முதலியாரின் நடராஜர் பாடல் காலில் கொஞ்சம் அடிபட்டால்கூட அதை நிலத்தில் அழுந்த வைக்காமல், லேசாக ஊன்றிக் கொண்டுதான் நடக்கிறோம் நன்றாகவே ‘பாரலைஸ்’ ஆகி,

முதலியாரின் நடராஜர் பாடல்

காலில் கொஞ்சம் அடிபட்டால்கூட அதை நிலத்தில் அழுந்த வைக்காமல், லேசாக ஊன்றிக் கொண்டுதான் நடக்கிறோம். நன்றாகவே ‘பாரலைஸ்’ ஆகி, கால் என்று ஒன்று கண்ணுக்குத் தெரிந்தும் அது காரியத்துக்கு உதவாமல் ‘முடம்’ என்று சொல்லும்படியே ஆகிவிட்டால் அதை நிச்சயம் பூமியில் வைக்கவே மாட்டோம். தூக்கித்தான் வைத்துக் கொண்டிருப்போம். ஒரு கால் இப்படி ஆகி, இன்னொன்று நடக்கிற சக்தியோடு இருந்தால் அப்போது சக்தியுள்ள காலை மட்டுமே பூமியில் வைத்து மற்றதைத் தூக்கிக் கொண்டு நொண்டி நொண்டியே போவார்கள்.

நடராஜாவும் இடது காலைத் தூக்கித்தான் வைத்துக் கொண்டிருக்கிறார். வலது காலை மட்டும் அபஸ்மார புருஷனென்றும், முஸலகன் – தமிழ் வழக்கிலே ‘முயலகன்’ – என்றும் சொல்கிற அஸுரன் மாதிரியான ஒரு ரூபத்தின் மேலே அழுந்த வைத்திருப்பார். ‘அபஸ்மாரம்’ என்றால் நினைக்கத் தகாத சிந்தனை. அதை த்வம்ஸம் பண்ண வேண்டும். கோணாமாணா சிந்தனை மாதிரியே காலும் கையும் கோணக் கோண இழுத்துக் கொண்டு கிடக்கிற காக்காவலிப்பும் அபஸ்மாரம் என்றே பெயர். முஸலக ரோகம், முயலக நோய் என்பதும் அதைத்தான். கோணாமாணா சிந்தனையைச் சிந்தனையாகப் பார்க்க முடியாதாகையால் ஸ்தூலத்தில் ஒரு ரூபமாக நடராஜாவின் வலது காலின் கீழே காட்டும் போது, ஸ்தூலமான உடம்புக்கு ஏற்படும் கோணாமாணா வலிப்பு வியாதியின் பெயரையே அந்த ஆஸாமிக்கு வைத்திருக்கிறது. கால்-கை வலிப்புத்தான் காக்கைவலிப்பு, காக்கா வலிப்பு என்று ஆனது.

‘அந்த வலிப்புக்காரனை வலது காலால் மிதிக்கிற ஆட்டக்காரனே இடது காலைத் தூக்கிக் கொண்டிருக்கிறானே! தன்னிடமே அந்த வியாதியை அவன் வாங்கிக் கொண்டு முற்றிப் போய் அந்தக் கால் ‘பாரலை’ஸே ஆகி விட்டது போலிருக்கிறதே!’ என்ற பாவம் முதலியாருக்கு ஏற்பட்டிருக்கலாம். அதையே ஹாஸ்யக் கிண்டலாக்கிப் பாட்டுப் போட்டுவிட்டார்!

காம்போதி ராகத்தில் போட்ட பாட்டு. முதலில் சொன்ன கவிராயர் பாட்டு மோஹனம்.

பாட்டைச் சொல்கிறேன்.

நடமாடித் திரிந்த உமக்(கு) இடதுகால் உதவாமல்

முடமான(து) ஏனென்று சொல்லுவீரையா!

