கிறிஸ்துவும் சிவ-விஷ்ணுக்களும் அந்த இரண்டுக்கும் நடுவிலே இன்றைக்கு கிறிஸ்துமஸ்* அது லோகம் பூராவிலும் ரொம்பப் பேர் மதாநுஷ்டான தினமாகவோ, அல்லது ‘ஹாலி

கிறிஸ்துவும் சிவ-விஷ்ணுக்களும்

அந்த இரண்டுக்கும் நடுவிலே இன்றைக்கு கிறிஸ்துமஸ்*. அது லோகம் பூராவிலும் ரொம்பப் பேர் மதாநுஷ்டான தினமாகவோ, அல்லது ‘ஹாலிடே’ உல்லாஸமாகவோ – ‘ஹோலிடே’யாகவோ, வெறும் ‘ஹாலிடே’யாகவோ – கொண்டாடும் நாளாக இருக்கிறது. இதன் காரண புருஷரையும் நம்மைச் சேர்ந்தவராக, அதிலும் தம்முடைய பேராலேயே நான் சொன்ன அந்த சிவ-விஷ்ணு அபேதத்தைக் காட்டுகிறவராக, சொல்லிக் கொள்ளலாமோ என்று தோன்றுகிறது!

  • உரை நிகழ்ந்தது 1966-ல் வைகுண்ட ஏகாதசியான டிஸம்பர் 23-க்கும் திருவாதிரையான அம்மாத 27/28க்கும் இடையிலுள்ள 25-ந்தேதி என்று வாசகருக்கு மீண்டும் நினைவூட்டுகிறோம்.

அவர் பெயர் என்ன? ஜீஸஸ் க்ரைஸ்ட்’ என்கிறோம். அது ஜெர்மானிக் என்றும் Teutonic என்றும் சொல்கிற பாஷா ‘க்ரூப்’பைச் சேர்ந்த ஜெர்மன் பாஷை, இங்கிலீஷ், டட்ச், இன்னும் ஸ்காண்டினேவியன் பாஷைகள் என்பதாக நார்வே, ஸ்வீடன், டென்மார்க் முதலான தேசங்களில் பேசப்படும் பாஷைகள் ஆகியவற்றில் அவருக்கு ஏற்பட்டிருக்கிற பெயர்தான். அவருக்கு மூலத்தில் ஹீப்ருக்களின் பாஷையில் என்ன பெயரோ அதுவே – ஸம்ஸ்க்ருத ‘ச்ராவணீ’ தமிழ் ‘ஆவணி’யாக உருமாறின மாதிரி – இந்த பாஷைகளில் ஜீஸஸ் என்று ஆகியிருக்கிறது.

அவர் இந்த பாஷைகள் வழங்குகிற ஐரோப்பாவைச் சேர்ந்தவரேயில்லை. நம்முடைய ஆசியாக் கண்டத்துக்காரர்தான் அவர். அவருடைய தாய்பாஷை அரமீயன் என்கிறது. அது ஹீப்ருக்களின் பாஷைகளான ஸெமிடிக் க்ரூப்பைச் சேர்ந்த ஒரு பாஷையே. அதிலே அவருக்கு வைத்த பெயர் ‘யீஷுவ (Yeshua) என்கிறதே! அந்த final ’வ’வை ‘அ’ மாதிரி பட்டும் படாமலும் சொல்ல வேண்டும். அதுதான் மற்ற ஐரோப்பிய பாஷைகளில் ‘ஜோஷுவா’ என்றும் ’ஜீஸஸ்’  என்றும் ஆயிற்று.

‘ய’கர வரிசை ‘ஜ’கர வரிசையாவது எல்லா இடத்திலேயும் உண்டு. வேதத்திலேயே மற்ற சாகைகளில் (கிளைப் பிரிவுகளில்) ‘ய’ என்று வருவது வடதேசத்தில் இப்போதும் அநுஷ்டானத்திலிருக்கிற சுக்லயஜுர் வேதத்தின் மாத்யந்தின சாகையில் ‘ஜ’ என்றுதான் வரும்…. யமுனாவை ஜமுனா என்கிறார்கள். யந்த்ரம் என்பதை ஜந்தர் என்கிறார்கள். தமிழிலே ஸம்ஸ்க்ருத ‘ஜ’வை ‘ய’ ஆக்குவது ஸஹஜம். வேடிக்கையாக இதற்கு ஒரு ‘கான்வெர்ஸ்’! ஸம்ஸ்க்ருதத்தில் ‘யாமம்’ என்றே இருப்பதை நாம் ‘ஜாமம்’ என்கிறோம்! எதற்குச் சொல்ல வந்தேன் என்றால், ‘யீஷுவ’வின் ‘யீ’தான் ‘ஜீஸ’ஸில் ‘ஜீ’யாகியிருக்கிறது. அந்த ‘ஜீ’யை நாம் மறுபடி ‘ய’காரப்படுத்தி, ஆனால் கொஞ்சம் வித்யாஸமாக, ‘யேசு’ என்கிறோம்.

மூல ‘யீஷுஅ’ நம்முடைய ‘ஈச’ தான், அதாவது சிவ நாமாதான் என்று வைத்துக் கொள்ளலாமே என்று தோன்றுகிறது.

அப்படிச் சொன்னால் நம்மவர்கள், அந்த மதஸ்தர்கள் இரண்டு பேரிலுமே யாராவது அபிப்ராய பேதமாகச் சொல்வார்களோ, என்னவோ? பேதம் வேண்டாம் என்றுதானே சொல்லிக் கொண்டிருக்கிறேன்? ஆனபடியால் வைத்துக் கொள்ளலாமே என்றில்லாமல் வைத்துக் கொள்ளலாமோ என்று தோன்றுகிறது என்று வேண்டுமானால் திருத்திக் கொள்கிறேன்!

