தேசத்தையே ரக்ஷித்த பெண்டுகள் இதெல்லாம் ‘இன்டிவிஜுவல்’ என்கிற தனிமனிதர்களுக்குப் பெண்பாலார் ஆத்ம ரீதியில் செய்

தேசத்தையே ரக்ஷித்த பெண்டுகள்
இதெல்லாம் ‘இன்டிவிஜுவல்’ என்கிற தனிமனிதர்களுக்குப் பெண்பாலார் ஆத்ம ரீதியில் செய்த உபகாரம். நான் சொல்ல வந்தது இதையல்ல. தங்களுடைய மதாபிமானத்தால் தேசத்தையே ர‌க்ஷித்த பெண்டுகளைப் பற்றிச் சொல்லவே வந்தேன்.

மதத்துக்கு வரும் ஆபத்து பற்றி ஆரம்பித்தேன். புருஷன் வேத தர்மத்தை விட்டு வேறே மதத்துக்குப் போகிற போது, ‘அவன் இஷ்டம் தான் நம் இஷ்டம்; எது பண்ணினாலும் பண்ணிவிட்டுப் போகட்டும்’ என்றில்லாமல், அவனையும், அவனோடு சேர்த்து ஒரு ராஜ்யம் முழுவதையும் வைதிகத்துக்குத் திருப்பிக்கொண்டு வரக் காரணமாயிருந்த ஒரு பத்தினியை நினைத்துக்கொண்டுதான் இந்தப் பேச்சை ஆரம்பித்தேன்.

அவளுக்குப் பெயர் மங்கையர்கரசி. ‘மங்கையர்க்கரசியார்’ என்று மரியாதை கொடுத்து அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராக அவளைச் சொல்லியிருக்கிறது. காரணப் பெயராகவும் அதை நினைக்கும்படி நிஜமாகவே ஸ்திரீ குலத்துக்கு, மங்கையருக்கு, குண விசேஷத்தால் ராணியாக – அரசியாக – இருந்தவள் அவள்.  வாஸ்தவத்திலும் பாண்டிய நாட்டின் ராணியாயிருந்தாள்.

ஆயிரத்து முந்நூறு வருஷங்களுக்கு முன்னாலிருந்த பாண்டிய ராஜாவின் பத்தினி அவள். சோழ ராஜாவின் பெண்ணாகப் பிறந்தவள். அந்தக் காலத்தில் சோழர்கள் ஆதிக்கம் குன்றியிருந்தார்கள். வடக்கே பல்லவ மஹேந்திர வர்மாவும், தெற்கே பாண்டியன் நின்றசீர்நெடுமாறன் என்கிற மாறவர்மாவும் தலைதூக்கியிருந்தார்கள்.  இந்த இரண்டு ராஜாக்களுமே வைதிக மதத்தை விட்டு ஜைனத்துக்குப் போயிருந்தவர்கள்.  முதலில் அப்பர் ஸ்வாமிகளின் பிரபாவத்தினால் மகேந்திர வர்மா வைதிகத்துக்குத் திரும்பி வந்தான்.