 

இதுதான் பல்லவி. ‘நட(da)மாடி’, ‘நட(ta)மாடி’ என்று இரண்டு விதமாகவும் ஆரம்ப வார்த்தையை வைத்துக் கொள்ளலாம். ஆனால் ‘நட(da)மாடி’ – நாம் எல்லாருமே பண்ணுகிறதுதான்; அதாவது நடந்து போவது. ’நட(ta)மாடி’ என்றால் ‘நடனம் ஆடி’, ‘ஆடி’ என்கிறது இங்கேதான் ஜாஸ்திப் பொருத்தம். நடனத்தை ஆடல் என்றுதானே சொல்வது? அதனால், ’நட(ta)மாடி’ என்று பாடுவதே அதிகப் பொருத்தம் என்கலாம். ஆனாலும், அடுத்த வரி ‘முமாகி’ என்று da-காரமாக இருப்பதால் முதல் வரியையும் ‘நடமாடி’ என்று பாடுவதுதான் பொருத்தம் என்றும் தோன்றுகிறது. ‘நடனமாடி, அப்படி ஆடியபடியே சுற்றிச் சுற்றித் திரிந்த நீ இப்படி ஒரு காலைத் தூக்கிக் கொண்டு ஏன் அப்படியே ஒரே ‘போஸி’ல் எத்தனையோ வருஷமாக நின்று விட்டாய்? ஏன் இப்படி உன் இடது கால் வழங்காமல் – டான்ஸ்காரன், இரண்டு காலும் ஜதிகள் போட வேண்டியவன், ஒரு கால் பிரயோஜனப்படாமல் அதைத் தூக்கி வைத்துக் கொண்டிருக்கும்படி இருக்கிறது?’ என்று கேட்டுவிட்டு, அப்புறம் அது இன்ன காரணத்தாலா, இன்ன காரணத்தாலா என்று, கவிராயர் கேட்ட மாதிரியே, பாபவிநாச முதலியாரும் அடுக்கிக் கொண்டு போகிறார்.

அந்தப் பாட்டு மாதிரியே இங்கேயும் அநுபல்லவியிலே கேள்வி எதுவும் கேட்கவில்லை; சரணத்தில்தான் அதை ஆரம்பிக்கிறார். ‘குஞ்சித சரண’த்தைப் பற்றித்தானே கேள்வி? அதனால் பாட்டின் சரணத்திலேயே கேள்விகளை ஆரம்பிக்கிறார்.

      திடல் மேவும் தில்லை நகர் மருவு பேரானந்தச்

      சுடை விரித்தாடினவா! தேவசிற்சபை அறிய

என்பது அநுபல்லவி.

கொள்ளிடத்துக்கும் வெள்ளாற்றுக்கும் நடுவே, மலைப் பாங்காக இல்லாத சமவெளியில் சிதம்பர க்ஷேத்ரம் இருக்கிறது. அதுதான் ‘திடல் மேவும் தில்லை நகர்’. அங்கே ரொம்ப ஸந்தோஷமாகத் தன்னுடைய ஸொந்த ஊர் என்று ஸ்வாமி ஒட்டிக் கொண்டு இருப்பதைத்தான் ‘மருவு’ என்று சொல்கிறார். அப்படியிருந்து கொண்டு, நமக்கெல்லாம் இன்ன என்றே தெரியாத ப்ரஹ்மானந்தமான பேரானந்தத்திலே அவன் தனக்கென்றே விசேஷமான செஞ்சடையை இரண்டு பக்கமும் விரித்துக் கொண்டு ஆடுகிறான். அதைத்தான் இங்கே சொல்லியிருக்கிறார்.

சுடிகை, சுடை என்பது சிவனொருத்தனுக்கே இருக்கப்பட்ட விசேஷம் வாய்ந்த சடைமுடிதான். ஸம்ஸ்க்ருதத்திலும் வேதத்திலேயே வருகிற ‘ருத்ர’த்திலிருந்து ஆரம்பித்து அதற்குக் ‘கபர்தம்’ என்று தனிப்பெயர் சொல்லியிருக்கிறது. அதனால் அவனைக் ‘கபர்தி’ என்று சொல்லியிருக்கிறது.

ஞான ஒளியால் ப்ரகாசமாக இருக்கும் ஞானாகாசத்தையே நாம் பார்க்கும்படி, அறியும்படி ‘சித்ஸபை’ என்று ஆக்கிக் கொண்டு அங்கேதான் அவன் ‘நடமாடித் திரிவது’. ‘தேவ சிற்சபை’ என்கிறதில் ‘தேவ’ என்றால் ‘ப்ரகாசமாயிருக்கிற’ என்று அர்த்தம். ‘தேவலோகத்து சித்ஸபை’ என்று பொருள் கொண்டால் ஸரியில்லை. இந்த ஸபை தேவலோகத்துக்கு அப்பாற்பட்டது. ‘சித்ஸபை அறிய’ என்பதை சித்ஸபையில், ‘அந்த ஸபையிலே அவனை தரிசிக்க வருகிற எல்லோரும் அறிய’ என்று நீட்டி அர்த்தமாக்கிக்கணும்.