‘ஜீஸஸ் க்ரைஸ்ட்’டில் ‘ஜீஸ’ஸை ‘ஈச’னாகச் சொல்லலாமோ என்று!

‘க்ரைஸ்ட்’டுக்கு வருகிறேன். அது முழுக்கவும் ஐரோப்பிய பாஷையாகவே ரூபமான (உருவான) வார்த்தைதான். நாம் பட்டாபிஷேகம் என்று விசேஷமாக அபிஷேகம் பண்ணுகிறோமோல்லியோ? மங்கள ஸ்நானம் என்று தலைக்குத் தைலம் வைத்து அப்படிப் பண்ணுகிறது. இதே மாதிரி எல்லா தேசங்களிலும் மத சாஸ்த்ரபூர்வமாகத் தைலம் தேய்ப்பதாக இருந்திருக்கிறது. அப்புறம் ஸ்நானம் பண்ணுவிக்கிறது இல்லை; தைலம் தேய்த்து மட்டும் நிறுத்தி விடுவது. கொஞ்சமாகப் பூசுவதால், அதுவே உள்ளே போய் விடும். அதற்கு ‘அனாயிண்ட்’ பண்ணுவதென்பது பெயர். ஈச்வரனே அந்த மாதிரிச் சில பேரை லோகோத்தாரணம் பண்ணுவதற்காக ‘அனாயிண்ட்’ பண்ணி, அதாவது பட்டாபிஷேகம் பண்ணி, ‘மெஸையா’ (Messiah) என்று அனுப்புவதாகச் சொல்வார்கள். ஹீப்ரு ‘மேஷியா’ இங்கிலீஷில் ‘மெஸையா’ ஆயிற்று. அதற்கே ஐரோப்பிய பாஷையான க்ரீக் (Greek)-ல் இருக்கிற பெயர் ‘க்ரைஸ் டோஸ்’ என்பது. அதன் அடியாகத்தான் இங்கிலீஷ் முதலான பாஷைகளில் ‘க்ரைஸ்ட்’ என்ற வார்த்தை ஏற்பட்டது. ஜீவ ஸமூஹ உத்தாரணத்துக்கென்றே ஈச்வரன் அனாயிண்ட் பண்ணி அனுப்பினவரே ஜீஸஸ் என்கிற நம்பிக்கையுள்ள மதஸ்தர்கள் அவரொருத்தரையே குறிப்பாக அப்படிச் சொல்வதாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

‘ஜீஸ’ஸுக்கு ‘ஈச’ ஸம்பந்தம் காட்டின மாதிரி இந்த ‘க்ரைஸ்டு’க்கு க்ருஷ்ண ஸம்பந்தம் காட்டினாலென்ன என்று தோன்றுகிறது!

க்ருஷ்ணனை நாம் கிஷ்டன், கிட்டன், கிருட்டிணன் என்றெல்லாம் சொல்கிறோமோ இல்லியோ? இந்த மாதிரி ‘க்ரிஸ்டன்’ என்றும்தான் சொல்லலாம். முடிவிலே சொல்லும் ‘அன்’ விகுதி தமிழில்தான் உண்டு. நாம் ‘ஈச்வரன்’ என்பது வடக்கத்திக்காரர்களுக்கு ‘ஈச்வர்’தான்; நம் சங்கரன், ராமன் எல்லாமே சங்கர், ராம் என்றிப்படித் தான்! வர வர இங்கேயும் அதுவே ஃபாஷனாகி வருகிறது… அது இருக்கட்டும்…. ‘அன்’ விகுதி போய்விட்டால் க்ரிஸ்டன் ஆன க்ருஷ்ணன் என்ன ஆவான்? ‘க்ரிஸ்ட்’ என்று தானே ஆவான்? ‘சிவ’ ஸம்பந்தமானது ‘சைவம்’, ‘விஷ்ணு’ ஸம்பந்தமானது ‘வைஷ்ணவம்’ என்று ஆரம்ப இகாரம் ஐகாரமாகிற மாதிரி ‘க்ரிஸ்ட்’ ஸம்பந்தமானது ‘க்ரைஸ்ட்’ என்றே ஆகும்! அப்படித்தானே?

ஆகக்கூடி, ‘ஜீஸஸ் க்ரைஸ்ட்’ = ‘ஈச க்ருஷ்ணன்’.

(நெடுநேரம் தாமும் சிரித்து உடனிருந்தோரையும் சிரிக்க வைத்து விட்டு ஸ்ரீசரணர் தொடர்கிறார்: ) இப்படியாகத்தானே சிவ-விஷ்ணு அபேதம் காட்டுகிற மாஸத்திலே அந்த இரண்டு பேருக்குமான திருநாள்களுக்கு மத்தியிலே வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையின் காரண புருஷர் தம்முடைய பெயரிலேயே ஈச்வரன் என்று சொல்லப்படும் சிவன், விஷ்ணுவின் பூர்ணாவதாரமான க்ருஷ்ணன் ஆகிய இரண்டு பேரின் பேர்களையும் பேதம் பார்க்காமல் ஒன்று சேர்த்து வைத்துக் கொண்ட மாதிரிக் காட்டுகிறார் என்று ஸமய ஸமரஸத்தை மேலும் கொஞ்சம் நீட்டிப் பார்க்கலாமோ என்று தோன்றிற்று. தோன்றினதைச் சொன்னேன்.