ஈசனே ஸாக்ஷியாக நான் மெடஃபிஸிக்ஸ் சொல்ல நினைக்கவில்லை கதை சொல்லத்தான் உத்தேசித்தேன் மெடஃபிஸிக்ஸ் அதுவாகவே வந்து க

ஈசனே ஸாக்ஷியாக

நான் மெடஃபிஸிக்ஸ் சொல்ல நினைக்கவில்லை. கதை சொல்லத்தான் உத்தேசித்தேன். மெடஃபிஸிக்ஸ் அதுவாகவே வந்து கொஞ்சம் இழுத்தது. அப்புறம் ஸுக்ரீவ ஸக்யம் கதை சொன்னேன். ஆனால் இந்தக் கதையும் நான் உத்தேசித்த கதையில்லை!

ஸ்வாமியே ஸாக்ஷியாக வந்து நிஜத்தை (நி)ரூபித்ததாக அநேக ஸ்தல புராணங்களில் இருக்கிறது. இரண்டு பேருக்கு மத்தியில் ஸந்தேஹம், மனஸ்தாபம் வந்து விடுகிறது. நிஜத்தை எடுத்துச் சொல்லி ரூபித்து அதைப் போக்க லோகத்தில் மநுஷ்யாள் யாருமே இல்லை. அந்த ஸந்தர்பத்தில் அநியாயத்துக்கு ஆளாகி மனஸ் துடிக்கிற கட்சிக்காரர் ஆண்டவன் தான் ஸாக்ஷி சொல்லி ரூபிக்க வேண்டுமென்று ‘சாலஞ்’ஜாகவே பிரார்த்தனை பண்ணுவார். ’இன்ன இடத்தில் இப்படி நடந்ததற்கு இன்ன ஊர் கோயிலிலுள்ள இன்ன ஸ்வாமிதான் ஸாக்ஷி’ என்பார். அந்த ஸ்வாமியும் அப்படியே ஸாக்ஷி சொல்லி நியாயமுள்ளவரின் கட்சியை நிலைநாட்டுவார். இப்படிப் பல ஸ்தல புராணக் கதைகள் இருக்கின்றன. அதில் சிலதைச் சொல்லணுமென்று தான் ஆரம்பித்தேன். ஆனால் அது முதலில் மெடஃபிஸிக்ஸ் ’ஸாக்ஷின்’, அப்புறம் ஸ்வாமி ஸாக்ஷி சொல்வதற்குப் பதில் ஸ்வாமியே அக்னி ஸாக்ஷியாக ஸக்யம் செய்து கொண்டது என்று திசை மாறிப் போய் விட்டது. இதெல்லாமும் நல்ல விஷயந்தானென்றாலும் சொல்ல வந்ததற்கு வேறேதானே? இப்போதாவது வேறே விஷயத்துக்குப் போகாமல் சொல்ல நினைத்ததை நிர்விக்னமாகச் சொல்வதற்கு விக்நேச்வரர் கதையில் ஆரம்பித்தால் தான் முடியும் போலிருக்கிறது. ’ஸாக்ஷி கணபதி’ என்றே ஒரு க்ஷேத்ரத்தில் இருக்கிறார். அவரில் ஆரம்பித்துப் பார்க்கிறேன்.