இனிமேலே சரணம். அங்கேதான் நிந்தா ஸ்துதியாகக் காரணம் கேட்டுக் கொண்டு போவது.

     திருநீற்றைச் சுமந்தீரோ, நெருப்பான மேனிதனில்:

      சீதத்தினால் மிகுந்த வாதகுணமோ?

திருநீற்றைச் சுமந்தீரோ?’ என்பதற்கு ‘சுமந்தீரே!’ என்றே அர்த்தம். பழம் பாடல்களில் அப்படித்தான் வரும்.

’ஸ்வாமி இட்டுக் கொள்வது சந்தனமாக இல்லாமல் சுடுகாட்டு விபூதியாயிருக்கிறதே! ஏற்கெனவே அவன் அக்னியாயிருப்பவன் ஆயிற்றே!’ என்பதால் பக்தர்கள் விபூதி அபிஷேகம் பண்ணுகிறபோதும், அவனுக்கு உடம்பெல்லாம் விபூதி பூசும்போதும் அந்த விபூதியிலேயே ரொம்ப ஜில்லிப்புச் சரக்குகள் சேர்த்திருப்பார்கள் போலிருக்கிறது! ’அப்படிப் பண்ணப் போக, சூட்டு உடம்பிலே அந்த ஜில்லிப்புச் சேர்ந்ததில் கோளாறாகி உனக்குச் சீதளம் ஏறி, அதனாலேயே இடதுகால் வாதக் காலாகி விட்டதா?’ என்று இந்த முதல் கேள்வி. வெளிப்படையாகவே கேட்கிறார். கவிராயர் மாதிரி மறைத்து இல்லை. இப்படியேதான் தொடர்ந்தும்!

ஒருமையுடன் மார்க்கண்டர்க்(கு) உதவியாய் மறலி விழ

உதைக்கச் சுளுக்கேறி உண்ட குணமோ?

யமன் பிடிக்க வந்தபோது தன்னையே கதியாய்க் கட்டிக் கொண்ட மார்க்கண்டேயரை ரக்ஷித்தே ஆகணும் என்று ஸ்வாமி அதுவொன்றே சிந்தையாயிருந்ததைத்தான் ‘ஒருமையுடன்’ என்கிறார். மறலி என்றால் யமன். ‘மறல்’ என்றால் சாவு. அதை உண்டாக்குகிறவன் மறலி.

அவனை ஸ்வாமி அந்த இடதுகாலால்தான் ஓங்கி ஒரு உதைவிட்டே வதை பண்ணிவிட்டார்! அப்புறம், மறுபடி உயிர் கொடுத்தார். ‘அப்படி உதைத்ததால் அந்தக் கால் நன்றாகச் சுளுக்கிக் கொண்டு அதன் தொடர்ச்சியாக உண்டான தன்மையால் – ‘உண்ட குணம்’ என்பது ‘உண்டான தன்மை’ என்பதே; அப்படி ஆனதால்தான் – முடிவிலே அந்தக் கால் முடமே ஆகிவிட்டதா?’

பரவைதன் தெருவாசற்படி இடறிற்றோ?

