சிங்கள ராஜகுமாரியும் மாணிக்கவாசகரும் மாணிக்கவாசகரும் ஒரு பெண்ணின் நோயை ஓட்டி, நம் மதத்தை நிலைநாட்டியிருக்கி

சிங்கள ராஜகுமாரியும் மாணிக்கவாசகரும்

மாணிக்கவாசகரும் ஒரு பெண்ணின் நோயை ஓட்டி, நம் மதத்தை நிலைநாட்டியிருக்கிறார். அவர் ஜயித்தது ஜைனத்தை அல்ல; பெளத்தத்தையாகும். இந்தக் கதையில் வருகிற ராஜா நம் தேசத்தைச் சேர்ந்தவன் அல்ல. அவன் பக்கத்துத் தேசமான சிங்களத்தின் ராஜா. சிங்களம் என்கிற லங்கையில் புத்த மதம்தான் நெடுங்காலமாகவே பிரதானமாயிருந்தது.

இந்த பெளத்த ராஜாவுக்கு ஊமையாக ஒரு பெண் பிறந்தது. வேத மதத்தின் பெருமையைத் தெரியப்படுத்துவதற்கு ஊமையாகவாவது ஒரு பெண் தான் வரவேண்டியிருக்கிறது! சிங்கள ராஜாவுக்கு ஊமையாகப் பிறந்தது பிள்ளையாக இருந்திருக்கக் கூடாதா? ஆனால் அப்படி இல்லை. இந்தப் பெண்ணைப் பேச வைப்பதற்கு அப்பன்காரன் பல சாமியார்களிடம் அழைத்துக்கொண்டு போனான். எப்போதுமே, ஏதாவது கஷ்டம் வந்து விட்டால், எந்த மதத்தைச் சேர்ந்த சாமியாராக இருந்தாலும் அவரிடம் ஓடுவார்கள். சிங்களத்து பெளத்த ராஜா மாணிக்கவாசகரைப் பற்றிக் கேள்விப்பட்டு அப்போது அவர் இருந்த சிதம்பரத்துக்குப் பெண்ணை அழைத்துக் கொண்டு வந்தான். அதுவே வைதிகத்துக்கும் பெளத்தத்துக்கும் பலப் பரீக்ஷை நடத்தவும் வாய்ப்பாய் அமைந்தது. ஊமைப் பெண்ணை எந்த மதஸ்தர் பேச வைக்கிறாரோ அந்த மதம் ஜயித்ததாக வைத்துக் கொள்ளவேண்டும் என்று இரண்டு கட்சிகளும் ஒப்புக் கொண்டன.

வாழ்க்கை முழுவதையும் ஈச்வரார்ப்பணம் செய்து அருட்பழமாயிருந்த மாணிக்கவாசகர், “அப்பா நடராஜா! இந்த ஒரு குழந்தையின் நிமித்தமாக லோகம் முழுவதும் உன் கருணை வெள்ளத்துக்குப் பாத்திரமாகும்படி ஸத்யமான வேத தத்துவத்தை நிலைநாட்ட மாட்டாயா?” என்று பிரார்த்தித்துக் கொண்டு அந்தப் பெண்ணைப் பார்த்து ஈச்வர ஸம்பந்தமான கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார்.

‘டக் டக்’கென்று ஊமைப் பெண் எல்லாவற்றுக்கும் வாய் திறந்து பதில் சொன்னாள்.

இப்படி முதல் இரண்டு வரி மாணிக்கவாசகரின் கேள்வியும், அடுத்த இரண்டு வரி சிங்கள ராஜகுமாரியின் பதிலுமாக ஒவ்வொரு அடியும் அமைந்து, இப்படி இருபது அடிகள் கொண்டதாகத் திருவாசகத்தில் இருக்கிற பாடல் தான் ‘திருச்சாழல்’ என்பது. அதைக் கேட்டு பெளத்தர்கள் தோல்வியை ஒப்புக் கொண்டார்கள்.