ஸாக்ஷி நாதேச்வரர் ஸாக்ஷி நாதேச்வரர் என்ற பேரில் ஈச்வரன் இருப்பது திருப்புறம்பயம் என்ற க்ஷேத்திரத்தில் அது கும்பகோணத்துக

ஸாக்ஷி நாதேச்வரர்


ஸாக்ஷி நாதேச்வரர் என்ற பேரில் ஈச்வரன் இருப்பது திருப்புறம்பயம் என்ற க்ஷேத்திரத்தில். அது கும்பகோணத்துக்கு வடமேற்கே ஐந்து, ஆறு மைலில் மண்ணியாற்றின் வடகரையிலிருக்கிறது. அந்த ஊருக்கு வடக்கே ஒரு மைலில் கொள்ளிட நதி.

சோணாட்டு ஸ்தலமானாலும் பாண்டிய ராஜதானியான மதுரையோடு அந்த ஊரை ஸாக்ஷிநாத ஸ்வாமி ஸம்பந்தப்படுத்தி ஒரு குட்டி மாகாண (மாநில) ஒருமைப்பாடு காட்டியிருக்கிறார்.
வடமதுரை கோபாலன் கதை பார்த்தோம். வரப்போகிற கதையில் தென்மதுரை சிவனின் லீலை பார்க்கப் போகிறோம். மதுரை என்றால் அறுபத்து நாலு திருவிளையாடல் நினைவு வந்து விடும். ஸுந்தரேச்வரரின் கடைசியான அறுபத்து நாலாவது லீலையாகத் திருப்புறம்பய ஸாக்ஷிநாதர் ஸமாசாரந்தான் வருகிறது.

சோழ தேசத்தில் பிறந்து வளர்ந்து மதுரையில் கொலையானவனின் கதையைச் சொல்லும் சிலப்பதிகாரத்திலும் இதே மாதிரி ஒரு கதை பற்றி ‘ரெஃபரன்ஸ்’ வருகிறது. அதன் கதாநாயகி பத்தினிப் பெண்டிர் பல பேரைப் பற்றிச் சொல்லும் போது இந்த ஸ்தல புராணத்துக் கதாநாயகி மாதிரி அதற்குப் பூர்வகாலத்தில் இருந்த இன்னொருத்தியையே முதலாவது கற்புக்கரசியாகச் சொல்கிறாள்.
கதைக்கு வருகிறேன். சிலப்பதிகாரம் மாதிரியே காவிரிப் பூம்பட்டினத்தில் ஒரு வணிகர், வைசியர் இருந்தார். அவருடைய ஸஹோதரியை மதுரையிலிருந்த ஸ்வஜாதிக்காரர் ஒருத்தருக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுத்திருந்தது.

கொஞ்ச நாளில் அவளுக்கு ஒரு பிள்ளையும் பிறந்தது. அவள் மதுரையில் புருஷன் வீட்டில் ‘ஸெட்டில்’ ஆனாள். அப்புறம் எதனாலோ அவளுடைய பிறந்தகம், புகுந்த அகம் ஆகிய இரண்டு குடும்பங்களுக்கும் ஸம்பந்தம் கத்தரித்துப் போய்விட்டது.

ஸஹோதரி வணிகருக்கு ஒரு பெண் பிறந்தது. உடனே அவருக்கு முறைப்பிள்ளை நினைவு வந்தது. ‘மருமகன் பிறந்தானே! அவனுக்கு இப்போ பத்து, பன்னிரண்டு வயஸு இருக்குமே! வயஸு வித்யாஸம் சித்தே ஜாஸ்தியாயிருந்தாலும் முறை விட்டுப் போகாம அவனுக்குத்தான் பெண்ணைக் கொடுக்கணும்’ என்று முடிவு பண்ணினார்.

ஸஹோதரி பிள்ளை, ஜாமாதா இரண்டு பேரையுமே ‘மருமகன்’ என்றுதானே சொல்கிறது!

முடிவு பண்ணினாரே தவிர, கத்திரித்துப் போன உறவை ‘ரின்யூ’ பண்ணுவதில் அவருக்கு ஒரு ‘ரிஸர்வேஷன்’ ஏற்பட்டு, அப்புறமும் அநேக வருஷங்கள் ஓடிப் போயிற்று. பெண்ணும் கல்யாண வயஸை, அதாவது அந்தக் காலக் கல்யாண வயஸை அடைந்தாள்.

