சிவ-விஷ்ணு அபேதம்
காற்று ஆட்டமாக ஆடுகிற புயலுக்கும் ஆதாரமாக ஒரு சாந்த கர்ப்பம், still centre உண்டு. அணுவுக்குள்ளும் ஒரு still centre-ஐச் சுற்றியே மஹா வேக ஆட்டம் நடப்பதாகச் சொல்கிறார்கள். அப்படியே, தனக்கு உள்ளே இருக்கிற ஆடாத அசையாத ஸத்ய ஸ்திதியையே அந்த ஆட்டக்காரன் வெளியிலே ஞானாகாசமாகவும், தூக்கக்காரன் தன்னுடைய மௌன நித்திரையாகவும் தெரிவிக்கிறார்கள்.
‘கோயில்’ என்றே சைவர்கள் சொல்வது ஆட்டக்காரனின் சிதம்பரத்தைத்தான். வைஷ்ணவர்கள் ‘கோயில்’ என்று மட்டும் சொன்னால் அது தூக்கக்காரனின் ஸ்ரீரங்கம்தான்.
இரண்டு இடத்திலும் ‘டான்ஸ் தியேட்டர்’ என்கிற அர்த்தம் கொடுக்கும் ‘ஸபை’ என்றும் ‘ரங்கம்’ என்றும் தான் அவர்களுடைய ஸந்நிதிகளுக்குத் தனிப்பெயரும் கொடுத்திருக்கிறார்கள்.
நம்முடைய பூர்விகர்கள் அந்த இரண்டு பேரும் ஒருத்தனேதான் என்று நன்றாகத் தெரிந்து கொண்டிருந்தார்கள் என்பதையே இது காட்டுகிறது.
அந்த இரண்டு பேருக்கும் விசேஷமான திருநாள்கள் இந்த தநுர் மாஸத்திலேயேதான் வருகிறது.
இரண்டு பேருக்குமான திருப்பாவை – திருவெம்பாவைப் பாராயணமும் இந்த மாஸத்துக்கென்றே ஏற்பட்டிருக்கிறது.
சிவ-விஷ்ணு அபேதத்தைப் போக்கி ஐக்கியத்தை இப்படிக் காட்டும் பெரிய சிறப்பால்தான் தநுர்மாஸத்திற்கு இத்தனை விசேஷம், ‘மாஸானாம் மார்க்கசீர்ஷோ (அ)ஹம்’ – ’மாஸங்களுக்குள்ளே நான் மார்கழியாக இருக்கிறேன்’ என்று பகவான் கூறும்படியான தனிச் சிறப்பு* ஏற்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.
*கீதை – 10.35