தூக்கத்திலேயே உலகை நடத்துவது ’அது ஸரி, ஸபை கூட்டி டான்ஸ் ஆடுவது பொருத்தம் ஸபை கூட்டித் தூங்குவார்களா? ஊர்ச் சத்தம் இல்லாமல் ஏகாந்தமாக அல்லவா தூங்குவ

தூக்கத்திலேயே உலகை நடத்துவது

’அது ஸரி, ஸபை கூட்டி டான்ஸ் ஆடுவது பொருத்தம். ஸபை கூட்டித் தூங்குவார்களா? ஊர்ச் சத்தம் இல்லாமல் ஏகாந்தமாக அல்லவா தூங்குவார்கள்?’ என்றால், அதுதான் வேடிக்கையிலேயும் வேடிக்கை என்றது! இதைப் பண்ணுகிறவனை மஹா மாயன், மஹா மாயன் என்றே சொல்கிறது! பண்ணுகிற அத்தனையும் ஸாதாரண மாய வேடிக்கையாக இல்லாமல், அஸாதாரணமான வேடிக்கையிலும் வேடிக்கையாகப் பண்ணுகிறவன் அவன்! ‘ஏன், என்ன, எப்படி?’ கேட்டுப் புண்யமில்லை! அதனால் களிக்காரன் களிக்கூத்தாடிக் கொண்டே பண்ணும் ப்ரபஞ்ச நிர்வாகத்தை இந்தப் பட்டினிக்காரன் தூங்கிக் கொண்டே பண்ணி விடுவான்!...

‘களிக்கூத்து’ என்றேன். மலையாள பாஷை தமிழிலிருந்தே பிறந்தது; இன்றைக்கும் தமிழைவிட ஆதிகாலத் தமிழ்பாஷை வழக்குகள் பலவற்றைக் கொண்டதாக அந்த பாஷை இருக்கிறது. அந்த பாஷையில் டான்ஸுக்கே ‘களி’ என்றுதான் பெயர்! ‘கதகளி’ என்கிறோமே அது ‘கதை’ ப்ளஸ் ‘களி’, அதாவது ஒரு கதையோடு சேர்ந்த – ஒரு கதையை நடித்துக் காட்டுகிற – டான்ஸ்தான்! ‘ஆட்ட கதா’ என்றுகூட அதற்கு இன்னொரு பேர் உண்டு. இந்தப் பேரிலே டான்ஸ் முதலிலேயும், கதை பின்னாலேயும் வருகிறது. அது இருக்கட்டும்….

மாயக்காரன்! ‘மாயோன்’ என்றே பழந்தமிழிலக்கியத்தில் அவனைச் சொல்லியிருக்கிறது. ஆனால் அதற்கு ஸம்ஸ்க்ருத மூலம் காட்டப் பிரியப்படாத தனித் தமிழ்க்காரர்கள், ‘இது மாஜிக், வேடிக்கை என்கிற மாயை ஸம்பந்தப்பட்டதில்லை; அவன் கறுப்பு நிறம் என்பதாலேயே ‘மாயோன்’ என்று பேர்’ என்கிறார்கள். கடைசியில் அதுவும் மாஜிக் வேடிக்கையில்தான் கொண்டு விடுவதாக எனக்குத் தோன்றுகிறது. கறுப்பு என்றால் இருட்டு. இருட்டு என்றால் தூக்கம். தூக்கத்திலேயே ப்ரபஞ்சத்தை நிர்வஹிக்கும் மாயம் கோத்துக் கொண்டு போவதாகச் சொல்லலாமோல்லியோ?

‘அது எப்படி, தூக்கத்திலேயே ப்ரபஞ்ச ஸ்ருஷ்டி-ஸ்திதி-ஸம்ஹாராதிகளை நிர்வஹிப்பது?’ என்றால் அந்த மாயப் புதிரை அவிழ்ப்பதாக ஒரு எக்ஸ்ப்ளனேஷன் சொல்கிறேன்: தூங்கினால்தானே கனாக் காண முடியும்? அப்படி ஒரு மாயக் கனாவாகத்தான் தூங்குகிற பெருமானின் சித்தத்தில் இந்த ப்ரபஞ்சம் உண்டாகி நடக்கிறது; இது நிஜமில்லை, நனவு இல்லை, அவனுடைய வேடிக்கை நினைவான கனவுதான் என்ற பரம தாத்பர்யந்தான் அந்த ‘எக்ஸ்ப்ளனேஷன்’.

அதை ஸபையிலே பண்ணிக் காட்டுகிறான். ரங்கம் என்றால் நாடக ஸபைதான். தியேட்டர் என்கிறோமே, அது. அதுதான் தமிழ் ‘அரங்கம்’. இன்றைக்கும் டான்ஸ் ‘அரங்கேற்றம்’ என்றுதானே சொல்கிறோம்?