ஸுந்தரமூர்த்தி ஸ்வாமிகளுக்குப் பெரியவர்கள் சாஸ்த்ரோக்தமாகக் கல்யாணம் நிச்சயித்து, அது நடந்து கொண்டிருக்கும்போது ஸ்வாமி ஒரு கிழப் பிராமணர் வேஷத்தில் அங்கே போய் அவர் தனக்கு அடிமை, அதனால் தமக்குத் தொண்டு செய்து கொண்டு தம்மிடமே கிடக்க வேண்டியவர், கலியாணம் கார்த்திகை பண்ணிக் கொண்டு குடும்ப வாழ்க்கை நடத்த உரிமை இல்லாதவர் என்று வாதம் பண்ணினார். பொய்ப் பத்திரத்தை மெய் மாதிரிக் காட்டுவது உள்பட என்னென்னவோ பண்ணி, முடிவில் தாம் ஸ்வாமியே என்று ஸுந்தரருக்குத் தெரியும்படிச் செய்தார். உடனே ஸுந்தரரும் அவருக்கு ‘மீளா அடிமை’ என்று தம்மை ஆக்கிக்கொண்டு விட்டார். அப்படி சாஸ்த்ரோக்தக் கல்யாணத்தை நிறுத்தியவரே அப்புறம் ஒரு சாப விமோசனம் ஏற்படவேண்டும் என்பதற்காக ஸுந்தரரை ‘இசை வேளாளர்’ என்று சொல்கிற ஸமூஹத்தைச் சேர்ந்த ரொம்பவும் புனிதமான பரவை என்பவளிடம் ப்ரேமை கொள்ளும்படியாகவும், அவளும் அவரை ப்ரேமித்து அவர்கள் உறவு ஏற்படுத்திக் கொள்ளும்படியாகவும் பண்ணினார்! இது திருவாரூரில். இது போதாதென்று, அதே சாபத்தின் இன்னொரு பாதி விமோசனமாகணும் என்பதற்காக வடக்கே, மெட்ராஸ் திருவொற்றியூரில் புலனடக்கத்தோடும், ஈச்வர பக்தியோடும் கன்யா மாடத்தில் – மாடம் என்கிறது இங்கே மடம் என்றே அர்த்தம் கொடுக்கும்; அப்படிப்பட்ட இடத்தில் – வசித்துக் கொண்டிருந்த வேளாளப் பெண்ணான சங்கிலி என்பவளுக்கும் ஆதி சைவப் பிராம்மணரான ஸுந்தரமூர்த்தி ஸ்வாமிகளுக்கும் பரஸ்பர ப்ரேமை உண்டாகும்படியும் பண்ணினார்.

பண்ணினார், பண்ணினார் என்று நான் சொல்வதெல்லாம் அந்தக் கதாபாத்திரங்கள் உள்பட யாருக்கும் தெரியாமல், திரைக்குப் பின்னால் இருக்கிற ஸுத்ரதாரியாக ஸ்வாமி ஸந்தர்பங்களை உண்டாக்கினதைத்தான்!

அப்புறம் ஸுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் திருவாரூருக்குத் திரும்பி வந்தார். இதற்குள்ளே பரவைக்கு திருவொற்றியூர் ஸங்கதி தெரிந்து விட்டது. அது தெரிந்து அவள் தன்னிடம் ஒரே கோபமாயிருக்கிறாள் என்பது ஸுந்தரருக்கும் தெரிந்துவிட்டது. ‘தாஸ்யம்’ என்ற அடிமை வழியில் பக்தி பண்ண ஆரம்பித்த அவர் போகப் போக ஸ்வாமிக்கு ரொம்பவும் நெருங்கிய தோழராக – ‘தம்பிரான் தோழர்’ என்றே அவரைச் சொல்லும்படியாக – ‘ஸக்யம்’ என்ற வழியில் சேர்ந்து விட்டார். ரொம்பவும் உரிமையுடன் ஸ்வாமியிடம் எதையும் வற்புறுத்திக் கேட்குமளவுக்குப் போய்விட்டார். நன்றாகத் திட்டக் கூடச் செய்தார்! அவருடைய பதிகங்களிலேயே நிறையச் சான்று இருக்கிறது! அதனால் அவருக்கு ‘வன்றொண்டர்’ – ’வன்தொண்டர்’ – என்றும் ஒரு பேர் ஏற்பட்டு விட்டது!

இப்போது ஸுந்தரர் கொஞ்சங்கூடத் தயங்காமல் ஸ்வாமியிடம், “நீயே பரவையின் வீட்டுக்குத் தூது போய் அவளை ஸமாதானப்படுத்தி ஊடலைத் தீர்க்க வேண்டும்” என்று கேட்டு விட்டார்! அதை விட ஆச்சர்யம், ஸ்வாமியும், “ஆஹா”! என்று ஒப்புக் கொண்டார்! லோகத்தின் பார்வையில் ஒரு ஆடல் மகளோடு ஒருவருக்கு இருந்த தகாத உறவுக்கு விரிசல் ஏற்பட்டபோது அதை ஒட்டி வைப்பதாகவே தோன்றும் அகார்யத்தை (செய்யத் தகாததை)ச் செய்யப் புறப்பட்டு விட்டார்! பக்த பராதீனர்!