துரத்ருஷ்ட காலம், வணிகர், அவருடைய ஸம்ஸாரம் ஆகிய இரண்டு பேரும் கண்ணை மூடிவிட்டார்கள்.

கல்யாண வயஸுக் கன்யாப் பெண் அநாதையாக நின்றது. தனக்கு ஒரு அத்தான் உண்டு; அவனுக்குத்தான் தன்னைக் கொடுக்க அப்பா உத்தேசித்திருந்தார் என்று அந்தப் பெண்ணுக்குத் தெரியும். அப்பா அப்படி நிச்சயம் பண்ணி விட்டதால் அந்தப் பிள்ளைதான் தன் பதி என்று அவள் பாதிவ்ரத்யம் (கற்பு நெறி) அநுஷ்டிக்க ஆரம்பித்து விட்டாள், அப்பர் ஸ்வாமிகளுடைய தமக்கையான திலகவதியார் மாதிரி!
அப்பா பண்ணத் தவறியதை அந்தப் பெண்ணிடம் அபிமானமும் இரக்கமும் கொண்ட ஊர் ஜனங்கள் பண்ணினார்கள். மதுரையிலிருந்த மருமான் அட்ரஸைக் கண்டு பிடித்து விஷயங்களைத் தெரிவித்து அவனுக்கு ஓலை அனுப்பினார்கள்.

அவனும் காவிரிப்பூம்பட்டினம் வந்தான்.

அவனுக்கு ஏற்கனவே கல்யாணமாகிப் பசங்கள் கூட இருந்தது. ஆனாலும் இரண்டாம் கல்யாணம் அப்போது வழக்கத்தில் இருந்ததால், அதிலும் வணிக வகுப்பாரிடையே அதிகமாக இருந்ததால், வந்தான். மாமா பெண்ணுக்கு அவள் ஊரிலிருந்த கொடுக்கல்-வாங்கல்களைப் பைஸல் பண்ணிவிட்டு, போகிறதுதான் போகிறோம், சோழ நாட்டில் கொஞ்சம் க்ஷேத்ராடனமும் அவளோடு பண்ணிவிட்டு மதுரைக்குத் திரும்பிக் கல்யாணம் பண்ணிக் கொள்ளலாம் என்ற தீர்மானத்தோடு வந்தான்.

அப்படியே காவிரிப் பூம்பட்டினத்தில் செய்ய வேண்டியதையெல்லாம் செய்து, மாமா பெண்ணோடு யாத்ரை புறப்பட்டான்.

அந்தப் பெண்ணுடைய துரத்ருஷ்டமும் தொடர்ந்து போயிற்று. என்னவாச்சு என்றால்:
திருப்புறம்புய ‌க்ஷேத்திரத்தில் அவர்கள் ஒருநாள் ராத்தங்க வேண்டி வந்தது. ரொம்ப தூரம் நடந்து வந்த அலுப்பும் புழுதியும் போவதற்காக அவன் கோவில் கிணற்றில் குளித்தான். மடப்பள்ளிக்குப் போய் ப்ரஸாதம் வாங்கிக் கொண்டு ஸ்தல விருக்ஷமான வன்னி மரத்தின் கீழே உட்கார்ந்து கொண்டு இரண்டு பேரும் சாப்பிட்டார்கள். அப்புறம் ப்ராகாரத்திலேயே தள்ளித் தள்ளிப் படுத்துக் கொண்டு தூங்கிப் போய் விட்டார்கள்.

பாதி ராத்ரியில் ஒரு பாம்பு வந்து அவனைக் கடித்தது. முழித்துக் கொண்டு “ஐயோ!” என்று அலறினான். சத்தம் கேட்டு அந்தப் பெண்ணும் எழுந்திருந்து வந்து அவனைப் பார்த்தாள். கிடுகிடுவென்று அவன் உடம்பு நீலம் பாரித்துப் போயிற்று. அப்புறம் அவனிடமிருந்து பேச்சு மூச்சு இல்லை. அவள் பாம்புக்கடி என்று புரிந்து கொண்டு நடுநடுங்கிப் போய் விட்டாள்.

