பேரஸுரரை வதைத்த வீர பௌருஷம் ”தாரக ஸிம்ஹமுக சூரபத்மாஸுர ஸம்ஹர்த்ரே”: ”தாரகன், ஸிம்ஹமுகன், சூரபத்மன் என்ற அஸுரர்களை ஸம்ஹாரம் பண்ணினவருக்

பேரஸுரரை வதைத்த வீர பௌருஷம்

”தாரக ஸிம்ஹமுக சூரபத்மாஸுர ஸம்ஹர்த்ரே”:

”தாரகன், ஸிம்ஹமுகன், சூரபத்மன் என்ற அஸுரர்களை ஸம்ஹாரம் பண்ணினவருக்கு” – நமஸ்காரம் என்று சேர்த்துக் கொள்ள வேண்டும்.

“ஸுப்ரஹ்மண், லாவண், சரண், அக்ரகண்” என்றெல்லாம் – இதுவரை பாட்டின் பல்லவியிலும் அநுபல்லவியிலும் வந்த வார்த்தைகள் ‘அ’காரத்தில் முடிந்ததால் ‘அப்படிப்பட்டவருக்கு’ என்று நாலாம் வேற்றுமையில் சொல்லும்போது ‘யாய” என்று ஆயிற்று. இப்போது சரணத்தில் வரும் பேர்களில் பெரும்பாலானவை அகாராந்தமாக முடியாமல் ‘ரு’விலே – தமிழில் குற்றியலுகரம் என்று சொல்லும் தேய்ந்த ‘ரு’விலே – முடிகின்றன. முதலில் ‘ஸ்ம்ஹர்த்ரு’, அப்புறம் ‘உபதேசகர்த்ரு’ அப்புறம் ‘ஸவித்ரு’ என்றிப்படி இருக்கின்றன. இவை நாலாம் வேற்றுமையில் ‘ஹர்த்தாய’, ‘கர்த்தாய’ என்றெல்லாம் ஆகாது. ‘ஹர்த்ரே’, ‘கர்த்ரே’ என்றே ஆகும். சரணம் பூராவும் இப்படி ‘த்ரே’, ‘த்ரே’ என்று வரிகள் முடிவதைக் கவனிக்கலாம்.

தாரகன், ஸிம்ஹமுகன், சூரபத்மன் மூன்று பேரும் ஸஹோதரர்கள். தாரகனுக்கு யானை முகம். ஸிம்ஹமுகன் பேரிலிருந்தே சிங்க மூஞ்சி என்று தெரிகிறது. சூரபத்மன் க்ரூரமான அஸுர முகம் படைத்தவன். தென் தேசத்தில் சூரபத்மனைத்தான் அஸுர ராஜனாகவும், ஸ்வாமியின் ப்ரதான சத்ருவாகவும் சொல்கிறோம். சூரஸம்ஹாரம் என்றே உத்ஸவம் பண்ணுகிறோம். ‘வீர, தீர, சூர’ என்று அந்த சூரசப்தமே மஹா வீர்யத்தைக் குறிப்பிடுகிறது. சூரனையும் ஜயித்த மஹா சூரராக ஸ்வாமியை ஸ்தோத்ரம் செய்கிறோம். ஆனால் வடக்கே தாரகாஸுரனைத்தான் அவனுடைய இடத்தில் சொல்கிறார்கள். ‘குமார ஸம்பவ’த்திலும் தாரக வதத்துக்காகவே குமாரஸ்வாமி ஸம்பவித்ததாகத்தான் காளிதாஸர் சொல்லியிருக்கிறார். ஆசார்யாள், ‘புஜங்க’த்திலே ‘த்வயா சூரநாமா ஹதஸ் தாரக: ஸிம்ஹவக்த்ரச்ச” என்று மூன்று பேரையும் சொல்லியிருக்கிறார். ’ஸிம்ஹவக்த்ரன்’ என்றாலும் ‘ஸிம்ஹமுகன்’ தான். தீக்ஷிதரும் தக்ஷிணத்திலுள்ள வழக்கப்படியே – ஸ்காந்த மஹா புராணத்திலும் இப்படித்தானிருக்கிறது – மூன்று பேரையும் சொல்லியிருக்கிறார். மஹாபல பராக்ரமம் படைத்த மூன்று க்ரூர ராக்ஷஸர்களை பால்யத்திலேயே ஹதாஹதம் பண்ணிய வீராதிவீரர் ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமி.

கோடி கோடி மநஸிஜ லாவண்யத்தைச் சொல்லியாச்சு; தீன சரண்யராக, அபீஷ்ட வரதர்களில் அக்ரகண்யராக உள்ள காருண்யத்தைச் சொல்லியாச்சு; மஹா அஸுரர்களையும் ஸம்ஹாரம் பண்ணிய வீர பௌருஷத்தையும் இப்போது சொல்லியாச்சு. அழகு, அருள், ஆற்றல் மூன்றிலேயும் ச்ரேஷ்டமானவரென்று காட்டியாச்சு.