ப்ரம்மாவால் தொழப்பட்டவர், ஈசனுக்கு உபதேசித்தவர் ”நத விதாத்ரே”: விதாதா என்றால் ப்ரம்மா ‘வீர நுத’வில் வந்த ‘நுத’வும் இந்த ‘நுத’வும் ஒன்

ப்ரம்மாவால் தொழப்பட்டவர், ஈசனுக்கு உபதேசித்தவர்

”நத விதாத்ரே”:

விதாதா என்றால் ப்ரம்மா. ‘வீர நுத’வில் வந்த ‘நுத’வும் இந்த ‘நுத’வும் ஒன்றேதான். ‘வணங்கப்பட்ட’ என்று அர்த்தம். ஸுப்ரஹ்மண்யரை ப்ரம்மா வணங்கின கதை தெரிந்ததுதான். ஸ்வாமி அவரை ப்ரணவார்த்தம் கேட்க அவர் உளறிக் கொட்டினார். குழந்தை என்ன பண்ணிற்று என்றால் அந்த ஸ்ருஷ்டிகர்த்தாவை ஜெயிலில் போட்டு விட்டு, தானே ஸ்ருஷ்டி பண்ண ஆரம்பித்துவிட்டது! சில க்ஷேத்ரங்களில் ஸுப்ரஹ்மண்ய மூர்த்தியின் கையில் ப்ரம்மாவுக்குரிய ஜபமாலையும் கமண்டலமும் இருக்கும். காஞ்சீபுரம் குமரக் கோட்டத்தில்கூட அப்படித்தான். ப்ரம்மாவின் தொழிலை ஸ்வாமியே நடத்திய அவஸரம் (கோலம்) அது.

அப்புறம் பரமேச்வரன் ப்ரம்மாவுக்காகப் பரிந்து பேசினார். அப்போது, ‘ப்ரம்மா ஸரியாக அர்த்தம் சொல்லவில்லை என்றால் ஸரியான அர்த்தம்தான் என்ன? உனக்குத் தெரியுமானால் சொல்லேன்!” என்றார்.

அதற்கு பாலஸுப்ரஹ்மண்யர், “இப்படிப் பையனை வாத்தியார் கேட்கிற மாதிரிக் கேட்டால் சொல்ல முடியாது. வாத்தியாரிடம் பையன் கேட்கிற மாதிரிக் கேளும், சொல்கிறேன்!” என்று கம்பீரமாகச் சொன்னார்.

மஹாவீரனுக்கும் பிள்ளையிடம் தோற்றுப் போவதென்றால் மட்டும் பெருமையாகவே இருக்குமாம். அப்படி, பரமசிவனும் ஸந்தோஷப்பட்டுக் கொண்டு புத்ரனுக்கே சிஷ்யராகி ப்ரணவோபதேசம் பெற்றுக் கொண்டார். அறிவைச் சம்பாதித்துக் கொள்வதற்கு எத்தனை தாழ்ந்தும் தழைந்தும் போகலாம் என்று லோகத்துக்கு இதிலேயே பாடம்.

ஸுப்ரஹ்மண்யரின் மஹிமை நன்றாகத் தெரிந்துவிட்டது. ப்ரம்மா ஜெயிலிலேயே அவர் இருந்த திக்கை நோக்கி நமஸ்காரம் பண்ணி ரொம்பவும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். ஸ்வாமி அவரை விடுதலை பண்ணிப் பழையபடி ஸ்ருஷ்டி க்ருத்யத்தைக் கொடுத்தார். இந்தக் கதையில்தான் அவர் குறிப்பாக ப்ரம்மாவால் வணங்கப்பட்டு “நத விதாத்ரு” ஆனது.

தேவராஜ ஜாமாத்ரே”:

தேவராஜ ஜாமாதா’ – இந்திரனின் மாப்பிள்ளை. முன்னேயே பார்த்தோம்.