மனசினால் அவனுக்கே தான் உரியவள் என்று உறுதியாக ஆத்மார்ப்பணம் பண்ணியிருந்தாலும் சாஸ்த்ரப் படிக் கல்யாணமாகாததால் சரீர ஸம்பந்தம் கூடாது என்று, அந்த ஆபத்து வேளையிலும் அவனைத் தொட்டுக் கூடப் பார்க்காமல், அவர்களைப் போலவே ப்ராகாரத்தில் படுத்துக் கொண்டிருந்த வேறு ஜனங்களை எழுப்பியே தொட்டுப் பார்க்கப் பண்ணினாளாம்! ‘அரவம் தீண்டினாலும் ஆரணங்கு தீண்டாமல்’ என்று புஸ்தகத்தில் பார்த்திருத்திருக்கிறேன். ஸாதாரண ஜனங்களிடங்கூட இத்தனை ஸாஸ்த்ர வ்யவஸ்தை, மனக் கட்டுப்பாடு இருந்ததுதான் ஸமீப காலம் வரையில் நம் தேசத்தை லோகத்தின் மதிப்பிலேயே உசத்தி வைத்திருக்கிறது.

‘கல்யாணம் பண்ணிக் கொண்டு நல்வாழ்வு தர இருந்தவன், பாவம் போய் விட்டான்’ என்று தெரிந்தது. அந்தப் பெண் அழுது துடித்தது. இதற்குள் பொழுதும் விடிந்து விட்டது.
அப்போது அந்த ஊருக்குத் திருஞானஸம்பந்தர் எழுந்தருளியிருந்தார். அவர் காதுக்குத் துக்க ஸமாசாரம் போயிற்று. அவர் அந்தப் பெண்ணிடம் ரொம்பவும் கருணை கொண்டார். உடனே, ஹாலாஹால விஷ பானம் பண்ணிய ஸ்வாமியிடம் போய் அந்த மதுரை வணிகனுக்கு விஷத்தை இறக்கி மறுபடி உயிர் கொடுக்கும்படிப் பதிகம் பாடினார். அப்பூதி பிள்ளைக்கு விஷம் இறங்க அப்பர் பாடின மாதிரியே!
திருமருகலிலும் இதே மாதிரி இந்த ஞானஸம்பந்தரே இன்னொருத்தனுக்கு விஷம் இறங்குவதற்காகப் பாடியிருக்கிறார். அதைப் பற்றிப் பெரிய புராணத்திலேயே இருக்கிறது. திருப்புறம்பய விஷயம் அந்த ஊர் ஸ்தல புராணத்திலும், திருவிளையாடற் புராணத்திலும் சொல்லியிருக்கிறது.

சிலப்பதிகாரம் ஸம்பந்தமூர்த்தி ஸ்வாமிகளுக்கும் பல நூற்றாண்டு முந்தினது. அதிலும் இதே மாதிரி கதை இருப்பதிலிருந்து பகவான் ஏறக்குறைய ஒரே மாதிரி கதை உடைய மூன்று பத்தினிப் பெண்களை இந்தத் தமிழ் நாட்டில் படைத்து விளையாடியிருக்கிறானென்று தெரிகிறது.

“நீ ச்மசானவாஸி – ‘பிணம்புகு மயானம் புரிந்தனை’. ஆனாலும் யமன் கபளீகரம் பண்ணிவிட்ட உயிரைக்கூட உன்னால் வெளிப்படுத்த முடியுமே- ‘விழுங்குயிர் உமிழ்ந்தனை!’ என்றிப்படி ஸ்வாமியை அவருக்குப் புத்ர ஸ்தானத்திலிருந்து, ஆளுடைய பிள்ளையார் என்று பெயர் பெற்ற ஸம்பந்தமூர்த்தி ஸ்வாமிகள் திரும்புறம்பயத்தில் பாடிய பதிகத்தில் போற்றி வேண்டினார்.

ஸ்வாமி அநுக்ரஹம் செய்தார். விஷம் ஏறின வேகத்திலேயே கிறுகிறுவென்று இறங்கிற்று. ‘மாண்டவன் மீண்டான்’ என்பது நிஜமாயிற்று.

“அப்பா, இன்னமும் இந்தப் பொண்ணைக் காக்க வைக்காதே! மொதல்ல கல்யாணத்தைப் பண்ணிக்கோ. அப்புறம் க்ஷேத்ராடனம் முடிச்சுட்டு மதுரைக்குத் தம்பதியாப் போய்ச் சேருங்கோ” என்று ஸம்பந்தர் அவனுக்கு உத்தரவிட்டுவிட்டு அங்கேயிருந்து புறப்பட்டார்.

”மஹான் சொன்னதை மீறப்படாது. ஆனாலும் இங்கே கல்யாணமாச்சுன்னு ஊர்ல போய்ச் சொன்னா ஊர்க்காரா ஸாக்ஷி கேட்பாளே! இங்கே யாரைப் பிடிச்சு, அவச்யம் ஏற்படறப்போ, அங்கே ஸாக்ஷி சொல்ல வரப்பண்ண முடியும்?” என்று அவனுக்கு யோசனையாயிற்று.

