மதத்தைக் காத்த மாதரசியர் ஞானமார்க்கம் காட்டிய இரு ராணிகள் நம்முடைய மதத்துக்குப் பெரிய ஆபத்து வந்த போதெல்லாம்

மதத்தைக் காத்த மாதரசியர்
ஞானமார்க்கம் காட்டிய இரு ராணிகள்
நம்முடைய மதத்துக்குப் பெரிய ஆபத்து வந்த போதெல்லாம் அதை ரக்‌ஷித்துக் கொடுத்திருப்பது ஸ்த்ரீகுலம்தான்.

நம் மதத்தின் சகல தர்மங்களுக்கும் வேராக இருப்பவர்களே பெண்கள்தான் – “ஸ்த்ரீ மூலம் ஸர்வ தர்மா:” என்றே சொல்லியிருக்கிறது.

நம் மதத்துக்கு என்ன பெயர்? ‘ஹிந்து மதம்’ என்பது தப்பு. அது வெளி தேசத்தவர்கள் வைத்த பெயர். வேத மதம் என்பதே ஸரியான பெயராகும். அந்த வேதத்தை ஒரு தேவதையாகச் சொல்லும்போது புருஷ தெய்வமாகவா சொல்கிறோம்? இல்லை. ‘வேத மாதா’ என்றுதான் அம்மாவாகச் சொல்கிறோம். நம் மதமே ஸ்திரீயாக இருக்கிறது என்பதற்கேற்ப அது ஸ்திரீகளாலேயே ஜீவன் பெற்று வந்திருக்கிறது.

“கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்” என்று, அவன் நல்லதோ கெட்டதோ எது பண்ணினாலும் அவன் மனஸுப்படியேதான் போகவேண்டுமென்று சரணாகதி செய்தவர்களாகவே நம் தேசத்தின் மஹா பதிவிரதைகளில் பெரும்பாலோர் இருந்தாலும், இதற்கு வித்தியாசமாக, புருஷன் தப்பாகப் போகும்போது அவனைத் திருந்தப் பண்ணியவர்களும் இருந்திருக்கிறார்கள்.

பொதுவாக எல்லா ஜனங்களும் இருக்கிறமாதிரி இகலோக ரீதியிலேயே போயிருக்கக்கூடிய பதியையும் வயிற்றில் பிறந்த குழந்தைகளையும் ஞான மார்க்கத்தில் திருப்பிவிடும் அளவுக்கு மஹாஞானிகளாக இருந்த ஸ்த்ரீகளும் நம் தேசத்தில் இருந்திருக்கிறார்கள் என்று நம் புராதனமான புராணங்களிலிருந்தும் ஞான நூல்களிலிருந்தும் தெரிகிறது. அப்படிக் குறிப்பாக இரண்டு ராணிகளைச் சொல்லவேண்டும்.

ஒருத்தி சூடாலா. அவளைப் பற்றி ‘யோகவாஸிஷ்டம்’ என்ற உத்தமமான ஞானக்ரந்தத்தில் வருகிறது. அவள் ஆத்மாநாத்ம விசாரம் செய்துகொண்டு, அதோடு யோக ஸித்திகளெல்லாம் கைவரப் பெற்ற மஹா ஞானியாக இருந்திருக்கிறாள். அவளுடைய பதி – சிகித்வஜன் என்கிறவன் – குறைசொல்லும்படி இல்லாவிட்டாலும் எல்லார் மாதிரியும் லோக ரீதியிலேயே ராஜாவாக இருந்தவன். ஆனால் காலம் போகப்போக, அவனைச் சூடாலாவின் இன்ஃப்ளுயென்ஸே ஞான மார்க்கத்துக்குத் திருப்பிவிடுகிறது. தர்ம – அர்த்த – காம – மோக்‌ஷங்களில் மோக்‌ஷம் நீங்கலாக மற்ற மூன்றுக்கும் ஒரு பத்னியே பதிக்குத் துணையாயிருப்பவள் என்றுதான் சாஸ்த்ர வசனம்.  இங்கேயோ பதியின் மோக்‌ஷத்திற்குப் பத்னியே துணை செய்திருப்பதாகக் கதை வித்யாஸமாக – அழகான வித்யாஸமாக – போகிறது.

இன்னொரு ராணி ஞானி, மதாலஸா என்கிறவள். அவள் கதை ‘மார்க்கண்டேய புராணத்தில்’ வருகிறது. உள்ளுக்குள்ளே ஞானியாக இருந்தாலும் வெளியிலே குடும்ப ஸ்த்ரீ மாதிரியே அவள் இருந்திருக்கிறாள். அவளுக்கு நாலு பிள்ளைகள் பிறக்கின்றன. முதல் மூன்று பிள்ளகளுக்கும் சிசுப் பிராயத்தில் தாலாட்டுப் பாடுகிற நாளிலிருந்து அவள் ஞானோபதேசம் செய்கிறாள்.

அதனால் அவர்கள் ராஜ்யத்தை விட்டுவிட்டு நிவிருத்தி மார்க்கத்துக்குப் போய் விடுகிறார்கள். லோகத்திலே தர்ம ராஜ்யம் நடக்கவேண்டும் என்பதற்காக நாலாம் பிள்ளையை மட்டும் அவள் நல்ல ராஜாவாக இருப்பதற்கான உபதேசங்கள் கொடுத்து பிரவிருத்தி மார்க்கத்திலேயே பழக்குகிறாள். ஆனாலும் வயோதிக தசையில் தன்னுடைய பதியுடன் அவள் தபஸுக்காக காட்டுக்குப் போகும்போது, அந்தப் பிள்ளையையும் பிற்காலத்தில் உரிய சமயத்தில் நிவிருத்திக்குத் திருப்புவதற்கான ஞானோபதேசத்தை எழுதி ஒரு மோதிரத்துக்குள் வைத்து, அதை அவனுக்குப் போட்டு விட்டே போகிறாள். அப்படியே பிற்பாடு அவனும் ஞான வழிக்குத் திரும்புகிறான்.