“அப்போது வேக வேகமாகப் பரவை வீட்டுக்குப் போனாயே! அந்த வேகத்திலே அவளுடைய வீட்டு வாசல்படி இடறி விழுந்து விட்டாயா? விழுந்ததில்தான் இடதுகால் முடமாச்சா?” – இப்படிப் பாபவிநாச முதலியார் கேட்கிறார். இவருக்கும்தான் ஸ்வாமியிடம் அஸாத்யத் துணிச்சல்!

இப்படித் துணிச்சலாயிருந்தாலும் உள்ளுக்குள்ளே இவருக்கும் ஸரி, அந்த வன்றொண்டருக்கும் ஸரி, ஸ்வாமியிடம் ஒரே உருக்க மயமான பக்தி!

அதனால், “ஸ்வாமியே! உன்னை இப்படி இடதுகால் உதவாதவனாகப் பார்க்கிற பரம துர்பாக்கியம் எனக்கு ஏற்பட்டிருக்கிறதே! நான் பண்ணின மஹா பாபங்களால் தான் எனக்கு இப்படி ஒரு மனக்கஷ்டம் உண்டாகணுமென்றே உன் காலை முடமாக்கிக் கொண்டு காட்டுகிறாயா?” என்று அடுத்த கேள்வி கேட்கிறார். இரண்டே வார்த்தையில் இத்தனை அபிப்ராயத்தை ‘காப்ஸ்யூலா’க அடக்கிக் கேட்கிறார்!

      எந்தன் பாபமோ, என் சிவனே?

முதல் இரண்டு வார்த்தையிலேயே கேள்வி அடங்கி விட்டது. அப்புறம் அவருக்கு இருக்கிற பரம பக்தியில் “என் சிவனே!” என்று தன்னுடைய உடைமையாகவே அவர் ஸ்வாமியைக் கூப்பிடுவது நம்முடைய நெஞ்சைத் தொடுகிறது.

“என்னுடைய ஸொந்த ஸ்வாமியே! நான் பண்ணின பாபத்துக்காக எனக்கு மனக்கஷ்டம் என்ற தண்டனை தரணுமென்றே, த்ரிமூர்த்திகளிலும் ப்ரதானமாயிருக்கப்பட்ட நீ உன் காலை முடமாக்கிக் கொண்டாயா?” என்று கேட்கிறார்.

      எந்தன் பாபமோ, என் சிவனே?

      மூவர்க்கும் முதல்வனென

      நடமாடித் திரிந்த…..

என்று அந்தச் சரணம் பல்லவியோடு சேர்ந்து முடிகிறது.

சரணம் முடிந்ததே தவிர கேள்விகள் முடியவில்லை. அதனால் இன்னொரு சரணம் பாடியிருக்கிறார்.

இவர் பேர் பாபவிநாசம். தான் பண்ணின பாபத்தால்தான் அவன் முடமாக ஆனதா என்று மேலே கேட்டார். அடுத்த சரண ஆரம்பத்தில் பாபம் விநாசமாவதைச் சொல்லி ஒரு கேள்வி கேட்கிறார். அதிலே நிந்தை, கேலி எதுவுமில்லை. பரமதத்வத்தையே பரம பக்தியோடு கேள்வி மாதிரி ஆக்கி – கேள்வியே அதற்குப் பதிலும் ஆகிவிடும் ‘leading question’ஆக்கி - கேட்கிறார்.

பின்னிட்டு அந்தச் சரணத்தில் வருகிற இரண்டு கேள்விகளும் அதே மாதிரியானவைதான். உசந்த விஷயத்தை நல்ல காவ்ய பாஷையில் கேள்வியாகக் கேட்கிறார்.

முதல் கேள்வி:

     பக்திசெய்யும் பெரியோர்கள் பாபநாசனமாகும்

      பரமபதம் இது என்று தூக்கி நின்றததுவோ?

மஹாபக்திமான்களாக இருக்கப்பட்டவர்களுக்கும் பூர்வ கர்மாவால் ஏற்பட்ட பாபம் என்பது இருந்து கொண்டு அவர்களைக் கொஞ்சமாவது பழிவாங்கிக் கொண்டுதான் இருக்கும். முடிவாக ஸ்வாமிதான் பரம கருணையினாலே அந்தப் பாபத்தை நாசம் செய்து அவர்களுக்கு மோக்ஷாநுக்ரஹம் கொடுப்பார்.