முடிவாக ஸ்வாமியேதான் ஸாக்‌ஷி என்று வைத்துக் கொண்டான். ‘ஸ்வாமி’ என்று நினைத்தவுடன் அவன் மனக் கண்ணில் ஸ்வாமி – சிவலிங்கம் – மட்டுமில்லாமல் கோவில் இருந்த முழு ‘ஸெட்-அப்’பும் தோன்றிற்று. குறிப்பாக, அவன் களைத்து வந்த போது குளிக்கிறதற்குக் குளுகுளுவென்று ஜலம் கொடுத்த கிணறும், கிளுகிளுவென்று கிளை பரப்பிக் கொண்டு அவன் சாப்பிட இடம் கொடுத்த வன்னி மரமும் ஸ்வாமியோடுகூட அவன் மனக் கண்ணில் பதிந்தது. கிணற்றுக்குப் பதில் சில பேர் அவனுடைய வாடிய வயிற்றுக்கு ஆஹாரம் தந்த மடைப்பள்ளியைச் சொல்வார்கள். சிலப்பதிகாரத்தில் அப்படித்தான் இருக்கிறது. வன்னி, எல்லாரும் ஒப்புக் கொள்வது அதோடு கிணறு and/or மடைப்பள்ளி என்று வைத்துக் கொள்ளலாம்!

மனஸில் பார்த்தது அப்படியே அவன் வாயில் வர, “ஸ்வாமி, வன்னி மரம், கிணறு, மடைப்பள்ளி ஸாக்ஷியாக உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்று சொல்லி மாமா பெண் கழுத்தில் தாலியைக் கட்டினான்.

லிங்கமென்பதே அக்னி ஸ்வரூபந்தான். ‘வன்ஹி’ என்றாலும் அக்னி என்றே அர்த்தம். இப்படி இரட்டை அக்னி ஸாக்ஷி!

தம்பதியாக மதுரைக்குத் திரும்பினார்கள்.

திடுதிப்பென்று மாமா பெண் என்று சொல்லிக் கொண்டு ஒரு இளையாளை அகமுடையான் அழைத்துக் கொண்டு வந்திருப்பதைப் பார்த்ததும் மூத்தாளுக்கு ஆத்திரமும் அஸூயையுமாக வந்தது. ஆனாலும் மென்று முழுங்கிக் கொண்டு அவர்களை வரவேற்றாள்.

அப்புறம் சண்டை என்று மூளாமலே உள்ளூர கமுக்கமாக cold war என்று சொல்கிறார்களே, அந்தச் சூழ்நிலையிலே அந்தக் குடும்பம் சில வருஷங்கள் நடந்தது. இதற்கிடையில் இளையாளுக்கும் குழந்தை பிறந்து வளர்ந்தது.

ஒரு நாள் மூத்தாள் பிள்ளை இளையாள் பிள்ளையைக் காட்டடியாக அடித்து விட்டது. அதுவரை எவ்வளவோ பொறுமையாயிருந்து வந்த இளையாள் அடித்த பிள்ளையை அதட்டினாள். அப்போதுங்கூட அடிக்காமல் அதட்டத்தான் செய்தாள்.

ஆனால் அதுவே எரிமலை மாதிரி வெடிக்கத் தயாராயிருந்த மூத்தாளைக் கிளறிவிட்டு நெருப்பைக் கக்க வைக்கப் போதுமானதாயிருந்தது. “குலம் கோத்ரம் இல்லாம, முறைப்படி கல்யாணம் பண்ணிக்காம என் புருஷனைக் கையில போட்டுண்ட” – சின்ன பாஷையில் அவளை ஒரு சொல் சொல்லி – “அப்படிப்பட்டவளுக்கு சாஸ்த்ரப்படி, ஸம்ப்ரதாயப்படி, சட்டப்படி இந்த வீட்டுக்கு வார்ஸா இருக்கிற பிள்ளையை ஏச வாயேது?” என்று ஆரம்பித்து ஒரு பாட்டம் தீர்த்து விட்டாள்.

