பாண்டுரங்கன் இன்னொரு அர்த்தம் கலர், வர்ணம் என்பது தமிழ் தேசத்திலே ஸ்ரீரங்கநாதன் மாதிரி மஹாராஷ்டிராவிலே பாண்டுரங்கன்தான் வைஷ்ணவமான பிரதான மூர்த்தி

பாண்டுரங்கன்

இன்னொரு அர்த்தம் கலர், வர்ணம் என்பது. தமிழ் தேசத்திலே ஸ்ரீரங்கநாதன் மாதிரி மஹாராஷ்டிராவிலே பாண்டுரங்கன்தான் வைஷ்ணவமான பிரதான மூர்த்தி. அங்கே ‘ரங்க’ என்கிறது கலர்தான். பாண்டு என்றால் வெள்ளை. பாண்டவர்களின் அப்பாவான பாண்டுவுக்கு அந்த ‘வெள்ளைக்கார’ப் பேர்தான்! அர்ஜுனன் என்றாலும் வெள்ளைக்காரந்தான்! க்ருஷ்ணன் என்றால் கறுப்பன். இந்தக் கறுப்பனும் அந்த வெள்ளைக்காரனும் தான் அத்தனை அன்யோன்யம்! அந்தக் கறுப்பனே தன்னுடைய மஹா மாயாவித்தனத்திலே வெளுப்பவனாக இருந்த அவஸரம்தான் – திருக்கோலம்தான் – பாண்டுரங்கன்.

இப்போது கோலம் என்று ஒரு வார்த்தை சொன்னேன். இழைக்கோலம், மாவுக் கோலம் என்றும் போடுகிறோம். அதற்குப் பேரும் ரங்கவல்லிதான். பூர்வத்திலே கொடி கொடியாக டிஸைன்கள் கலர்க் கலர் மாவுகளில் போட்டு வந்தார்கள். இப்போதும் அந்த வழக்கம் இல்லாமலில்லை. அந்த ‘கலர்க்கொடி’தான் ‘ரங்கவல்லி’. ‘ரங்கோலி’ என்று பேச்சில் இருக்கிறதே அது…. கும்பகோணத்தில் கோமளவல்லி, திருவல்லிக்கேணியில் வேதவல்லி என்கிற மாதிரி, கோவில்களில் மஹா லக்ஷ்மிக்கு ‘வல்லி’ப் பேரே சொல்லும் வழக்கப்படி ஸ்ரீரங்கத்தில் தாயாராயிருக்கும் ரங்கநாயகியையும் ரங்கவல்லி என்பார்கள்.

கறுப்பு ஸ்வாமி வெள்ளைப் பாண்டுரங்கனான கதை என்ன என்று அங்கேயுள்ள ஸ்தல புராணங்களில் எதிலும் எனக்குத் தெரிந்தவரையில் இல்லை. ‘ரிஸர்ச்’காரர்களானால், ஆதியிலே இப்போது பண்டரிபுரம், பண்டர்பூர் என்கிற இடத்துக்குப் பாண்டர்கே என்று பேர் இருந்ததாகவும், வார்த்தைகள் எப்படியெப்படியோ திரிந்து ஏற்பட்ட ஊர்ப் பெயர்களுக்கு அர்த்தம் சொல்லிக் கொண்டிருக்க முடியாது என்றும், பாண்டர்கே கோவிலிலிருக்கிறவனை, அந்தப் பேரை ஸம்ஸ்கிருதம் பண்ணி ‘பாண்டுரங்கன்’ என்று சொல்லிவிட்டார்கள் என்றும் சொல்கிறார்கள். எனக்கென்னவோ அவர்கள் தலைகாலாக மாற்றிப் போட்டுச் சொல்லுவதாகவே தோன்றுகிறது!

(கறுப்பன் எப்படி வெளுப்புக்காரனானான் என்பதற்கான) கதை அகப்படாவிட்டாலும் அதிலே பெரிய தத்வார்த்தமே தெரிகிறது. மஹா மாயமாகவே அவன் மஹா ஞானமும்கூடக் கொடுப்பது தெரிகிறது! கறுப்பு-வெளுப்பு இரண்டும் ஒன்றுதான் என்கிற அத்வைத ஞானம்! பொது ஜனங்களுடைய ராத்ரிக் காலம் ஞானிக்குப் பகல் வேளை, ஞானியுடைய ராத்ரிக் காலம் பொது ஜனங்களுக்குப் பகல் வேளை என்று கீதையிலே அவனே சொல்லியிருக்கிறான்.1 பரமாத்மா தெரியாத இருட்டிலே ஜனங்கள் லோகத்தை மட்டும் நல்ல வெளிச்சமான பகலாகப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்; இந்த லோகம் தெரியாமல் இருட்டிப் போய்விட்ட அநுபூதி ஸ்திதியில் ஞானி பரமாத்மாவையே அநுபவித்துக் கொண்டிருக்கிறான் என்று அர்த்தம். நம்முடைய அந்த மாயத்ருஷ்டிக்கு இருட்டின் கலராகத் தெரிகிற கறுப்பன் வாஸ்தவத்தில் பகல் காலத்தின் வெள்ளை வெளிச்சமாக ஞானி அநுபவிக்கிற பரமாத்மாவே என்று காட்டத்தான் பாண்டுரங்கனாக இருக்கிறான்.

    • கீதை 2.69