அருணாசலக் கவிராயரும் ‘ராம நாடக’மும் அந்தப் பாட்டைப் போட்டவர் அருணாசலக் கவிராயர் ராமர் விஷயமான இலக்கியம் என்று தமிழ் நாட்டில் எடுத்துக் கொண்டால் கம

அருணாசலக் கவிராயரும் ‘ராம நாடக’மும்

அந்தப் பாட்டைப் போட்டவர் அருணாசலக் கவிராயர். ராமர் விஷயமான இலக்கியம் என்று தமிழ் நாட்டில் எடுத்துக் கொண்டால் கம்ப ராமாயணத்துக்கு அடுத்தபடியாக அவருடைய ‘ராமநாடகம்’ தான் பிரஸித்தம். பிரஸித்தம் என்று புகழ்பெற்றிருப்பதில் இப்படி இரண்டாவது ஸ்தானம் என்றால், ஜனங்களின் வாயிலே புரண்டு வருகிறதிலேயோ அதற்கே கம்பராமாயணத்தை விடவும் முன் ஸ்தானம், முதல் ஸ்தானம்! ஏனென்றால் கம்பராமாயணம் எல்லாப் பொது மக்களுக்கும் புரியாததாகக் கால வித்தியாஸத்தால் ஆகி, இப்போது புலவர் மொழிக் காவியம் என்பதாக ஆகிவிட்டது. அருணாசலக் கவிராயர் இரண்டே நூற்றாண்டு முன்னாடிதான் இருந்தவர் என்பதாலும் – பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் பிறந்து எழுபது எண்பது வயசு ஜீவித்தவர் அவர்*; அதனாலும் – அவர் பேச்சு மொழி, பழமொழி, வசன்ம் எல்லாம் சேர்த்து, அதோடு ரொம்ப முக்யமாக ராக தாளங்கள் போட்டுப் பாடும்படியான கீர்த்தனங்களாக, மொத்தத்தில் ஸர்வ ஜன ரஞ்ஜகமாக அந்த ராம நாடகத்தைப் பண்ணியிருப்பதாலும் அதுவே ஜனங்களின் வாய்ப் புழக்கத்திற்கு ஜாஸ்தியாக வந்து விட்டது. ‘ராம நாடகம்’ என்பதாக அது இருப்பதும் ஸர்வ ஜன வசீகரத்திற்கு இன்னொரு காரணம். அதிலே ராமாயணக் கதை பூராவையும் சொல்லிக் கொண்டு போகும்போது கவி தன் வாய்மொழியாக மட்டும் அவசியமான அளவுக்கே விருத்தமாகவும் பாட்டாகவும் சொல்வது, அதைவிட ஜாஸ்தியாக அதிலே வருகிற பாத்திரங்களின் வசனங்களாகவே பாட்டுக்களின் மூலம் சொல்வது என்று ரூபம் பண்ணியிருக்கிறதால் அது நாடகமாகவே நடிப்பதற்கு ஏற்றதாக இருக்கிறது. அதிலும் opera என்கிற ஸங்கீத நாடகமாக மாத்திரமில்லாமல் நாட்டிய நாடகம், Dance-Drama என்று சொல்கிறார்களே அப்படி! அந்தப் பாட்டுக்களை நாட்டியத்துக்கு ஏற்ற மாதிரியே அவர் உசிதமான வார்த்தைகளையும் ரஸபாவங்களையும் கலந்து பண்ணியிருக்கிறார். இப்படியெல்லாம் அந்த நூல் இருப்பதால் பொது ஜனங்களிலிருந்து ஸங்கீத வித்வான்கள் வரை பலபேரும் பாடியும், கதாகாலக்ஷேபக்காரர்கள் கையாண்டும், ஸதிர்க் கச்சேரி ஸ்திரீகள் ஆடியும், நாட்ய-நாடகமாக அப்படிப் பல பெண்டுகள் சேர்ந்து நடித்துக் காட்டியும் பல தினுஸிலே அது பரவி விட்டது.

கீர்த்தனை என்று அந்தப் பாட்டுக்களைச் சொன்னாலும் – ’ராம நாடகக் கீர்த்தனைகள்’  என்றே அந்த ‘ஒர்க்’குக்குப் பெயர் சொல்வதுண்டு; அப்படிச் சொன்னாலும் – அந்தப் பாட்டுக்கள் குறிப்பாக ‘தரு’ (daru) என்ற பாடல் வகையைச் சேர்ந்ததேயாகும். பல பாட்டுக்களைத் தொடர்ச்சியாக அமைத்து ஒரு கதையைச் சொல்லிக் கொண்டு போகிறபோது அந்தப் பாட்டுக்கு ‘தரு’ என்றே தனிப்பெயர் கொடுத்திருக்கிறது.

அருணாசலக் கவிராயர் நான் சொல்லி வந்த சைவ-வைஷ்ணவ ஸமரஸத்தைக் காட்டுபவராக இருப்பதும் ஒரு விசேஷம்! அவருடைய பெயரே, விஷ்ணு அவதாரமான ராமர் கதையைச் சொன்ன அவர் சைவர் என்று காட்டுகிறது. ‘நீறுபூசி வேளாளர்’ என்று விபூதியிட்டுக் கொள்வதை வைத்தே பெயர் ஏற்பட்ட ஸமூஹத்திலே பிறந்தவரவர். ஒரு காலத்தில் ஜைனர்களாக இருந்து அப்புறம் ஹிந்து மதத்திற்கு, அதிலே சைவ மரபுக்கு வந்தவர்களின் ஸமூஹத்துக்கு அப்படிப் பேர். தஞ்சாவூர் ஜில்லா தில்லையாடியில் இருந்த அந்தக் குடிகளில் ஒன்றிலே பிறந்தவரவர். கல்யாணமான பிறகு சீர்காழிக்கு வந்து அங்கேயே கடைசி வரை இருந்தார். அதனால் அவரைச் சீர்காழிக் கவிராயர் என்றே சொல்வதாக ஆயிற்று.

சைவக் குடும்பத்திலே பிறந்த அவர் படித்ததும் – தமிழ், ஸம்ஸ்கிருதம் இரண்டிலும் அவர் நிரம்பவே படித்திருக்கிறார்; அப்படிப் படித்ததெல்லாமும் – சைவ மடமான தர்மபுர ஆதீனத்தில்தான். ஆனாலும், சைவமா, வைஷ்ணவமா என்று பேதம் பாராட்டாத அவருக்கு ராம கதையிலேயே ஒரு தனி ருசி இருந்தது. அதனாலேயே இப்படித் தம்முடைய காவிய ஸ்ருஷ்டியை உண்டாக்கினார்.

அவர் ஸங்கீதத்தில் அவ்வளவாக வித்வத் பெற்றிருந்தவரில்லை. அதனால் பாட்டுக்கள் மட்டுமே, ஓரளவுக்குச் சந்தத்துக்கு அநுகுணமான தாள அமைப்போடு அவர் போட்டுக் கொடுத்தார். அவற்றுக்கு ராகம் போட்டு, தாளத்தையும் நன்றாக ஸரிப் பண்ணிக் கொடுத்தது கோதண்டராமையர், வேங்கடராமையர் என்ற, ராமன் பேர் கொண்டே, இரண்டு ஸங்கீத வித்வான்கள். அவர்கள் சீர்காழிக்குக் கிட்டேயுள்ள சட்டநாதபுரத்தைச் சேர்ந்தவர்கள். கவிராயரிடம் தமிழ் கற்றுக் கொண்ட மாணாக்கர்கள்….