “இவர் (பண்டிதர்) ”பாகவதத்திலே வந்தால்தான் ஒப்புக் கொள்வேன்” என்று சொன்னாலும் நான் அதோடு வேறு கதைகளையும் போட்டுப் பிசைந்து அவியலாகத்தான் சொல்லப் போகிறேன். காவேரி மகாத்மியத்தைப் பற்றி ஸ்காந்தம், ஆக்நேய புராணம், பிரம்ம வைவர்த்த புராணம் முதலானதுகளில் இருக்கிறது. அதிலொன்றில்** துலா காவேரி மஹிமையைச் சொல்கிற இடத்தில் தான் தீபாவளிக் கதை வருகிறது. சுகருக்கு பாகவதத்தை உபதேசித்த அதே வியாஸாசாரியாள்தான் இந்த எல்லாப் புராணங்களையும் கொடுத்திருக்கிறார்” என அர்த்த புஷ்டியுடன் மொழிந்து, நிமிர்ந்து அமர்ந்து, கதை கூற ஆயத்தமானார்.
** பிரம்ம வைவர்த்த புராணத்தில்
ஓர் அம்மாள் “நரகாஸுர வதக்கதையைக்கூடப் பெரியவாள் வாயாலே கேட்கணும்” என்று விஞ்ஞாபித்துக் கொண்டாள்.
“எல்லாக் கதையும்தான்! ஏதோ இப்போது எனக்கு நினைவு வருகிற வரைக்கும் சொல்கிறேன்” என்று ஸர்வக்ஞர் கடல் மடையாகத் தொடங்கினார். பண்டிதரும் ஓரிரு இடங்களில் எடுத்துக் கொடுக்க, அது மேலும் பொங்கிப் பெருகச் செய்தார்.
கங்கையும் காவேரியுமாக இருந்த அந்தப் பிரவாஹத்தை இங்கே வாசகர்களுக்கு வழங்குகிறோம்.