ஆர்யாம்பாள் – ஸரஸவாணியும் ஆதி சங்கரரும் தமிழ் தேசத்தில் புறச் சமயம் அகன்று வைதிக மதம் புது ஜீவனோடு வே

ஆர்யாம்பாள்ஸரஸவாணியும் ஆதி சங்கரரும்
தமிழ் தேசத்தில் புறச் சமயம் அகன்று வைதிக மதம் புது ஜீவனோடு வேர் விட்டதற்கு இரண்டு ஸ்திரீகளை பகவான் கருவிகளாக வைத்துக் கொண்டு, அவர்கள் ஸ்திரீ ஸ்வபாவப்படி பின்னால் நின்று கொண்டு, அப்பர் ஸம்பந்தர் பிரபாவம் வெளியாகும்படி செய்யுமாறு லீலை செய்திருக்கிறான்.

பாரத தேசம் முழுவதையும் எடுத்துக் கொண்டாலும் ஸ்ரீ சங்கர பகவத் பாதாள் அக்காலத்தில் வேத பாஹ்யமாக (மறை வழக்கத்துக்குப் புறம்பாக) இருந்த எழுபத்திரண்டு மதங்களை ஜயித்து வைதிகத்தை ஸ்தாபித்தாரென்றால் இதுவும் ஒரு ஸ்திரீயின் தியாகத்தினால்தான் ஏற்பட்டது. அவருடைய தாயார் ஆர்யாம்பாள் அவர் எட்டு வயஸுக் குழந்தையாக இருந்தபோது ஸந்நியாஸியாகப் புறப்பட்டுப் போவதற்கு அவருக்கு அநுமதி தந்திருக்காவிட்டால், அவர் இந்தக் காரியத்தைப் பண்ணியிருக்க முடியாது.

‘சங்கர விஜய’*த்திலேயே இன்னொன்று! ஒரு பத்தினி தன் பதியைத் தியாகம் பண்ணியே மதத்தை வளர்த்திருக்கிறாள்!

இங்கே வைதிக மதத்துக்கும் அதற்கு வேறான இன்னொரு மதத்துக்கும் சண்டையில்லை. ஆசார்யாள் கர்மம், பக்தி, ஞானம் எல்லாவற்றையும் சேர்த்துச் சொன்ன total வைதிக மதத்துக்கும், அதில் கர்மத்தை மட்டுமே ஒப்புக்கொண்ட partial வைதிக மதத்துக்குமே சண்டை “வேத கர்மாவே எல்லாமும்; பக்தியும் வேண்டாம், ஞானமும் வேண்டாம்” என்று வாதம் செய்த மண்டன மிச்ரரை ஆசார்யாள் ஜயித்தார். இந்த வாதத்துக்கு மத்யஸ்தம் பண்ணித் தீர்ப்புச் சொன்னது யாரென்றால் மண்டனருடைய பத்தினியான ஸரஸவாணிதான்! ‘ஸதியும் பதியின் ஒரு பங்கு. அதனால் தன்னையும் ஆச்சார்யாள் ஜயிக்க வேண்டும்’ என்று மஹா பண்டிதையான அவள் ஆசாரியாளிடம் சொல்ல, அப்படியே அவளையும் அவர் வாதத்தில் வென்றார்.

அப்போது ஸம்பூர்ண வைதிக மதமானது அதன் ஒரு அம்சமான கர்ம மார்க்கத்தின் மேலே ஜயம் பெற்றுவிட்டதாகத் தீர்ப்புச் சொல்லும் பொறுப்போடு ஸரஸவாணியின் பங்கு தீர்ந்து விடவில்லை. அதற்காகத் தன்  பதியையே தியாகம் செய்ய வேண்டியதாகவும் அவளுக்கு ஏற்பட்டது. ஏனென்றால், மண்டனமிச்ரர் வாதத்தில் தாம் ஜயித்தால் ஆசார்யாள் ஸந்நியாஸத்தை விட்டுவிட்டுத் தன் மாதிரி க்ருஹஸ்தராக வேண்டுமென்றும், இதற்கு மாறாக ஆச்சாரியாள் ஜயித்துவிட்டால், தாம் கர்மாவையெல்லாம் விட்டு விட்டு அவரைப் போலவே ஸந்நியாஸியாகி விடுவதாகவும் ‘சாலஞ்ஜ்’ பண்ணியிருந்தார். எந்தப் பத்தினிப் பெண்டும் செய்யத் துணிய முடியாத இந்தத் தியாகத்தை ஸரஸவாணி நம் நெஞ்சைத் தொடுகிற மாதிரி ஒரு சின்ன சமிக்ஞை மூலம் பண்ணிவிட்டாள். ஆசார்யாளிடம், “நீங்கள் ஜயித்துவிட்டீர்கள். இவருக்கு ஸந்நியாஸம் கொடுங்கள்” என்று அவள் நேராகச் சொல்லவில்லை – அப்படிச் சொல்லியிருந்தால் அவளுடைய அறிவுப் பக்குவத்தின் அருமை நமக்குத் தெரிந்திருக்காது.

வாதமெல்லாம் அப்போது முடிந்து, அது இரண்டு பேரும் போஜனம் செய்ய வேண்டிய ஸமயமாயிருந்தது.

ஸந்நியாஸியின் போஜனத்துக்கு பிக்ஷை என்று பெயர். கிருஹஸ்தனின் போஜனத்துக்கு வைச்வதேவம் என்று பெயர்.

ஸரஸவாணி என்ன செய்தாளென்றால் ஸந்நியாஸியாயிருந்த ஆசார்யாளை மட்டுமல்லாமல், அந்த நிமிஷம் வரை க்ருஹஸ்தராயிருந்த மண்டன மிச்ரரையும் சேர்த்து, “இரண்டு பேரும் பிக்ஷைக்கு  எழுந்தருளணும்” என்று பிரார்த்தித்துக் கொண்டாள்!

அவள் ஸரஸ்வதியின் அம்சமாதலால் இவ்வளவு அர்த்த புஷ்டியுடன் பேசினாள்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
* ஆதி சங்கரரின் சரிதம்