இம்மை மறுமை இரண்டும் அருள்பவர் முடிவாக, “போக மோக்ஷ ப்ரதாத்ரே”: ஸகல புவன போகங்களையும் அநுபவிக்கும் போக்தா வாஸ்தவத்தில் அவர்தான

இம்மை மறுமை இரண்டும் அருள்பவர்

முடிவாக,

போக மோக்ஷ ப்ரதாத்ரே”:

ஸகல புவன போகங்களையும் அநுபவிக்கும் போக்தா வாஸ்தவத்தில் அவர்தான். ஆனால் நாமும் இதில் செல்வம், ஸந்தானம், பதவி, கீர்த்தி என்றெல்லாம் பல போகங்களை அநுபவிப்பதாக நாடகம் நடத்திக் காட்டுகிறார். லோக நாடகத்தில் நாம் விரும்பும் போகங்களை – ஸௌக்யங்களை – அளிக்கிறார். ‘தாதா’ – அளிப்பவர், ‘ப்ரதாதா’ – சிறப்பாக அளிப்பவர். அதுவே நாலாம் வேற்றுமையில் ‘ப்ரதாத்ரே’.

நாடகம் நடக்கிற மட்டும் நன்றாக நடக்கணும்தான். அதற்கான போகங்களை அருள்வதும் ஸரிதான். ஆனால் எப்போதும் நாம் நாடக பாத்ரமாக வேஷத்திலேயே இருப்பதென்றால் நம்மைப் போல அசடு இல்லை என்று தான் அர்த்தம். வேஷம் போய் விட்டால் நாம் நிஜத்தில் எந்த நாமாக இருப்போமோ அந்த ஸத்ய நிலையை அடைய வேண்டாமா? வேஷம் போட்டுக் காட்டும் மனஸ் அழிந்து போய் ஆத்மா மட்டுமாக இருப்பதுதான் அந்த நிலை. ஸம்ஸாரப் பிடுங்கலிலிருந்து விடுபட்ட மோக்ஷம் என்னும் ஸதானந்த நிலை. அந்த நிலையையும் அவரே ‘குருகுஹ’னாக, ‘தத்வோபதேச கர்த்தா’வாக, ‘அஜ்ஞான த்வாந்த ஸவிதா’வாக அள்ளிக் கொடுக்கிறார் – அதாவது, மோக்ஷப்ரதாதாவாகவும் இருக்கிறார்.

தனலக்ஷ்மியிடமும், ஸந்தான லக்ஷ்மியிடமும் மோக்ஷத்தை வேண்டினால் கிடைக்காது. போகம்தான் கிடைக்கும். தக்ஷிணாமூர்த்தியிடம் போய் போகத்தைக் கேட்டால் கிடைக்காது. அவர் மோக்ஷந்தான் கொடுப்பார். ஸுப்ரஹ்மண்யர் இரண்டும் தருவார். ‘போக மோக்ஷப்ரதாதா’. இம்மை, மறுமை என்ற இரண்டும் தருபவர் அவர். இதற்கு மேலே சொல்ல எதுவுமில்லை. க்ருதியும் அப்படியே பூர்த்தியாகிறது.