மஹரிஷி கண்ட உபயம்

மஹரிஷி கண்ட உபாயம்

மஹரிஷி கொஞ்சம் ஆலோசனை செய்ததும் அவருக்கு உபாயம் புரிந்தது. 'லோகம் பண்ணின ஏதோ தப்புக்குத் தண்டனையாகத்தான், இப்படி, அருள்தாயாக இருக்கபபட்டவளை அருள் வடிவமான பரமாத்மா பள்ளத்தில் மறையப் பண்ணியிருக்கிறார். அந்த தப்புக்கு பிராயசித்தமாக ஒரு பெரிய தியாகம் பண்ணினால்தான் அவள் வெளியில் வரும்படியாக ஈச்வரன் அநுக்ரஹிப்பார்'என்று ஏரண்டகருக்குத் தெரிந்தது.

ராஜானம் ராஷ்ட்ரஜம் பாபம் :குடிகள் பண்ணும் பாபமெல்லாம் அவர்களை நல்வழிப்படுத்தத் தவறிய ராஜாவிடம் போய்ச் சேர்ந்துவிடும். ஆனதால் ஜன ஸமூஹத்தின் குற்றத்தினால் ஒரு விபரீதம் உண்டாகும்போது அதற்குத் தியாக ரூபமாக பரிஹாரம் பண்ணவேண்டுமென்றால் அரசனுடைய உயிரைப் பலி கொடுத்தால் கஷ்டம் நீங்கி நல்லது நடக்கும். அல்லது ஒரு ஞானியை பலி தரலாம். ஞானியின் ஹிருதயத்திலிருந்து தன்னியல்பாக அது பாட்டுக்கு ஸகல ஜனங்கள் மீதும் கருணை ஊறிக் கொண்டிருக்கும். ஸர்வபூத அந்தராத்மாவான ஈச்வரனை அந்த ஞானி கண்டுகொண்டவனாகையால் அவனுக்குள் ஜன ஸமூஹம் பூரா அடக்கம் என்று வைத்துக் கொள்ளலாம். ஆகையால் இப்படிப்பட்ட ஒரு ஞானியை பலி தந்தாலும் மக்கள் குலத்துக்குப் பெரிதாக ஒரு நன்மையை ஸாதித்துத் தர முடியும்.

''என்ன உபாயம்?''என்று கேட்ட ராஜாவிடம் இதைச் சொன்னார் ஏரண்டகர். அதைக் கேட்டவுடன் ராஜா, ''ஆஹா, அப்படியானால் என் பிரஜைகளுக்காக, இனிமேலே பிரளய பரியந்தம் வரப்போகிற அவர்களுடய ஸந்ததிகளின் நன்மைக்காக இதோ நானே என் சிரஸைக் கொடுக்கிறேன். கொடகிலிருந்து காலேரியை நான் இவ்வளவு தூரம் கொண்டு வந்தது பெரிசில்லை. இப்போது அவளை லோகோபகாரமாக வெளியில் வரப்பண்ணுவதற்காகப் பிராணத் தியாகம் செய்யும்படியான ஒரு பாக்கியம் எனக்கு லபித்திருக்கிறதே, இதுதான் பெரிசு''என்று ஸந்தோஷத்தோடு பலி கொடுத்துக் கொள்ளப் புறப்படடார்.

'ராஜ போகம்'என்றே சொல்வதுபோல் அநேக ஸெளக்யங்களை அநுபவித்தே பழக்கப்பட்ட சரீரத்தை அவர் இப்படி த்ருணமாத்ரமாய் நினைத்துத் தியாகம் செய்யக் கிளம்பியபோது ஞானியான ஏரண்டகர் சும்மா இருப்பாரா?

''அப்பா!நாங்கள் சரீர ஸுகத்தை அறவே விட்டு, அதைப் பிராரப்த வசத்தால் ஏற்பட்ட ஒரு சுமை என்றே நினைக்க வேண்டியவர்கள். ஆகையால் லோக க்ஷேமார்த்தமாக ஒரு சரீரம் பலியாக வேண்டுமென்றால் அதற்கு முதல் பாத்யதை எங்களுக்குத்தான். நான்தான் பலியாவேன்''என்றார்.

ஆதாயங்கள் கேட்பதில்தான் ''எனக்கு முதல் பாத்யதை, எனக்கு முதல் பாத்யதை, என்று 'ப்ரயாரிடி'கேட்பது பொது வழக்கம். இங்கேயோ சோழ ராஜாவும், மஹரிஷியிம் தங்கள் தேஹத்தையே பரித்யாகம் பண்ணுவதில் அவரவரும் 'ப்ரயாரிடி'கொண்டாடிக் கொண்டார்கள்.

''ஜனங்களின் தோஷம் அவர்களைத் திருத்தாத ராஜாவைத்தானே சேர வேண்டும்?''என்று உரிமை - செத்துப் போவதற்கு உரிமை! - கேட்டார் ராஜா.

ரிஷியும் விடவில்லை. ''உனக்கு ஜனங்களுக்காகப் ப்ராணத் தியாகம் செய்யும் வாய்ப்பு யுத்தத்திலும் கிடைக்கிறது. நான் யுத்தம் பண்ணுவதற்கு இடமில்லை. ஆனதனால் என்னைத் தேடிக் கொண்டு வந்திருக்கிற இந்த ஸந்தர்ப்பத்தை நழுவ விடமாட்டேன். c வயதிலும் என்னை விடச் சின்னவன். திடீரென்று c உயிரை விட்டுவிட்டால், அடுத்து ராஜ்ய பாலனத்துக்கு யாரும் பயிற்சி பெறவில்லையாதலால் நாடே கஷ்டத்திற்கு ஆளாகும். ஜனங்களின் கஷ்டத்தைத் தீர்ப்பதாக நினைத்து c செய்கிற தியாகமே அவர்களை இதைவிடப் பெரிய அராஜகக் கஷ்டத்துக்கு ஆளாக்கிவிடும்.

உபாயம் சொன்னவன் நான் தானே?சொல்லிவிட்டு, அதைக் காரியத்தில் பண்ணிக் காட்டவும் எனக்கு இட இருக்கும்போது நான் சும்மா இருந்துகொண்டு உன்னைப் பலியாகச் செய்தால் எனக்கு ராஜஹத்தி தோஷம் உண்டாகிவிடும்''என்றெல்லாம் சொல்லிவிட்டு, அவனுடைய பதிலுக்கு கூடக் காத்திராமல், கிடுகிடுவென்று அந்த பள்ளத்துக்கு வந்தார்.

மஹா வேகத்தோடு அதற்குள்ளே பாய்கிற சுழலிலே தம் சிரஸை பலி கொடுத்து விட்டார். அதாவது அதில் அப்படியே தலை குப்புற விழுந்து விட்டார்.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is நடுவிலே வந்த ஆபத்து
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  நல்லதைச் சொல்லி ஆபத்து
Next