தாஸியின் உத்தம சிந்தை உலகத்துக்கு உதவ வேண்டும் என்பதற்காக இப்படி அவன் மாட்டோடு இழுபட்டுப் போய்க் கொண்டேயிருந்தபோது அது ஸீனிய

தாஸியின் உத்தம சிந்தை
உலகத்துக்கு உதவ வேண்டும் என்பதற்காக இப்படி அவன் மாட்டோடு இழுபட்டுப் போய்க் கொண்டேயிருந்தபோது அது ஸீனியபுரம் என்கிற ஊரில் ஒரு தாஸியின் வீட்டுக்குள்ளாகப் போயிற்று. லக்‌ஷ்யத்துக்காக மானாபிமானம் விட்ட சுத்தப் பிரம்மச்சாரியும் அதோடேயே போனான். போகிற வழியையெல்லாம் அவன் அடையாளம் செய்து கொண்டதில் இந்த வீட்டையும் செய்து கொண்டான். இதை கவனித்தாள் அந்த தாஸி. கலாசி என்று அவளுக்குப் பெயர். அவள் உடனே பசுவுக்கு முன்னால் வந்து மறித்து நின்றுகொண்டு, “ஏன் என் வீட்டுக்குள் மாடு வரவிட்டாய்? அப்புறம் அடையாளம் வேறு பண்ணிக் கொள்கிறாய்?” என்று கேட்டாள்.
ஸத்யஸந்தனான பிரம்மச்சாரி எல்லா விருத்தாந்தமும் சொன்னான். “பசுவின் கதியை நானாகத் தடுக்கக் கூடாது என்பதால்தான் இதை உன்னிடம் சொல்லாமல் போனேன். கால்வாய் வெட்டும்போது, உன்னைக் கேட்டுக்கொண்டு, உனக்குரிய ஸ்வர்ணத்தைக் கொடுத்துவிட்டு, இந்த வீட்டை இடித்து, இதையும் கால்வாய் மார்க்கத்தில் கொண்டுவர இருந்தேன்” என்று தெரிவித்துக் கொண்டான்.
வழியிலே ஆர்ஜிதம் செய்துகொள்ளும் பிறத்தியார் சொத்துக்களுக்கு நஷ்ட ஈடு கொடுத்துவிடும்படியும் அகஸ்த்யர் சொல்லியிருந்தார். ‘காம்பன்சேஷன்’ என்று சொல்கிறார்களே, அது!
உடனே கலாசி, “அதெல்லாம் நீ ஒன்றும் நஷ்ட ஈடு தரவேண்டாம். இங்கே பயிர்கள் பாசனமில்லாமல் நாசமாகின்றன. நீ வெட்டுகிற கால்வாயில் இந்த ஊர் வாழும். அப்படி வாழப் பண்ணும் புண்யத்தில் எனக்கும் இந்த வீட்டைக் கொடுப்பதால் பங்கு கிடைப்பதே போதும். அதோடு ஊர் வயலுக்கெல்லாம் ஜலம் வரும் போது என் நிலத்துக்கும்தானே கிடைக்கப் போகிறது?” என்று பெரிய மனஸோடு சொல்லிவிட்டாள். எந்தக் குலத்தவரானாலும், எந்தத் தொழில் செய்பவர்களானாலும் அவர்களிலும் உத்தமமான சிந்தை உள்ளவர்கள் இருக்கவே செய்வார்கள்.
அப்புறம் பசு அவனைக் கொஞ்ச தூரம் இழுத்துக்கொண்டு போய் ‘பரந்தாரீ’ என்னும் கிராமம் வந்தவுடன் அங்கேயுள்ள வறண்டுபோன ஒரு ஏரிக்கரையிலிருந்து அப்படியே பறந்துபோய் மறைந்துவிட்டது. இப்போது அந்த கிராமத்தை ‘பிரஞ்சாரி’ என்கிறார்கள்.
அகஸ்த்யரின் மகிமையால் வந்த தெய்வப் பசுவே அது என்று பிரம்மச்சாரி புரிந்துகொண்டான். பசுவைவிடப் புனிதமான ஜந்து எதுவுமில்லை. முப்பத்து முக்கோடி தேவதைகளும் அதில் அடக்கம். சகல பாபங்களையும் போக்கும் தாம்ரபர்ணியிலிருந்து வரும் கால்வாய்க்கு எத்தனை பெருமையுண்டு என்று காட்டவே இப்படிப் பசு ரூபத்தில் அகஸ்தியர் அந்தக் கால்வாய்க்கு ‘ப்ளான்’ போட்டுக் கொடுத்தது.