அவமானத்தில் அப்படியே மட்கி மண்ணாகிவிட்ட மாதிரி உட்கார்ந்த இளையாள் அப்புறம் மீனாக்ஷி – ஸுந்தரேச்வரர் ஆலயத்துக்கு ஓடினாள். பொற்றாமரைக் குளத்தில் ஸ்நானம் பண்ணிவிட்டு ஸ்வாமி ஸந்நிதிக்குப் போய்க் கதறினாள். “அப்பா! உன்னையும், உன் ஸ்தல வ்ருக்ஷத்தையும், உன் அபிஷேகக் கிணற்றையும் – உனக்கு நைவேத்யம் பண்ணும் மடைப்பள்ளியையும் என்றும் வைத்துக் கொள்ளலாம் – ஸாக்ஷி சொல்லியே என் முறைப் பிள்ளையான அத்தான் என்னைக் கைப்பிடித்தார். இதை இன்றைக்கு ஒருத்தி ஸந்தேஹப்பட்டு வாய்விட்டுச் சொல்கிறாளென்றால், சொல்லாமலே ஸந்தேஹப் படுகிறவர்கள் பல பேர் இருப்பார்கள். எல்லார் ஸந்தேஹத்தையும் நீதான் தீர்த்து வைக்கணும், இல்லாவிட்டால் உன் ஸந்நிதியிலேயே உயிரை விட்டு விடுவேன்” என்று கதறினாள்.
”உன் மூத்தாளையும் ஊராரையும் இங்கு அழைத்து வருக!” என்று ஸ்வாமி அசரீரியாகச் சொன்னார்.

அப்படியே அழைத்துக் கொண்டு வந்தாள்.

ஸுந்தரேச்வர ஸ்வாமி, ஸோமஸுந்தரக் கடவுள் என்றும் சொக்கநாதப் பெருமான் என்றும் தமிழ் நூல்களில் அன்போடு சொல்லப்படுபவர், தமது அறுபத்து நாலாவது லீலையாக, தாமே நேரில் ஒன்றும் செய்யாமல் ஸினிமா ‘ட்ரிக்-ஷாட்’ காட்சி மாதிரித் திருப்புறம்புயத்து ஸாக்ஷிகளை மட்டும் மதுரையில் தன் ஸந்நிதிக்கே வருவித்துக் காட்டினார்!

ஸந்நிதியின் ஈசான்ய திசையில் திருப்புறம்புய சிவலிங்கம், வன்னி, கிணறு – மடைப்பள்ளி சேர்த்துக் கொள்ளலாம் – எல்லாம் தோன்றின. ஒரு முஹூர்த்த காலம் அப்படித் தோன்றிவிட்டு யதா ஸ்தானம் போய்ச் சேர்ந்தன.

ஊரே அதிசயப்பட்டு ஆஹாகாரம் பண்ணி, இளையாளுடைய பக்தி மஹிமையை ஸ்தோத்ரம் செய்தது.

மூத்தாளும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள்.

கோபம் தணியாத புருஷன், அவளைத் தள்ளி வைக்க நினைத்தான்.

அப்போது இளையாள் அவனிடம், “அப்படிப் பண்ணாதீங்க! யாருக்கும் தோணக் கூடிய ஸந்தேஹந்தான் அக்காவுக்கும் தோணிச்சு. அவங்க அதை மறைக்காம சொன்னதாலதான் இந்தச் சின்னவளோட கற்பு, பக்திங்களை ஸ்வாமியே ரூபிச்சுக்காட்டி, உலகம் தெரியப் பண்ணியிருக்காரு” என்று கேட்டுக் கொண்டாள்.

புருஷனும் மனஸை மாற்றிக் கொண்டான்.

கதை மங்களமாக முடிந்தது.

முடிவுரை : திருவொற்றியூர்
நான்தான் கதைக்கு மங்களம் பாடுவேனா என்று இருக்கிறது! விக்நேச்வர்ரை வேண்டிக் கொண்ட்து போக, போதும் போதும் என்கிற அளவுக்கு அவர் கிளறி விட்டுக் கொண்டிருக்கிறார்! வன்னி மரத்தைச் சொன்னவுடன் திருவொற்றியூர் மகிழ மரம், ஸுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் கதையில் சங்கிலி நாச்சியாருக்காக ஸ்வாமி அந்த மரத்துக்குள்ளே ஸாக்ஷியாக ஸாந்நித்யம் அடைந்தது எல்லாம் ஞாபகம் வருகிறது. நிறுத்திக் கொள்கிறேன். பெரிய புராணம் மூலம், வசனம் எல்லாம் புஸ்தகம் இருக்கிறது. நீங்களுந்தான் கொஞ்சம் தேடி, கீடிக் கண்டுபிடித்துப் படித்துப் பாருங்களேன்! எல்லாவற்றையும் நானே சொல்லி விட்டால்?