இரண்டு ராஜாக்கள்: ஸர்வலோக ராஜாவின் இரண்டு வேஷங்கள் முந்தாநாள் வைகுண்ட ஏகாதசி போச்சு நாளன்றைக்கு ராத்திரி முடிந்து மறுநாள் பிறக்கிறதற்கு முன்னாடிய

இரண்டு ராஜாக்கள்: ஸர்வலோக ராஜாவின் இரண்டு வேஷங்கள்

முந்தாநாள் வைகுண்ட ஏகாதசி போச்சு. நாளன்றைக்கு ராத்திரி முடிந்து மறுநாள் பிறக்கிறதற்கு முன்னாடியே ஆர்த்ராபிஷேகம் – திருவாதிரை அபிஷேகம் – நடந்துவிடும்.2 ஒன்று பட்டினி நாள்; மற்றது ஏழு ‘தான்’ கூட்டோடு களி சாப்பிட்டேயாக வேண்டிய நாள்! ‘திருவாதிரை ஒரு வாய் களி தின்னாதவர் நரகக் குளி’ என்று பயமுறுத்தியே களி சாப்பிடவைக்கிற நாள். ‘களி’க்கு எதுகைக்காகக் ‘குழி’யைக் ‘குளி’யாக்கியிருக்கிறது!

  • இவ்வுரையை ‘தெய்வ விஷயம்’ என்ற பிரிவில் சேர்க்க இடமுண்டாயினும் இதில் இசைத் துறை குறித்தும் கருத்துக்கள் இருப்பதால் ‘பண்பாடு’ எனும் பிரிவில் சேர்த்திருக்கிறது.
  • இது 1966 டிஸம்பர் 25-ந் தேதி ஸ்ரீசரணர் ஆந்திர மாநிலப் புரொதத்தூரில் ஓர் உரையாடலின்போது கூறியவற்றின் தொகுப்பு. அம்மாதம் 23-ம் தேதி வைகுண்ட ஏகாதசியும் 27/28-ந் தேதி திருவாதிரை அபிஷேக/தரிசனங்களும் நிகழ்ந்தன.

ஒன்று தூக்கக்காரன் விரதம், மற்றது ஆட்டக்காரன் பண்டிகை. ஆனால் இரண்டு பேரும் ஒரே மாதிரி ராஜாக்கள்-ரங்கராஜா, நடராஜா.

ராஜா என்றால் ராஜஸபை, ராஜஸதஸ் என்று தர்பார் இருக்கணுமோல்லியோ? அப்படித்தான் அந்த இரண்டு பேருக்கும் அந்த அம்சமும் ஒற்றுமையாக இருக்கிறது. ரங்கம் என்றால் ஸபைதான். சிதம்பரத்திலோ ஸபை, ஸபை என்றே ஸந்நிதியைச் சொல்கிறது – சித்ஸபை, கனகஸபை என்று. விஷயம் தெரிந்தவர்கள் அந்த ஆட்டக்காரன் ஸாக்ஷாத்தாக ஆடுகிற அந்த இடம் மட்டுமே சித்ஸபை என்றும், அந்த வாசல்படிக்கு அடுத்தாற்போல பக்தர்கள் நிற்கிற இடமே கனக ஸபை என்றும் சொல்வார்கள். எப்படியானாலும் ஸபைதான். இந்த இரண்டு ஸபைகளிலும் இருக்கிற இரண்டு ராஜாக்களும் ஒரே மாதிரி தெற்குப் பார்த்தே இருப்பதிலும் ஒற்றுமை!

இன்னொரு ஒற்றுமை, இந்த இரண்டு ராஜாக்களுமே தங்கள் ராஜ்யப் பிரஜைகளுக்குத் தண்டனை கொடுக்கிறதற்கோ, மற்ற ராஜ்யங்களோடு சண்டை போடுவதற்கோ ஸபை கூட்டி தர்பார் நடத்துகிறவர்களில்லை! இது ‘பொலிடிகல்’ – ராஜாங்க – அரசாங்க ஸபையே இல்லை! ‘ராஜ அங்கமான ஸபையேயில்லாத ராஜாக்களா? வேடிக்கையாயிருக்கே?” என்றால் வேடிக்கையேதான்!

ப்ரபஞ்சம் பூராவையும், ப்ரபஞ்ச வாழ்விலே நடக்கிற எல்லாவற்றையும் – அதிலிருந்து தப்பித்துக் கொண்டு மோக்ஷத்திற்குப் போய்ச் சேர்வது பர்யந்தம் ஸகலத்தையும் – வேடிக்கையாகவே நடத்தி வைக்கிற ஸர்வலோக ராஜா தான் இப்படி இரண்டு வேஷம் போட்டுக் கொண்டிருப்பது! ஒருத்தன் வேடிக்கை ஆட்டமாகவே ஆடி அதை நடத்தி விடுகிறான் – நாளன்றைக்குக் களி தின்ன வைத்துப் பண்டிகை கொண்டாட வைக்கப் போகிறானே, அவன்! ஆமாம், அவனுடையது தண்டனை தரும் ஸபையில்லை, நடன ஸபை! ம்யூஸிக் ஸபா, டான்ஸ் ஸபா என்றே சொல்கிறோமே, அந்த மாதிரி ஸபை! முந்தா நாள் பட்டினி போட வைத்தவனுடைய ஸபை? அது நான் சொன்ன வேடிக்கையிலேயும் இன்னும் வேடிக்கை! சயனக்ருஹம் – bedroom –தான் இங்கே ஸபை! அங்கே ஒரே ஆட்டமான ஆட்டமென்றால், இங்கே ஸரியான தூக்கம்! ஆட்டமாக ஆடினால், களி, கிளி சாப்பிட்டால்தானே முடியும்? அப்படி அங்கே! தூக்கத்துக்கு ஏர்வையாக (ஏற்றதாக) இங்கே பட்டினி!