நடராஜா நடனத்தாலேயே ஐந்தொழிலும் புரிவதாகச் சொன்னேனே, அதில் முடிவாக இந்த மாய ப்ரபஞ்ச ஸ்ருஷ்டியையே பக்தர்கள் விஷயத்தில் இல்லாததாகப் பண்ணி, அதிலே அங்கமான அவர்களுடைய பூர்வ பாபத்தையும் நாசமாக்கி, மாயைக்கு அப்பாற்பட்ட தம்முடைய பரமபதமான மோக்ஷத்தில் சேர்த்துக் கொள்ளும் ‘அநுக்ரஹம்’ என்ற ஐந்தாவது தொழிலைச் செய்வது அந்தத் தூக்கிய திருவடி, இடது திருவடிதான். நாட்யமாடுகிற அழகில் வளைந்து இருக்கும் அதைத்தான் ‘குஞ்சிதபாதம்’ என்று சொல்லி ரொம்பவும் ஸ்தோத்ரிப்பது. ‘குஞ்சிதம்’ என்றால் ‘வளைந்திருப்பது’.

அந்தத் திருவடியின் இந்த நிஜமான மஹிமையைத் தான் – நையாண்டியாக இட்டுக் கட்டி உண்டாக்கின சிறுமையில்லை; நிஜமான தத்வத்தைத்தான் – சொல்லி இங்கே கேட்கிறார். “பாபநாசம் பண்ணும் பரமபதம் இதுதான்; பிடிச்சுங்கோங்கோ இதை!” என்றுதான் ஸ்வாமி அந்தக் காலைத் தூக்கி எடுத்துக் காட்டுகிறார் என்று கேட்கிறார். “இப்படிக் காட்டுவதைத்தான் முடமானதாக ‘மிஸ்டேக்’ பண்ணிக் கொண்டேனா?” என்று கேட்காமலே கேட்கிறார்!

காவ்ய அழகிலே இதையும் மிஞ்சுவதாக இன்னொரு தத்வ ஸத்யத்தை அடுத்த கேள்வியாகப் போடுகிறார்.

“உன்னுடைய வாம (இடது) பாகம் பூராவும் அம்பாளுடையதாகையால் இந்தத் தூக்கிய திருவடியும் அவளைச் சேர்ந்ததுதான். அவள் யார்? உன்னிடம் பரம ப்ரேமை கொண்ட சிவ-காமி! பட்ட கட்டை மாதிரி இருந்த உன்னைத் தன்னிடம் ப்ரேமிக்கும் படிப் பண்ணுவதாலும் ‘சிவகாமி’! நீ கட்டையாட்டம் இருந்தாலும் அவளோ கொடி மாதிரி இருக்கிற சிவகாமவல்லி. ‘வல்லி’ என்றால் கொடி. பார்வைக்கு இப்படி லலிதமாக, லேசாக இருந்தாலும் அவளுடைய சக்தி பெரிசாக இருக்கிறது. மரம் மாதிரி உள்ள உன்னையே அசைத்து ப்ரேமையை உண்டாக்கி விடுகிறாள்!”

“உங்கள் இரண்டுபேர் ப்ரேமையும் ஸங்கமித்து, ஜீவலோகம் முழுவதிடமும் பரம கருணை என்பதாகக் கொடி மாதிரிப் படர்ந்து கொண்டே போகும்படி அவள்தான் பண்ணுகிறாள். இருந்தாலும் அவள் பார்வைக்குக் கொடியாகத்தான் ஒரே துவளலாகத் துவண்டு இருக்கிறாள். உன்னுடைய ரூபத்தில் இடது காலாக இருந்து கொண்டு அங்கே துவண்டு வளைந்திருப்பதோடு, பக்கத்திலே தனி மூர்த்தியாக நிற்கிற போது இடுப்பை வளைத்துக் கொண்டு, உடம்பையே துவள விட்டுக் கொண்டும் இருக்கிறாள்! அப்படிப்பட்டவளின் அந்த ம்ருதுவான பாதத்தை நாட்யரங்கத்தின் கெட்டித் தரையில் வைத்தால் நொந்து போகுமே என்றுதான் கீழே வைக்காமல் தூக்கிக் கொண்டிருக்கிறாயோ?”

