வீரர்கள் தொழும் ஞானி! ”வீரநுத”: ஞானி வேறே, வீரன் வேறே என்பது விஷயம் தெரியாத நிலையில்! நிஜமான ஞானி எதுவாகவும் இருப்பான் – அவன் எல்லாமாக இரு

வீரர்கள் தொழும் ஞானி!

”வீரநுத”:

ஞானி வேறே, வீரன் வேறே என்பது விஷயம் தெரியாத நிலையில்! நிஜமான ஞானி எதுவாகவும் இருப்பான் – அவன் எல்லாமாக இருப்பதால்! உள்ளுக்குள்ளே ஆத்மா ஒன்றைத் தவிர எதுவாகவுமில்லாமல், வெளிக் கார்யத்தில் அந்த ஆத்மாதான் ஸகலமும் ஆனதால் எதுவாக வேண்டுமானாலும் – கத்தியை எடுத்துச் சுற்றுகிற மஹா வீரனாகக்கூட – இருப்பான். கீதை என்று ஞானோபதேசம் செய்யும் போது, “காண்டீவத்தை எடுடா! அம்பைத் தொடுடா!” என்று பகவான் சொல்லியிருக்கிறாரில்லையா? ஸுப்ரஹ்மண்யர் ஞான வீரர். தேவ ஸேனைக்கெல்லாம் கமாண்டர்-இன் – சீஃப். அதனால் வீரர்களால் தொழப்படுபவர். அதுதான் ‘வீர நுத’. ‘நுத’ – தொழப்படுகிற. அவருடைய முக்யமான பரிவாரம் நவ வீரர்கள் என்ற ஒன்பது பேரைக் கொண்டது. வீரபாஹூ, வீரகேஸரி, வீர மஹேந்திரர் என்று ‘வீர’ என்றே பேர் ஆரம்பிக்கிற ஒன்பது மஹாவீரர்கள் அவருடைய அஸிஸ்டெண்டுகள். அதனாலும் ‘வீரநுத’.