திருவலஞ்சுழி பிள்ளையார்

திருவலஞ்சுழி பிள்ளையார்

திருவலஞ்சுழியில் அவள் பிலத்திலிருந்து ஸம பூமிக்கு வந்த இடத்தில் ஒரு பிள்ளையார் இருந்தார். திருவலம்புரியில் எப்படி ஊர்ப் பெயருக்கேற்ப வலம்புரீச்வரர் இருந்தாரோ அப்படியே இந்த திருவலஞ்சுழியிலும் பிள்ளையார் வலம்புரி விநாயகராக இருந்தார் - அதாவது தும்பிக்கையை வலப்பக்கமாகச் சுழித்துக் கொண்டிருக்கிற அபூர்வமான ரூபத்தில் அவர் இருந்தார். 'தக்ஷிணாவர்த்த கணபதி'இன்று இந்த மூர்த்தியைச் சொல்வார்கள். 'தக்ஷிணஆவர்த்த'என்றால் 'வலது பக்கம் சுழித்த'என்று அர்த்தம்.

திருவலஞ்சுழியில் இப்போது பிரஸித்தமாக இருக்கிற மூர்த்தி 'ச்வேத விநாயகர்'. தமிழில் 'வெள்ளை வாரணப் பிள்ளை'. வெள்ளை வெளேரென்று ஸலவைக் கல்லில் பண்ணின மாதிரி இருப்பார். அந்த ஸ்தலத்திலுள்ள பாடல் பெற்ற சிவாலயத்துக்கு வெளியிலே தனிக் கோயிலில் அவர் இருக்கிறார். அங்கேயிருக்கிற ஸலவைக்கல் பலகணி இந்தத் தமிழ் தேசத்தின் மிகவும் அபூர்வமான சில்ப அதிசயங்களில் ஒன்று. இந்த ச்வேத விநாயகரைப் பூஜித்தே தேவேந்திரன் அம்ருதம் பெற்றான் என்று கதை.

ஆனால், நமக்கு அமிருத தாரையான காவேரியை தமிழ் தேசம் மீளவும் பெற்ற திருவலஞ்சுழியில் இருந்த 'தக்ஷிணாவர்த்த கணபதி' என்று நான் சொன்னது இந்த ச்வேத விநாயகரை அல்ல. இவர் (ச்வேத விநாயகர்) பெரும்பாலான கோயில்களில் உள்ளதைப் போல் இடது பக்கம் தும்பிக்கையைச் சுழித்த 'வாமாவர்த்த கணபதி'தான். நான் சொன்ன வலம்புரி விநாயகர் இருப்பது சிவாலயத்திலேயேதான். தனிக் கோவிலாக இல்லாமல் சிவலாயத்தின் அநேக ஸந்நிதிகளில் ஒன்றில் அவர் இருக்கிறார்.

பிலத்திலிருந்து ஸம பூமிக்கு வந்த காவேரி, வலது பக்கம் தும்பிக்கையைச் சுழித்த அவரைத்தான் தானும் வலது பக்கம் சுழித்துப் பிரதக்ஷிணம் பண்ணிவிட்டு மேற் கொண்டு ஓட ஆரம்பித்தாள்.

கொடகிலே கன்னங் கரேலென்று காக்காயாக வந்து இவர் கவிழ்த்து விட்டதினாலேயே ஓட ஆரம்பித்த காவேரி தன்னுடைய போக்குக்கு வந்த விக்னம் நீங்கி மறுபடி பூமிக்கு மேல் ஓட ஆரம்பித்தபோது வெள்ளை வெளேரென்றிருக்கிற ச்வேத விநாயகரிருக்கும் ஊரிலுள்ள வலம்புரியானை - வலம்புரி யானையை - வலம் வந்து மேலே பிரவஹித்துக் கொண்டு போனாள்.

பிள்ளையார் பிரதக்ஷிணத்தோடு ஆரம்பிப்பது வழக்கம்;தக்ஷிணாவர்த்தப் பிள்ளையாரின் பிரதக்ஷிணத்தோடு கதையை முடிக்கிறேன்.


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is ஈசனின் அருள் லீலை
Previous