நாட்யமாடுகிறவர் ஜதிகளை நன்றாக, அழுத்தமாகப் போட வேண்டும் என்பதால் அதன் அடித்தரையைக் கெட்டிப் பண்ணித்தான் வைத்திருப்பார்கள்… “அந்த கெட்டித் தரையில் பூங்கொடிப் பாதத்தை வைக்கவாவது?” என்று தயக்கம் கொண்டே தூக்கி எடுத்திருக்கிறாயா?

     சக்தி சிவகாமவல்லி தன் பாதம் நோகுமென்றே

      தரையில் அடிவைக்கத் தயங்கி நின்றததுவோ?

முடிவான அடி – திருவடியைப் பற்றியதேயான பாட்டின் கடைசி அடி – நிஜக் காரணங்களில் இன்னொன்றைக் கேள்வி ரூபத்தில் தெரிவிக்கிறது.

யதார்த்த ஸத்யத்தை அப்பட்டமாகவே, bare fact ஆகவே அது தெரிவிப்பதாகச் சொல்லலாம். தத்வம், காவ்ய நயம் ஆகியவற்றோடு அந்தக் கேள்வியும் இருந்தால், பாட்டு முடிந்து விட்டதே என்று நமக்கு துக்கமாக இருக்குமென்றே ஸாஹித்யகர்த்தா இப்படிப் பண்ணியிருக்கலாம்!

ஈச்வரன் கைலாஸபதியாகவும், மஹாவிஷ்ணு வைகுண்டாதிபதியாகவும் இருக்கிறாற்போல ஸத்ய லோகத்துக்கு அதிபதியாயிருப்பவர் ப்ரம்மா. அவர்தான் இந்த டான்ஸ் கச்சேரிக்குத் தாளம் அமர்த்திக் கொடுப்பவர். மஹாவிஷ்ணு ம்ருதங்கம் வாசிப்பார்; பிரம்மா கையாலே தாளம் நன்றாக அறைந்து போட்டுக் கொண்டிருப்பார். அதற்கேற்கத்தான் பரமேச்வரன் இந்தக் காலையும் அந்தக் காலையும் மாற்றி மாற்றித் தூக்கித் தரையில் குத்திக் குதித்து ஆடுவது!

அப்படி ஆடுகிற போது அவர் இடது காலைத் தூக்கிக் கொண்டிருக்கிற ஒரு ஸந்தர்ப்பம். ‘தான் இன்றைக்கு ஆடுவது போதாது. என்றைக்கும் அழகுக்கு அழகான விக்ரஹ ரூபமாகவும் நாம் இருந்து கொண்டு ஜனங்கள் கண்குளிர தரிசனம் பண்ணும்படியாகவும் இதை ஆக்கித் தரவேண்டும்’ என்று க்ருபாநிதியான ஸ்வாமிக்கு தோன்றிவிட்டது. உடனே அந்த க்ஷணத்தில் என்ன pose-ஓ அதையே snap shot என்று எடுத்து எந்த நாளும் இருக்கிற ஃபோட்டோப் படம் ஆக்குகிற மாதிரி, அவர் சித்ரமாக இல்லாமல் சில்பமாக – சிதம்பரத்தில் எத்தனையோ காலமாக ஜனங்களை ஆகர்ஷித்துக் கொண்டு வந்திருக்கிற ஸௌந்தர்ய விக்ரஹமாக – ஆகிவிட்டார்! விக்ரஹம்: ஆனாலும் வெறும் சிலையாயில்லாமல் ஜீவகளை ததும்பிக் கொண்டிருக்கிற ஸ்வாமியின் ரூபமாகவே இருப்பது! அப்படி இருக்கும்போது ஒரே போஸில்தானே இருக்க முடியும்? அப்படித்தான் அவர் ஒரு க்ஷணம் காலைத் தூக்கியதே சாச்வதமாக ஆகி, கால் ஊனமாகிவிட்டதா என்ன என்று நினைக்கும்படிப் பண்ணியிருக்கிறதா?

     ஸத்ய லோகாதிபதி தாளத்திற்(கு) ஏற்க நடம்

      தாக்கியே ஒரு காலைத் தூக்கி நின்றததுவோ?

இதுதான் அந்தப் பாட்டில், - ‘பதம்’ என்கிற வகையைச் சேர்ந்த பாட்டில் – முடிவான அடி. ‘பதம்’ என்பதும் ‘அடி’ என்று அர்த்தம் கொடுக்கும். கடைசியில் எல்லாம் ஒன்று சேர்ந்து திருவடிப் பெருமையைச் சொல்வதுதான்!