பெயருக்கு ஆசைப்படாதவன் அகஸ்த்யர் உத்தரவுப்படியே ஸ்வர்ணத்தைக் கொண்டு பிரம்மசாரி சேரமாதேவியில் அணை கட்டி மாடு போன மார்க்கமாய்,

பெயருக்கு ஆசைப்படாதவன்
அகஸ்த்யர் உத்தரவுப்படியே ஸ்வர்ணத்தைக் கொண்டு பிரம்மசாரி சேரமாதேவியில் அணை கட்டி மாடு போன மார்க்கமாய், அணையிலிருந்து கால்வாய் வெட்டி, மடைகள், வடிகால்கள், ஏரிகள் எல்லாம் அங்கங்கே அமைத்து, பரந்தாரீயின் பெரிய மடுவில் கால்வாயைக் கொண்டு போய் முடித்தான். ஸீனியபுரத்தில் கலாசி தன் வீட்டை இடித்துக் கால்வாயைக் கட்டிக்கொண்டு போக அநுமதித்ததற்குப் பிரதியாக அங்கே அமைத்த மடைக்குக் கலாசி மடையென்றும், அந்த இட்த்திலிருந்து கால்வாய்க்கே கலாசிக் கால்வாய் என்றும் பெயர் வைத்தான்.
அவளே இப்படிக் கேட்டுக் கொண்டாள் என்று சொல்வதுமுண்டு. எனக்கு அது அவ்வளவு ஸம்மதமாகப் படவில்லை. ஊருக்கு நன்மையாக வெட்டப்படும் ஒரு கால்வாய்க்காக நஷ்ட ஈடு இல்லாமல் தன் வீட்டையே கொடுத்தவளுடைய தியாக புத்திக்கு நான் சொல்கிற கதைதான் சரியாய் இருக்கிறது. அவளுடைய பெயரை இவனாகவே வைத்து அவளுக்கு என்றைக்கும் புகழ் தேடிக் கொடுத்தான் என்பதே அவனுடைய குணச் சிறப்புக்கும் பொருத்தமாயிருக்கிறது.
அவள் பெயரைச் சிரஞ்சீவியாக்கியவன் – கால்வாய்க்கே காரணபூதம், கருவி எல்லாமாயிருந்தவன் – தன் பெயரே உலகுக்குத் தெரியாமலிருந்து அப்படியே போய்விட்டான்! இன்றைக்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் சாகுபடிக்கும், ஆயிரக்கணக்கான மனுஷ்யர்கள், மிருகங்கள் குடிக்கவும், குளிக்கவும் நீரைத் தந்து கொண்டு அக்கால்வாய் மாத்திரம் இருக்கிறது. பேர் தெரியாதவனுடைய ஊரை வைத்து அதைக் ‘கன்னடியன் கால்வாய்’ என்றே சொல்கிறார்கள். ’கர்நாடக குல்யா’ என்று சேரமாதேவி சாஸனத்தில் ஸம்ஸ்க்ருதப் பேர் கொடுத்திருக்கிறது. அந்த சாஸனத்தை திருவனந்தபுரம் ஸமஸ்தானத்தார் நல்லபடியாகக் காப்பாற்றிக் கொடுத்திருக்கிறார்கள்.