பின் இரு சரணங்கள் அந்தச் சரணம்தான் முடிந்ததே தவிர அப்புறம் இரண்டு சரணங்கள் பாடினார் ராமாயணக் கதையை வைத்துத் தம்முடைய இஷ்டமூர்த்தியைக் கேலியாகக் கே

பின் இரு சரணங்கள்

அந்தச் சரணம்தான் முடிந்ததே தவிர அப்புறம் இரண்டு சரணங்கள் பாடினார். ராமாயணக் கதையை வைத்துத் தம்முடைய இஷ்டமூர்த்தியைக் கேலியாகக் கேள்விகள் கேட்டவருக்கு பாகவதத்தை வைத்து க்ருஷ்ணனையும் தான் அப்படிச் சீண்டிப் பார்ப்போமே என்று தோன்றி க்ருஷ்ண சரித்ர ஸம்பவங்களையும் இதே மாதிரி சொல்லிக் கேள்வி கேட்டு இரண்டாவது சரணம் பண்ணியிருக்கிறார். இஷ்டமூர்த்திக்கு அப்புறம் கிஷ்டமூர்த்தி!

அந்தச் சரணத்தை முடித்த அப்புறம், ராமர் மட்டுமில்லாமல் இன்னொரு அவதாரத்தையும் பாடியதால், எல்லா அவதாரத்திற்கும் மூலமான மஹாவிஷ்ணுவே ஆன ரங்கநாதர் குறித்ததாகவும் பாடணும் என்று தோன்றி, மூன்றாவது சரணமும் பண்ணியிருக்கிறார். ஊர்ப் பெரியவர்கள் அவரிடம் கேட்டதும் அதைத்தானே?

அதிலே கேள்வி, கேலி எதுவுமில்லை. ரொம்பவும் உருக்கமாகப் பெருமாளின் அநுக்ரஹத்துக்குப் பிரார்த்திப்பதாகவே பாடிக் கீர்த்தனத்தை முடித்து விட்டார்.

இந்தப் பாட்டு ராமநாடகத்தின் கதை பாகத்தில் வராமல், பாயிரத்துக்கும் முந்தியே பாடின தனிப்பாட்டாக இருப்பது. ஆகையினால் இது கீர்த்தனம்தான். இன்னும் ஸரியாய்ச் சொன்னால், ‘க்ருதி’தான், ‘தரு’ இல்லை.

அந்த இரண்டு சரணங்களைச் சொல்லப் போனால் திருவாதிரைக்காரரைப் பற்றிய பாட்டைச் சொல்ல நேரம் இருக்காது. இப்பவே ரொம்ப நேரமாகி விட்டது. அதனால் தூக்கக்காரன் ஸமாசாரத்துக்கு மங்களம் பாடிவிட்டு, அந்த ஆட்டக்காரன் ஸமாசாரத்துக்குப் போகிறேன்!